Header Ads



உயர் நீதிமன்றில் இன்று, விஜேதாச முன்வைத்த வாதம்

(எம்.எப்.எம்.பஸீர்)

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் அடிப்படையற்றவை என ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ இன்று -20- உயர் நீதிமன்றில் வாதிட்டார்.

2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று 3 ஆவது நாளாக பரிசீலனைக்கு வந்தபோது, எஸ்.சி.எப்.ஆர். 115/2020 எனும் மனுவின் பிரதிவாதிகளில் ஒருவரான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகல காரியவசம் சார்பில் மன்றில் வாதங்களை முன்வைக்கும் போதே, ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

இது குறித்து வாதங்களை முன்வைத்த அவர் மேலும் தெரிவித்ததாவது, 'அரசியலமைப்பின் 104 ஆவது சரத்தின் பால் அவதானம் செலுத்துங்கள். அங்கு பயன்படுத்தப்பட்டுள்ள தேர்தல்கள் காலம் என்பது என்னவென விளக்கப்பட்டுள்ளது.

அதன்படி 104 ஆம் சரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 'ஒரு தேர்தல் காலப்பகுதியின் போது' என்பது,  தேர்தலொன்றினை நடாத்துவதற்கான அல்லது மக்கள் தீர்ப்பொன்றினை எடுப்பதற்கான பிரகடனமொன்று அல்லது கட்டளை ஒன்று ஆக்கப்படுவதில் தொடங்கி, விடயத்துக்கு ஏற்ப,  அத்தகைய தேர்தலில்  அல்லது மக்கள் தீர்ப்பில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பின் பெறுபேறு வெளிப்படுத்தப்படும் திகதியன்று  முடிவடையும் காலப்பகுதி என்று பொருளாதல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 அப்படியானால், தேர்தல் காலம் என்பது  பாராளுமன்றம் கலைக்கப்பட்டது முதல் தேர்தல் இடம்பெற்று இறுதி முடிவுகள் வெளியிடப்படும் வரையிலான காலப்பகுதியாகும். அதன் பிரகாரம், பாராளுமன்றத்தை கலைத்த பின்னர் மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடாத்த வேண்டும் என முன்வைக்கப்படும் வாதங்கள் அடிப்படையற்றவை.

 இங்கு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை சமர்ப்பித்துள்ள பல மனுதாரர்கள் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்களை தாக்கல் செய்தவர்களே, அவர்கள் அவ்வாறு வேட்புமனுவை , ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த வர்த்தமானியை ஏற்றுக்கொண்டு தாக்கல் செய்துள்ளனர். 

மனுதாரர்கள் நல்லெண்ணத்தில் இந்த மனுக்களை தாக்கல் செய்யவில்லை என்பதற்கு இதுவே உதாரணம். எனவே இந்த அனைத்து மனுக்களையும் விசாரணைக்கு ஏற்காது நிராகரிக்க வேண்டும் என கோருகின்றேன்' என வாதிட்டார்.

 இதனையடுத்து மனுக்களில் மற்றொரு பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரனி ரொமேஷ் டி சில்வா வாதிட்டார். அவர்  ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷ முன்வைத்த வாதத்தை ஒத்து மனுதாரர்கள் எவரும் நல்லெண்ணத்துடன் நீதிமன்றை நாடவில்லை என சுட்டிக்காட்டினார்.

 இந்த மனுக்கள் ஊடாக, நீதிமன்ற நடவடிக்கைகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, மனுக்களில் உள்ள அடிப்படையற்ற தன்மை தொடர்பில் நாளை (21) விரிவாக வாதங்களை முன்வைப்பதாக தெரிவித்தார்.

 இதனையடுத்து இந்த மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனைகள் நாளைய தினம் முற்பகல் 10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. 

No comments

Powered by Blogger.