Header Ads



ஊரடங்கு எதிரொலி: “சொந்த ஊருக்குச் செல்ல சைக்கிளை திருடிய உ.பி தொழிலாளி” - நெகிழவைக்கும் மன்னிப்பு கடிதம்

ராஜஸ்தானில் பணியாற்றி வந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் சொந்த ஊருக்குச் செல்வதற்காக மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து சைக்கிளை திருடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் குறித்த செய்திகளைவிட, நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படும் அவதிகள் குறித்து தினந்தோறும் வெளிவரும் செய்திகளே நெஞ்சைப் பதறவைக்கும் வகையில் அமைகிறது.

அரசு இயந்திரமோ எவ்விதக் குற்ற உணர்வும் இல்லாமல் மேலும் மேலும் கார்ப்பரேட் முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்து, உணவில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை மேன்மேலும் கடன்காரர்களாக்கும் வகையிலேயே திட்டங்கள் என்ற பெயரில் படுபாதகங்களைச் செய்து வருகிறது.

மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் மோடி அரசோ, அதனை வெளி மாநிலங்களில் உள்ள கிராமங்களில் முடங்கியுள்ள தொழிலாளர்களுக்கு எட்டாத வகையில் இருப்பதால், வேறு வழியின்றி கால்நடையாக படையெடுப்பதை 50 நாட்களுக்கு பிறகும் நின்றபாடில்லை.

ஊரடங்கு எதிரொலி: “சொந்த ஊருக்குச் செல்ல சைக்கிளை திருடிய உ.பி தொழிலாளி” - நெகிழவைக்கும் மன்னிப்பு கடிதம்!
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ராரா என்ற கிராமத்தில் பணியாற்றி வரும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவர், தன்னுடைய சொந்த ஊரான பரேலிக்கு செல்ல முயன்றிருக்கிறார். அதற்காக ராரா கிராமத்தில் உள்ள சாஹாப் சிங் என்ற நபரின் சைக்கிளில் 250 கிலோ மீட்டருக்கு பயணித்திருக்கிறார் இக்பால்.

அனுமதியேதுமின்றி சைக்கிளை எடுத்த இக்பால், மனமுவந்து மன்னிப்புக் கடிதமும் எழுதி வைத்திருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக இக்பால் எழுதியுள்ள கடிதத்தில், “நான் உங்கள் குற்றவாளி. ஆனால், உதவிகிட்டாத தொழிலாளியாவேன். என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் சைக்கிளை எடுத்துக்கொள்கிறேன். சொந்த ஊருக்குச் செல்ல வேறு வழி தெரியவில்லை. எனக்கு சிறப்பு திறனுடைய குழந்தை உள்ளது. பரேலிக்கு செல்ல வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது இந்தக் கடிதம் இணையத்தில் பரவி வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என கூறும் வேளையில் இக்பால் போன்ற பல தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு படையெடுத்த வண்ணமே உள்ளனர் என்பதையும் அரசு உணர வேண்டும்.

No comments

Powered by Blogger.