Header Ads



கொரோனாவைக் கட்டுப்படுத்தி உலகின், கவனத்தை ஈர்த்த நாடுகள்

கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்று தற்போது 213 நாடுகளில் பரவியுள்ளது.

நேற்றைய (18) நிலவரப்படி உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,05,229 ஆக உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ரஷ்யா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் பல கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கையில், சிறிய நாடுகள் பல அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளன.

கொரோனா பெருந்தொற்றை முற்றிலுமாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என உறுதியாகச் சொல்ல முடியாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், அதனை முற்றிலுமாக வென்ற நாடுகள் என இப்போதே வகைப்படுத்திவிட முடியாது.

காரணம் கொரோனா பரவலின் இரண்டாம் அலை சில நாடுகளில் நிகழத்தொடங்கியுள்ளது.

இருப்பினும், கொரோனாவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய சில நாடுகள் குறித்தும், அவை எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டன என்பது குறித்தும் அவதானிக்கலாம்.

கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்ட நாடுகள் வரிசையில் அதிகம் பேசப்பட்ட நாடு கியூபா தான். 1.13 கோடி மக்கள்தொகை கொண்ட வட அமெரிக்க நாடான கியூபாவில் 1872 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 79 பேர் உயிரிழந்துள்ளனர். 1495 பேர் குணமடைந்துள்ளனர்.

இலவச மருத்துவ வசதி, உலக அளவில் ஒப்பிடுகையில் அதிக மருத்துவர்கள் விகிதம், சராசரி ஆயுள் அதிகம், குறைந்த சிசு மரணங்கள் என மருத்துவ ரீதியாக வலிமையான நாடாகத் திகழ்கிறது கியூபா.

என்றாலும், உட்கட்டமைப்பு வசதிகளில் அந்நாடு பின்தங்கியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக பல சிக்கல்களுக்கும் முகங்கொடுத்து வருகிறது.

இந்நிலையில், தனக்குள்ள பலம், பலவீனங்களைத் தாண்டி, கொரோனாவை எதிர்கொண்டது கியூபா. கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தை ஜனவரி 20 ஆம் திகதியே ஆரம்பித்துவிட்டது கியூபா.

அதன்படி, மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சி, தனிமைப்படுத்தல் மையங்களை ஏற்படுத்தல், கொரோனா அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளால் அங்கு முதலாவது தொற்றாளர் மிகத் தாமதமாக மார்ச் 11 ஆம் திகதி தான் இனங்காணப்பட்டார்.

அதன் பின்னர் மருத்துவ மாணவர்கள் மூலம் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்து, நோய் அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்துதல், சிகிச்சையளித்தல் என நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டன.

நோய்த்தொற்றாளர் எண்ணிக்கை 20 ஐ எட்டியதுமே பொது முடக்கத்தை கியூபா அறிவித்துவிட்டது.

கொரோனாவிற்கு எதிரான போரில் ஒரு வழிகாட்டியாகத் திகழும் கியூபா தற்போது பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 59 நாடுகளுக்கு தனது 28,000 மருத்துவர்களை அனுப்பி சேவையாற்றி வருகிறது.

சீனாவுடன் நீண்ட எல்லையை பகிர்ந்துகொண்டுள்ள வியட்நாமும் கொரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளது.

9.7 கோடி மக்கள்தொகை கொண்ட வியட்நாமில் கொரோனாவால் 324 பேர் தான் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும், ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பதும் மிக ஆச்சரியத்தை ஏற்படுத்துவன.

கொரோனாவுடன் போராடுவது என்பதை விட வருமுன் காப்பதற்கு முன்னுரிமை கொடுத்தது வியட்நாம்.

ஜனவரி 11-இல் சீனாவின் வுஹானில் முதல் கொரோனா உயிரிழப்பு பதிவாகியவுடனே, அந்நாட்டுடனான தனது வட எல்லையை வியட்நாம் மூடிவிட்டது.

அன்று முதலே பயணக்கட்டுப்பாடு, விமானப் பயணிகளுக்கு பரிசோதனை, எல்லைப் பகுதி மற்றும் பாதிப்பு அபாயம் அதிகம் உள்ள இடங்களில் பரிசோதனை அதிகரிப்பு ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஜனவரி இறுதியிலேயே நாட்டின் பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவித்துவிட்டது.

மார்ச் மத்தியில் வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். நாட்டில் கண்டறியப்பட்ட தொற்றாளர்களும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.

வியட்நாம் போரில் அமெரிக்காவிற்கு எதிராக நாட்டு மக்களை ஒன்றிணைக்க பயன்படுத்திய அதே உத்தியை, இந்தப் பொதுவான எதிரி கொரோனாவிற்கு எதிராகவும் வியட்நாம் பயன்படுத்தியது. அதாவது, கைகளைக் கழுவிக்கொண்டு வீட்டிலேயே இருப்பது தேசபக்தி போன்று கட்டமைக்கப்பட்டது. அந்தத் தகவல் பலவழிகளில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது.

2003-இல் சீனா, ஹாங்காங் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் சார்ஸ் நோய்த்தொற்று பரவியபோது, அதை முதலில் கட்டுப்படுத்தியது வியட்நாம் தான். அதேபோல், கொரோனாவையும் கட்டுப்படுத்தி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளது.

உலகில் 213 நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மே 18-ஆம் திகதி நிலவரப்படி 48,05,229. இந்த அட்டவணையில் முதல் 10 இடங்களில் இருக்கும் நாடுகளின் மொத்த பாதிப்பு 34,23,198. இது 71 சதவீதமாகும். உலகில் மொத்த இறப்பு எண்ணிக்கை 3,16,732. முதல் 10 நாடுகளின் மொத்த இறப்பு எண்ணிக்கை 2,51,210. இது 79 சதவீதமாகும்.

வியட்நாம், கம்போடியா, எரித்ரியா, பூடான், நமீபியா உள்ளிட்ட 29 நாடுகளில் கொரோனாவால் இதுவரை எவரும் உயிரிழக்கவில்லை.

செயின்ட் லூசியா, டொமினியா, கிரீன்லாந்து, பப்புவா நியூகினியா உள்ளிட்ட 16 நாடுகளில் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குணமடைந்துவிட்டனர். ​

உலக சுகாதார நிறுவனத்தில் உறுப்பினராக இல்லாத நாடு தைவான். ஆனால், கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்ட அந்நாட்டின் நடவடிக்கைகளை இன்று உலகமே உற்று கவனித்து வருகிறது.

2.3 கோடி மக்கள்தொகை கொண்ட தைவான், சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடாக இருந்த போதிலும், இதுவரை அந்நாட்டில் கொரோனாவால் 440 பேரே பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர், 395 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவிற்கு எதிராக வேகமாக செயற்பட்ட நாடுகளில் தைவான் முன்னிலை வகிக்கிறது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் புதுவிதமான நிமோனியா போன்ற நோய்த்தொற்றால் சிலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற தகவல் கடந்த டிசம்பர் 31-ஆம் திகதி காலை 8 மணிக்கு அந்நாட்டின் துணை பிரதமர் சென்-சி-மய்-க்கு கிடைத்தது.

அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த நோய்த்தொற்று தங்கள் நாட்டிற்குள் பரவாமல் எப்படி தடுப்பது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. மேலும், சீனாவிலிருந்து விமானத்தில் வரும் பயணிகள் மூலம் நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளதை அறிந்த தைவான் அரசு, அன்றைய தினமே வுஹானிலிருந்து விமானத்தில் வந்த பயணிகளை பரிசோதிக்கத் தொடங்கியது.

ஜனவரி 21 ஆம் திகதி முதல் சீனாவில் இருந்து விமானங்கள் வருவதற்கு தைவான் தடை விதித்தது.

விரைவான செயற்பாடுகளால் கொரோனாவை கட்டுப்படுத்தி உலகைக் கவர்ந்துள்ள தைவான், உலக சுகாதார நிறுவனத்தின் கூட்டத்திற்கு அழைக்கப்பட வேண்டும் என அமெரிக்கா, ஜப்பான், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Source: The Hindu 

No comments

Powered by Blogger.