Header Ads



பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த ஆட்சியையே, ஜனாதிபதி கோத்தபாய பொறுப்பேற்றார்: பிரதமர் மஹிந்த


(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை எதிர்க் கொள்ள நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். தனித்து செயற்பட்டால் நாடு மீண்டும் இருண்ட யுகத்தை நோக்கி செல்லும்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் பலவீனப்படுத்தப்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியிலே தற்போதைய சவாலையும்  எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை ஆசியாவில் வேகமாக வளர்ச்சியடையும் நாடு என சர்வதேச நாணய நிதியம் 2014ம் ஆண்டு குறிப்பிட்டது. 2006ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையான தீவிர யுத்த காலத்தில் தேசிய பொருளாதார வளர்ச்சி வீதம் 6 சதவீதமாக காணப்பட்டது. 2010 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வகையான காலக்கட்டத்தில் பொருளாதார வளர்ச்சி வீதம் 7.4 சதவீதமாக  உயர்வடைந்நது.

2005ம் ஆண்டு மொத்த தேசிய  உற்பத்தியினை அடிப்படையாக கொண்டு காணப்பட்ட 90 சதவீத மொத்த அரச கடன் சுமை 2014ம் ஆண்டின் இறுதி காலாண்டில் 75 சதவீதமாக குறைவடைந்தது.

2005ஆம்  ஆண்டு 1,999ஆக  காணப்பட்ட பங்குச்சந்தை மொத்த விலைச்சுட்டி  2014ம் ஆண்டு 7,299 உயர்வடைந்தது.

அத்துடன் 2015ல் 1,242 அமெரிக்க டொலராக காணப்பட்ட தனிநபர் வருமானம் 2014ம் ஆண்டு 3,819 அமெரிக்க டொலராக அதாவது மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டது.

சுதந்திரம் பெற்றதன் பின்னர் 2006-2014 வரையான காலப்பகுதியில் உட்கட்டமைப்பு துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டது. இந்த அனைத்து வெற்றிகளும் பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் பெற்றுக் கொள்ளப்பட்டது.

2007ல் பாரிய உலக உணவு தட்டுப்பாடு, 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் பாரிய நிதி நெருக்கடி, கனிய எண்ணெய் பற்றாக்குறை விலையேற்றம் உள்ளிட்ட பாரிய சவால்கள் காணப்பட்டன.

 சவால்களுக்கு மத்தியில் பெற்றுக் கொண்ட வெற்றி, பொருளாதார முன்னேற்றம் ஆகியன 2015ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் தலைகீழாக மாற்றியமைக்கப்பட்டது.

2014ம் ஆண்டு ஒரு டொலருக்கான ரூபாவின் பெறுமதி 130 ரூபாவாக காணப்பட்டது. 2019 ஒரு டொலருக்கான ரூபாவின் பெறுமதி 181 ரூபாவாக உயர்வடைந்தது.

2014ம் ஆண்டு மொத்த அரச கடன் சுமை 7.39 ட்ரில்லியனாக காணப்பட்டது.  2019 இந்த தொகை 12.89 ட்ரில்லியனாக உயர்வடைந்துள்ளது. குறுகிய காலத்தில் அரச கடன்சுமை 74.4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் 2015 தொடக்கம் 2019 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் சவரிங் பொன்ட், இலங்கை  அபிவிருத்தி பிணை, சின்டிகேட் லோன் உள்ளிட்ட வழிமுறைகள் ஊடாக 26 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளது. 2015ம் ஆண்டு 7,299 விலைச்சுட்டியாக காணப்பட்ட பங்குச்சந்தை 2019 ம் ஆண்டு 5,990 ஆக குறைவடைந்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தியதற்கு உரிய காரணிகளை குறிப்பிட முடியாது. 2015. - 2019 வரையான காலப்பகுதியில் இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்துள்ளன.

2019 ம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை மேலும் பலவீனப்படுத்தியது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த ஆட்சியையே பொறுப்பேற்றார். கொவிட்-19 வைரஸ் தாக்கம் இந்நிலையை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த  அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை ஆரம்பத்தில் இருந்து முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தர குறிப்பிட்டதை எதிர்தரப்பினர் அரசியல் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். 2006-2016 ம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில் பொருளாதார துறையில் இவர் உயரிய பதவி வகித்தார்.

பிறர் மீது சேறு பூசல், பொய் குற்றச்சாட்டை முன்வைக்கும் எதிர் தரப்பினர் கொவிட்-19 வைரஸ் விவகாரத்தையும் அரசியலாக்கி விட்டார்கள்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது,  தனது நாடு பொருளாதார ரீதியில்  முன்னேறியிருந்தமையினால்  கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த முடிந்தது என ஜெர்மனி சான்சலர் எஞ்சலோ மெர்கல் குறிப்பிட்டுள்ளார். எம்மால் இவ்வாறு குறிப்பிட முடியாது. இருப்பினும் கொரோனா வைரஸை பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளோம்.

தற்போது நாடு எந்த நிலையில் காணப்படுகின்றது என்பதை உணர்ந்து மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தற்போதைய நெருக்கடியான நிலைமையினை அனைவரும் ஒன்றினைந்தால் மாத்திரமே எதிர்க்கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.