Header Ads



ஏழைகளுக்கு அரிசி வழங்கும் இந்தோனேஷிய ATM இயந்திரங்கள்


கொரோனா தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் பல நாடுகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், தமது நாடுகளின் மக்களுக்காக பல நாடுகள் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

இந் நிலையில் இந்தோனேஷியாவில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு  ஏ.ரி.எம். இயந்திரங்கள் மூலம் இலவச அரிசி வழங்கப்படுகிறது.

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏ.ரி.எம். இயந்திரங்கள் நிறுவப்பட்டு நாளொன்றுக்கு ஆயிரம் பேருக்கு 1.5 தொன் அரிசி விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக வழங்கப்பட்டுள்ள பிரத்தியேக ஏ.ரி.எம்.  அட்டைகளை பயன்படுத்தி கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளுடன் அரிசியை பெற்றுகொள்ளமுடிவதுடன் இவ் ஏ.ரி.எம். இயந்திரங்கள் அருகே பொது மக்களுக்கு உதவுவதற்காக இராணுவத்தினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இத்துடன் நிவாரண பொருட்கள் மற்றும் மின்சார கட்டண தள்ளுபடிகள் உட்பட இந்தோனேஷியாவின்  10 மில்லியன் குடும்பங்களுக்கு சமூக நலனை வழங்குவதாக அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.

இந்தோனேஷியாவில் மார்ச் மாத தொடக்கத்திலிருந்து 14,000 க்கும் மேற்பட்ட இந்தோனேசியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன்  1000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தோனேஷியா அரசு மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கை அமுல் படுத்தியுள்ளது. 

இதன் காரணமாக அந்நாடு பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளதுடன் 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளதுடன்  பல இலட்சம் மக்கள் வாழவாதாரமின்றி தவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.