Header Ads



பயங்கரவாதி சஹ்ரானை அழைத்து, போதனை நடத்திய விவகாரம் - வெளியாகிய மேலதிகத் தகவல்கள்

(எம்.எப்.எம்.பஸீர்)

நாட்டில் 8 இடங்களில் கடந்த வருடம்,  உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21 ஆம் திகதி) இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன்  புத்தளம் பிரதேசத்தின் அமைப்பொன்றும் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில்  சி.ஐ.டி.  தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நிலையில் அதன் பொறுப்பாளராக செயற்பட்ட நபர்  கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்றைய தினம் -03- புத்தளம் - கற்பிட்டி, 4 ஆம் குறுக்குத் தெரு பகுதிக்கு சென்ற சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு குறித்த நபரை அவரது வதிவிடத்தில் வைத்து  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட நபர் சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடிக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

குறித்த நபர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினை நடாத்தி வந்துள்ள நிலையில், அதன் நிதி ஊடாக அடிப்படைவாதத்தை போதனை செய்ய பயிற்சி நெறிகளை முன்னெடுத்துள்ளதாகவும், அதற்காக  உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை நடாத்திய குண்டுதாரிகள் வந்து சென்றுள்ளமையும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.  அவ்வாறு நடாத்தப்பட்ட பயிற்சி நெறிகளின் போது பயிற்சி நெறிகளுக்கு பொறுப்பாளராகவும் குறித்த நபரே செயற்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி. தெரிவித்தது.

 புத்தளம் , மதுரங்குளி, அசார் நகரை மையப்படுத்தி இயங்கியதாக கூறப்படும் மேற்படி அரச சார்பற்ற நிறுவனம் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இந்த அரச சார்பற்ற நிறுவனத்தின் பொறுப்பாளரால் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள அடிப்படைவாத போதனை முகாம்களில், பயங்கரவாதி சஹ்ரான்,  சங்ரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரி மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் மற்றும் சினமன் கிரான்ட் ஹோட்டல் தற்கொலைதாரி மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட்  ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டுள்ளதக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகள் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் கீழ் இடம்பெற்று வருகின்றது. 

No comments

Powered by Blogger.