May 23, 2020

இலங்கை சமூகத்தில், இஸ்லாமிய சகோதரத்துவம் உலகிற்கு முன்னுதாரணமானதாகும் - ஜனாதிபதி பெருநாள் வாழ்த்துச்

உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் எமது நாட்டின் இஸ்லாமியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பிருந்து புதிய பிறை பார்த்து கொண்டாடும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இஸ்லாமிய சமய நாட்காட்டியில் ஒரு முக்கிய பண்டிகையாகும்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றான அஸ் ஸவ்ம் அல்லது ரமழான் நோன்பு உலகாயத ஆசைகளில் இருந்து விலகி ஒரு தூய முன்னுதாரணமான வாழ்வொழுங்கைப் பின்பற்றி வாழ்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது. உலகெங்கிலும் பசியினால் வாடுவோருக்கு உதவுவதற்கும் உள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கான ஆற்றலை வளர்த்துக்கொள்வதற்கும் இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும் என இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.

முன்னெப்போதுமில்லாத வகையில் மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கு முழு உலகமும் முகம்கொடுத்துள்ள இதுபோன்றதொரு காலகட்டத்தில் அடுத்த மனிதர்கள் பற்றிய சமூக பிரக்ஞை மற்றும் உளக் கட்டுப்பாட்டின் மூலமே நல்ல சூழலொன்றை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதே ரமழான் உலகிற்கு வழங்கும் செய்தியாகும். இலங்கை சமூகத்தில் இஸ்லாமிய சகோதரத்துவம் வரலாறு நெடுகிலும் உலகிற்கு முன்னுதாரணமானதாகும். ஒரு சில தீவிரவாதிகளின் நடத்தைகளினால் அந்த சகோதரத்துவம் பாதிப்படைய நாம் இடமளிக்கக் கூடாது. தீவிரவாதம் இஸ்லாத்தின் அடிப்படைப் பெறுமானங்களுக்கு எதிரானது என்பது உண்மையான இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகும். எனவே, நம்பிக்கையீனம், சந்தேகங்களை கலைந்து புனித அல்குர்ஆனின் போதனைகளை ஆழ்ந்து பின்பற்றுவதற்கு  இந்த ரமழான் சிறந்த சந்தர்ப்பமாகும் என நான் நம்புகிறேன்.

ரமழானின் மூலம் கிடைக்கும் உயர் பெறுமானங்கள் உலகிற்கு அமைதியை கொண்டுவரட்டும் என்ற எதிர்பார்ப்புடன் இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கோட்டாபய ராஜபக்ஷ
2020 மே மாதம் 24ஆம் திகதி

2 கருத்துரைகள்:

அறிக்கை மிக மிக ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியிருக்கின்றது. இஸ்லாத்தை, சில முஸ்லிம்களை விட தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்.

அல்ஹம்துலில்லாஹ் - அனைத்துப் புகழும் இறைவனுக்கே.  இலங்கை முஸ்லிம்கள் பற்றிய இந்நாட்டுத் தலைவரின் இப்பாராட்டுரை சாதாரணமானது அல்ல. 

இவ்வித நிலையை நாம் அடைய 1924 முதல்   மக்களிடம் எவ்வித உதவிகளையும் எதிர்பாராது, தமது சொந்தப் பணத்தையும், அறிவையும் உழைப்பையும் அர்ப்பணித்த, இன்றும் அர்ப்பணம் செய்து வழிகாட்டிக் கொண்டிருக்கும், அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் சங்கையான உலமாக்கள் இவ்விடத்தில் நன்றியுடன் நினைவு கூறப்பட வேண்டியவர்கள்.

இலங்கை முஸ்லிம்களின் மதிப்பை இத்தீவுக்கு வெளியே சென்று பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் ஒருவர் இலகுவில் உணர்ந்து கொள்வார்.

ஒரு மில்லியன் முஹம்மதுகளையும் ஒரு மில்லியன் பாத்திமாக்களையும் கொண்ட ஓர் உன்னத சமுதாயம் என அவர்கள் எம்மை அடையாளப்படுத்தி வைத்து மதிக்கிறார்கள். 

ஏனைய நாட்டு முஸ்லிம்களைவிட முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு நம் வாழ்வில் நாம் அளிக்கும் மரியாதையை இது காட்டுகிறது. 
அவர்கள் எத்தி வைத்த ஓர் போதனையை அறிந்தால் உடனே அதைத் தம் வாழ்வில் கடைப்பிடிக்கும் இயல்பு கொண்டவர்கள் நம்மவர்கள்.

நம்முள் பல்வேறு வகையான சிந்தனைப் பிரிவுகள் இருக்கலாம்.  இவ்வித சுதந்திர  சிந்தனைகளால்தான் ஒரு சமுதாயம் குறைகளைக் களைந்து உன்னத நிலையை நோக்கிய பரிணாம வளர்ச்சியை அடைகிறது.  இவற்றை நாம் நமக்கிடையில் சாதகக் கண்ணோட்டத்துடன்  பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

நாம் அனைவரும் 'லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்'  - 'இறைவன் ஒருவன், முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள் இறைவனின் தூதர்' என்ற அடிப்படை நம்பிக்கையால் சகோதரர்களாக இருக்கிறோம். 

இந்தச் சகோதரத்துவத்தை மென்மேலும் பலப்படுத்த நமக்கான ஓர் அருளாக அல்லாஹ் ஏற்கனவே அமைத்துத் தந்துள்ள உலமா சபையின் கீழ் நம் சகோதரர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.  தேசிய, சர்வதேச விடயங்களில் நமது உரிமைகளையும் அனுகூலங்களையும் அடையவும் இது இலகுவான வழியாக இருக்கும்.

ஆகவே, இந்நிலையை நாம் அடைய, காத்திரமான  சிந்தனைகளை முன் வைக்கும் ஏனையோரும் நம் சகோதரர்களே என்ற உணர்வோடு அவர்களை மதித்து மென்மையாக நடப்பதே நன்மையாக இருக்கும்.

நமக்கிடையில் உள்ள ஒற்றுமையைச் சீர் குழைக்க முஸ்லிம் என்ற பெயரில் உள்ள முகம் தெரியாத ஏனையோரும், நயவஞ்சகர்களும் இணையத்தில் இருப்பதை நாம் பரஸ்பரம் ஞாபகப்படுத்திக் கொள்வோமாக.

Post a comment