Header Ads



ரமலான் நோன்பு: கொரோனாவுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் கடைப்பிடிப்பது எப்படி?

 - BBC -

வருடத்தின் மற்ற மாதங்களைக் காட்டிலும் இந்த ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்கு வெகு சிறப்புமிக்க ஒரு பெருவிழாவாகக் கருதப்படுகிறது. இந்த ஒரு மாதத்தில் வருடத்தின் மற்ற நாட்களை விட இஸ்லாமியர்கள் வழிபாட்டுத் தளங்களுடன் அதிக தொடர்பு வைத்திருக்கக் கூடிய மாதம். ஐந்து நேரத் தொழுகையில் மற்ற மாதங்களில் வராதவர்கள் கூட இந்த ரமலான் மாதத்தில் தொழுகையைத் தவறவிடாமல் பள்ளி வாசலிற்கு வந்து தொழுகையைச் செய்வது வழக்கம்.

நோன்பு காலம்

நாள் முழுவதும் நோன்பிருந்து, மாலைப் பொழுதில் பள்ளி வாசலில் கூட்டுத்தொழுகைக்குப் பின்னர், அனைவரும் ஒன்றிணைந்து நோன்புக் கஞ்சி பருகி தங்களது நோன்பினை திறப்பது என ஒவ்வொரு நாளும் கடைப்பிடிப்பர். ஆனால், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இந்த 2020-ஆம் ஆண்டிற்கான ரமலான் மாதம் வழக்கத்திற்கு மாறாக இஸ்லாமியர்களுக்கு அமைத்துள்ளது.

ரமலான் நோன்பிற்கு இஸ்லாமியர்களுக்குப் பல கட்டுப்பாடுகளை உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது. அதன்படி, ரமலானையொட்டி பள்ளிவாசலுக்குச் செல்வதைத் தவிர்க்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மிகவும் வயதான முதியவர்கள், இதய நோயாளிகள், மூச்சுத் திணறல் பிரச்சினை உள்ளவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ளவர்களுக்கு எளிதாக கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் ரமலான் நோன்பினை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரமலான் நோன்பினை எப்படிக் கையாளுகின்றனர்?

கொரோனா நோய்த் தொற்று பரவும் சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ரமலான் நோன்பினை இஸ்லாமியர்கள் எப்படிக் கையாளுகின்றனர் என்பது பற்றி புதுச்சேரி மாநில குருமாரான முகமது முபாரக் அவர்களிடம் பிபிசி தமிழ் கேட்டபோது.

 ரமலான் நோன்பு: கொரோனாவுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் கடைப்பிடிப்பது எப்படி?Getty Images
"முழுக்க முழுக்க பள்ளி வாசலில் தொடர்பு வைத்திருக்கக் கூடிய மாதம் இது. அதுமட்டுமில்லாமல் இந்த ரமலான் மாதத்தில் 30 நாட்களும், 24 மணி நேரமும் பள்ளி வாசல் பூட்டாமல் திறந்திருக்கும். ஆனால், தற்போது உலகம் முழுவதும் பள்ளி வாசல் கொரோனா காரணமாகப் பூட்டப்பட்டிருக்கிறது.

பள்ளி வாசலில் எந்தவிதமான வழிபாடுகளும் நடக்கவில்லை. இதுபோன்ற நேரங்களில் எங்களால் பள்ளி வாசலுடன் தொடர்பு வைத்துக்கொள்ளவும், பள்ளி வாசலில் கூட்டுத் தொழுகை நடத்தவும் முடியவில்லை.

இந்த சூழல் எங்களுக்கு வருத்தம் அளித்தாலும் கூட, நாங்கள் இதை நாட்டு மக்களுக்காக, அரசாங்கத்தின் உத்தரவைக் கருதி மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்," என்கிறார் முகமது முபாரக்.

இருப்பிடங்களில் தொழுது கொள்ளுங்கள்

"அதாவது, சல்லு ஃபை பியூட்டிகம் (pray at your homes), சல்லு ஃபை ரிஹாலிகம் (Prayer at your camps) என்ற அரபு வார்த்தையின் பொருளானது உங்களுடைய வீடுகளில் தொழுது கொள்ளுங்கள், உங்களுடைய இருப்பிடங்களில் தொழுது கொள்ளுங்கள் பள்ளிவாசலிற்கு வரவேண்டாம் எங்களுக்கு இவை அனைத்தும் சொல்லப்பட்டிருக்கிறது.

எனவே, பேரிடர் காலங்களில் கடுமையான மழை, புயல், வெள்ளம் போன்ற ஆபத்துகள் ஏற்படும் சூழலிலும், தொற்று வியாதி பரவக்கூடிய இது போன்ற சூழலில் வீடுகளில் தொழுவதற்கு நபிகள் நாயகம் கட்டளையிட்டிருக்கிறார் ," என்றார்.

வயது முதிர்ந்தோர், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களுக்கு ரமலான் நோன்பு தொடர்பாகத் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது எவ்வாறு பின்பற்றப்படுகிறது? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், "கொரோனா நோய்த் தொற்று பரவிக்கொண்டிருக்கிறது. இது போன்ற நேரங்களில் நோன்பு வைப்பதினால் உடல்நிலை பலவீனம் ஆகிவிடும். நோய் எதிர்ப்புத் திறன் குறைந்துவிடும். இதனால் நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடுமே இதைப்போன்று சிலர் கேட்கின்றனர். ஆனால், ரமலான் நோன்பு சட்டத்தில், நோன்பு என்பது அனைவருக்கும் கட்டாயக்கடமை அல்ல.

ஆகவே, இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில், நோய்த்தொற்று ஏற்பட்டுவிடும் என்று நினைப்பவர்கள், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் நிலை முடியாதவர்கள் நோன்பு மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. எனவே, அவர்கள் உடல்நிலை சீரானதும், ரமலான் காலம் முடிந்த பிறகும் கூட தனியாக நோன்பு இருக்கலாம்," எனத் தெரிவித்துள்ளார் முகமது முபாரக்.

ரமலான் மாதங்களில் பள்ளி வாசலிற்குச் சென்று முழு தொழுகை செய்துவந்த சூழலில், கொரோனா எதிரொலியால், பள்ளி வாசலிற்குச் செல்லாமல் வீட்டிலேயே தனித்து நோன்பிருக்கும் சூழல் குறித்து நோன்பு பின்பற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்கர் அலியிடம் கேட்டபோது, "இதுபோன்ற நோய்த் தொற்று காலச் சூழ்நிலையில் உங்களுடைய வீடே போதுமானது எனப் பள்ளிவாசலில் ஜமாத் சார்த்தப் பெரியவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பொதுவாக, ரமலான் காலங்களில் பெரும்பாலான நேரங்களில் வீடுகளில் நோன்பு திறக்கமாட்டோம். பள்ளி வாசலிலும், வேலைக்குச் செல்லும் இடங்களிலும் தான் நோன்பு திறப்போம்.

ஆனால், தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை கருதி அரசின் உத்தரவு மற்றும் பள்ளி வாசல் இமாம்களின் அறிவுறுத்தலின் படி வீடுகளில் தாய், மனைவி, பிள்ளைகளுடன் ஒன்றாகத் தொழுகை செய்து நோன்பினை திறக்கிறோம்," என்கிறார் அஸ்கர் அலி.

"குறிப்பாக, குடும்பத்தினருடன் அதிகமான நேரத்தைப் பங்கிடும் சூழலை இந்த ஊரடங்கு ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைவரிடமும் அதிகமாகப் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

பள்ளி வாசலிற்குச் சென்று கூட்டுத் தொழுகை செய்ய முடியாத சூழல், சொந்தங்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் பகிர்ந்து கொண்டு மாதம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய இந்த நாட்களை எந்த உச்சாகமுமின்றி, தனியாகக் கடக்கும் சூழல் மனதிற்கு வேதனையளிக்கிறது.

இருந்தபோதிலும், சமூக அக்கறையும், மக்களுடைய நலனும் எங்களுக்கு மிக முக்கியமானது. இந்த நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசின் அனைத்து கட்டுப்பாடுகளையும் ஏற்கிறோம்," எனத் தெரிவித்தார் அஸ்கர் அலி.

மேலும், அஸ்கர் அலியின் மனைவி நூர்ணிதா அஸ்கர் அலி பிபிசி தமிழுடன் அவரது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறுகையில், "பொதுவாகவே நோன்பு நாட்களில் பெண்கள் இல்லங்களில் பிள்ளைகளுடன் தனியாக நோன்பினை திறப்போம்.

ஆனால், தற்போதுள்ள கொரோனா ஊரடங்கு சூழலில், அனைவரும் பள்ளி வாசல் மற்றும் வெளியே வரக்கூடாத காரணத்தினால், கணவர், பெற்றோர், சகோதர சகோதரிகள் மற்றும் குழந்தைகளுடன் அனைவரும் ஒன்றாக வீட்டிலேயே கூட்டுத் தொழுகை செய்து, நோன்பு திறக்கிறோம். இது எங்களைப் போன்றவர்கள் சந்தோஷமாகக் கருதுகிறோம்," எனக் கூறினார்.

"ரமலான் காலங்களில் பள்ளி வாசலிலிருந்து கொடுக்கப்படும் நோன்புக் கஞ்சி வாங்கி வந்த பிறகே நோன்பு திறப்போம். ஆனால், தற்போது அந்த நோன்புக் கஞ்சியினை வீட்டிலேயே தயார் செய்வது புது அனுபவமாக இருக்கிறது.

மேலும், வீட்டிலுள்ள ஆண்கள் ரமலான் தொழுகைக்குப் பள்ளி வாசலில் செல்ல முடியாத நிலை வருத்தமளிப்பதாக இருந்தாலும், குடும்பத்துடன் நாங்கள் வீடுகளில் கூட்டுத் தொழுகை செய்வது ஆறுதலிருக்கிறது" என்கிறார் நூர்ணிதா அஸ்கர் அலி.

No comments

Powered by Blogger.