Header Ads



பாரிய பொருளாதார, நெருக்கடியில் உலகம்

கோவிட்19 உலகளாவிய பரவல் உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றது. 1930 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பின் மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை உலகம் எதிர்நோக்கிக் கொண்டிருப்பதாக கணிப்பிடப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் இதுவரை 19 கோடிப்பேர் தொழில்களை இழந்துள்ளனர். சுமார் 50 கோடிப்பேர் வருமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. விமானப் போக்குவரத்து, உல்லாசப் பிரயாணம், ஹோட்டல் துறை மற்றும் கட்டுமானத்துறை என உலகில் முக்கிய பொருளாதாரச் செயற்பாடுகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. supply chain என்கின்ற விநியோகச் சங்கிலி அல்லது விநியோகத் தொடர்பாடல் சீர்குலைந்துள்ளது. இதனோடு தொடர்பான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளில் கடும் தடங்களுக்குள்ளாகியுள்ளன. பெருமளவு உணவுப் பொருள்கள் விற்கப்படாது அழிவடைகின்றன. உலகச் சந்தையில் மூலப் பொருட்கள் உட்பட பண்டங்களின் விலைகள் பெருமளவு வீழ்ச்சி கண்டுள்ளன. பெற்றோலியப் பொருட்களின் விலைகள் என்றுமில்லாதளவு குறைவடைந்துள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் பொருளாதாரம் பெருமளவு பாதிப்புக்குள்ளாகி, அங்கே தொழில் வாய்ப்புக்களிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜேர்மனியில் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியாது ஒரு முக்கிய பிராந்திய நிதி அமைச்சர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுமா? எப்பொழுது கண்டுபிடிக்கப்படும்? எப்பொழுது இந்த நோய் முடிவுக்கு வரும் என்பனவெல்லாம் தற்போது பெரும் கேள்விக்குறிகளாகவே உள்ளன.

இப்பொழுது ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார நெருக்கடிகள் கோவிட்-19 நோயின் நேரடி விளைவாக ஏற்பட்டவை அல்ல. அதற்கான தீர்வு நடவடிக்கைகளில் ஒன்றான முடக்க நடவடிக்கையின் விளைவாகவே பரவலான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சுகாதார மருத்துவத்துறையினர் கடுமையான நீண்ட கால முடக்கங்களை சிபாரிசு செய்கின்ற போதிலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும், பொருளாதார செயற்பாடுகளையும் ஒருமுகப்படுத்துதல் அல்லது சமநிலைப்படுத்துவதற்கான நிர்ப்;பந்த நிலை உணரப்பட்டு வருகின்றது.

கடுமையான முடக்கங்கள் நீண்டகாலம் தொடர்ந்ததால் போசாக்கின்மை, பட்டினியால் மக்கள் இறக்கக்கூடும். எனவே, நோயை கட்டுப்படுத்துவதற்கான சமூகத் தூரப்படுத்தல் போன்ற நடைமுறைகளோடு நாளாந்த பொருளாதார செயற்பாடுகளும் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டு, தொடரப்பட வேண்டிய நிலை உலகளாவிய ரீதியில் ஏற்பட்டக் கொண்டிருக்கின்றது. எனவே, ஐக்கிய அமெரிக்கா உட்பட அபிவிருத்தி அடைந்த மேற்கு நாடுகள் கட்டுப்பாடுகளை கட்டம் கட்டமாக தளர்த்த ஆரம்பித்துள்ளன. எதிர்வரும் காலங்களில் பொருளாதாரப் போக்குகள், நடவடிக்கைகள் மாறுபட்டவைகளாக இருக்கலாம். அத்தோடு புதிய வாய்ப்புக்களும், புதிய நெருக்கடிகளும் பொருளாதார வர்த்தக செயற்பாடுகளில் உருவாகலாம். எனவே, நாடுகளும், வியாபார நிறுவனங்களும், தனிப்பட்டவர்களும் மாறிவரும் நிலைமைகளுக்கேற்ப மூலோபாயங்களை வகுப்பது அவசியமாகும்.

எஸ்.ஏ.அஸீஸ்
FCA, ACMA, CPA
சிரேஷ்ட பட்டயக்கணக்கறிஞர்.

No comments

Powered by Blogger.