May 22, 2020

கலாநிதி சுக்ரி - இந்தப் பெயரை மொழிபெயர்த்தால், பல பொருள்கள் கிடைக்கும்

கலாநிதி M.A.M.சுக்ரி: இந்தப் பெயரை மொழி பெயர்த்தால் பல பொருள்கள் கிடைக்கும், ஆனால் அவர் மனிதத்துக்கு ஒரு வரை விலக்கணம் என்பது எனக்கு மிக மிகப் பிடித்தது.

உண்மையில் அவரில் இருந்த மற்றவர்களில் காணாத ஓர் அரிய பண்பு; தனது கருத்துக்களை மற்றவர்கள் மீது திணித்து விட முயற்சிக்காமை. அவர் தனது மாணவர்களை தன் சிந்தனையில் புடம் போட விரும்பாத ஒரு சுதந்திர சிந்தனை வாதி; மற்றவர்களது மாற்றுச் சிந்தனைக்கு மதிப்பளித்தது மட்டுமல்ல, மாறாக சுதந்திரமான சிந்தனையாளர்களாக அவர்களை காணவும் அவர் விரும்பினார். 

அவரது மாணவர்களை புத்தி ஜீவிகளாகக் காண அவாவினார். ஜாமிஆ நழீமிய்யாவின் சிந்தனைச் செழிப்பிற்கு ஒரு கால்வாய் கட்டியவராக அவரை நான் பார்க்கின்றேன். ஜாமிஆவில் இருந்த மொத்த எட்டு வருடங்களும் அவரது சிந்தனைச் சமநிலையைத்தான் காட்டுகின்றது. சூபித்துவ சிந்தனைக் செழிப்பு மிக்கவராக காணப்பட்ட அவர், நவீன இஸ்லாமிய இயக்கங்களைப் புறந்தள்ள வில்லை; இந்த விசால சிந்தனையும் அகலப் பார்வையும் அவருக்கிருந்தளவுக்கு வேறு யாருக்கும் இருக்கவில்லை. நவீன இஸ்லாமிய சிந்தனையை இந்த மண்ணுக்கு அறிமுகம் செய்வதில் அவரது மாணவர்கள் அரும் பங்காற்றியுள்ளனர். ஆனால் இந்த மண்ணின் பாரம்பரியமான சூபித்துவ சிந்தனையை அதன் தூய வடிவில் முன்வைக்க அவரது மாணவர்கள் பங்காற்றவில்லை என்பது எனது உணர்வாகும்; ஆனால் இன்னும் காலம் கடந்து விடவில்லை.

நாங்கள் நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்களின் குறுநூற்க்களின்பால் வசீகரிக்கப்பட்டதன் காரணமாக உசாத்துணை நூல்களில் இருந்து தூரமாகி இருந்ததை அவர் அடிக்கடி எச்சரித்த போது அவர் சொன்ன உண்மை விளங்கவில்லை. விளங்கிய போது வாசிக்க நேரமிருக்கவில்லை. என்றாலும் இனியாவது உசாத்துணை நூல்கள் எம் வாசிப்புக்கு உரியனவாக வேண்டும்.

ஞாபகத்திலிருக்கும் இன்னொரு விடயம்; நழீமீக்கள் எந்தவொரு இயக்கத்தையும் சாராது நடுநிலையான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது கலாநிதியவர்களின் மிகத்தெளிவான நிலைப்பாடாகும்; ஆனால் நழீமீக்களில் பலருக்கு அன்று அது விளங்கவில்லை; சிலருக்கு பிந்தியே விளங்கியது; அவர்களில் இந்த அடியேனும் அடக்கம்.

இந்த நாட்டின் முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பு முனையில் கலாநிதியவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து இருக்கிறார்கள். நடுநிலையான புத்திஜீவிகளாக இந்த சமூகத்துக்கு வழிகாட்டவேண்டிய பொறுப்பை அவர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள். 

இன்னும் காலம் கடந்துவிடவில்லை; ஏன், இதுதான் அதற்கான இறுதிச்சந்தர்ப்பமாக் கூட இருக்கலாம். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த நாம் தாயாரா ?

நிச்சயமாக, நாம் மனிதனை மிக அழகிய வடிவமைப்பில் படைத்தோம் என்ற குர்ஆன் வசனதுக்கேற்ப உயரிய மனிதனாக அவர் இருந்தார். அறிவும் அடக்கமும் ஒன்றுசேரப்பெற்ற அவர் என்றும் எம் இதயங்களில் நிறைந்திருப்பார்.

யா அல்லாஹ் இந்த அறிஞரை நீ ஏற்றுக் கொள்வாயாக ! அவரது மண்ணறையை சுவர்க்கத்தின் பூங்காவாக ஆக்கியருள்வாயாக !!
அவரை உயர்ந்த  ஜன்னதுல் பிர்தெளசில் குடியமர்த்துவாயாக!!! அவரைப் போன்ற பல நூறு அறிஞர்களை இந்த மண்ணுக்குத் தந்தருள்வாயாக!!!

ஏ.பீ.எம்.அஷ்ரப்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டங்கள் திணைக்களம்/ வக்ப் சபை
22.05.2020
28 ரமழான் 1441

1 கருத்துரைகள்:

இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் இஸ்லாமிய வளர்ச்சிக்கு பாரம்பரிய அரபு மத்ரசாக்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி நழிமீக்கள் எதிர்மறையான அபிப்பிராயப் போக்கினைக் கொண்டிப்பதை பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றேன்.
ஆனபோதிலும், பணிப்பாளரின் பார்வை இதிலிருந்து மாறுபட்டிருப்பதை சூபித்துவ நிலைசார்ந்த அறிஞ்ஞர் சுக்ரி அவா்கள் பற்றி அவரது புரிதலை அறிகையில், அல்லாஹ் SWT பொருத்தமான ஒருவருக்கே குறித்த பணிப்பாளர் பதவியினை வழங்கி எமக்கு அருள் செய்துள்ளான் என எண்ணத்தோணுகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

Post a Comment