May 30, 2020

ஜெயலலிதாவின் 913 கோடி சொத்துக்கள் - நேரடி வாரிசு ஆகியுள்ள 2 பேர்

கடந்த 1967- ம் ஆண்டு வேதா இல்லம் அமைந்துள்ள நிலத்தை ஜெயலலிதா தன் தாயாருடன் சேர்ந்து ரூ.1.32 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். இந்த நிலம் மற்றும் வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.43.96 கோடி ஆகும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமன் மகன் ஜெ.தீபக், மகள் ஜெ.தீபா. சிறுவயதில், இவர்கள் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில்தான் வசித்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். பிறகு, தீபா மாதவன் என்பவரை திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்து வந்தார். தீபக், சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்பட்டது. தீபக், சசிகலாவை `சின்ன அத்தை ' என்றே அழைப்பார் எனவும் சொல்வார்கள். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக இறந்து போனார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவரைப் பார்க்க வந்த ஜெ.தீபாவை அனுமதிக்க மறுத்தபோதுதான் ஜெ. தீபா தமிழக மக்களுக்கு பரிச்சயமானார். ஜெயலலிதா மறைந்தபோது அவருடைய உடலுக்கு அருகிலும் இவர்களை அனுமதிக்காமல் இருந்தது பெரிதாகப் பேசப்பட்டது. ஜெயலலிதா போன்ற முகத் தோற்றத்துடன் இருந்த காரணத்தினால், தமிழக மக்களுக்கும் தீபா மீது தனி அபிமானம் உருவானது. ஆனால், பிறகு கட்சி தொடங்கி தீபா செய்த கூத்துகளை தமிழகமே அறியும். பின்னர், அரசியலுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்த தீபா, ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு தானும், தன் சகோதரர் தீபக்கும்தான் வாரிசு என்று கூறி வந்தார். அவ்வப்போது, போயஸ்கார்டன் வேதா இல்லத்துக்கு தீபா செல்வதும், போலீஸார் அவரை தடுத்து திருப்பி அனுப்புவதும் வாடிக்கையாக நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், தமிழக அரசு ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என அறிவித்தது. இதற்காக, அவசரச் சட்டமும் இயற்றப்பட்டது. வேதா இல்லத்தை மக்கள் பார்வையிடும் வகையில் மாற்றம் செய்யும் வேலையிலும் தமிழக அரசு இறங்கியது. இதற்காக, தனி அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக எடப்பாடி பழனிசாமி மற்றும் உறுப்பினர்களாக துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். வேதா இல்லம் நிலம் மற்றும் இல்லத்தைக் கையகப்படுத்துவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு 28.6.2019 அன்று வெளியானது. பிறகு, 6.5.2020 அன்று இதற்கான உறுதி ஆவணம் வெளியிடப்பட்டது. இந்த மாதம் 22-ம் தேதி இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற தீபா, தீபக் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில்தான் இப்போது முக்கியத் தீர்ப்பு வந்துள்ளது. இந்தத் தீர்ப்பால் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதிலும் சில சட்டச்சிக்கல்கள் எழுந்துள்ளன.

கடந்த 1967-ம் ஆண்டு போயஸ் கார்டனில் வேதா இல்லம் அமைந்துள்ள நிலத்தை ஜெயலலிதா தன் தாயாருடன் சேர்ந்து ரூ. 1.32 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். இந்த நிலம் மற்றும் வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.43.96 கோடி ஆகும். இது தவிர, ஜெயலலிதாவுக்கு சசி எண்டர்பிரைசஸ், கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத் அருகேயுள்ள திராட்டை தோட்டம் உள்ளிட்ட ஏராளமான சொத்துகளில் 50 சதவிகிதப் பங்குகள் உள்ளன. அதோடு, தங்கம், வைர நகைகள், கார்கள், வங்கி வைப்பும் உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 2016-ம் ஆண்டு கணக்கிடப்பட்டபோது, ரூ.913 கோடி என அறிவிக்கப்பட்டது.

இந்த ரூ.913 கோடி சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி அ.தி.மு.க-வைச் சேர்ந்த புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல, ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க வாரிசுகள் என்ற அடிப்படையில் தங்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரின் சகோதரர் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கில் மே 27-ம் தேதி நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகியோர் அளித்த தீர்ப்பில், `ஜெயலலிதாவின் வீட்டை முதல்வரின் தனி அலுவலகமாக மாற்றுவது குறித்து யோசிக்கலாம். வீட்டின் ஒரு பகுதியை நினைவில்லமாக மாற்றலாம் என்றும் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளாக அவரின் அண்ணன் குழந்தைகளான தீபா மற்றும் தீபக்கையும் நியமிப்பதாக தீர்ப்பு கூறினர்.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக தீபாவும் தீபக்கும் மற்றொரு மனுத்தாக்கல் செய்தனர். அதில் `எங்களது பாட்டி சந்தியாவின் சொத்துகள் நமது பாரம்பர்ய வழக்கப்படி எங்களது தந்தைக்கும் அத்தைக்கும் கிடைத்தது. எங்களது அத்தை ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் யாரும் இல்லாத சூழலில் நாங்களே அவருடைய நேரடி வாரிசுதாரர்கள். எனவே, எங்களை ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுதாரர்கள் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதை மாற்றி, இந்து வாரிசுரிமை சட்டப்படி நேரடி வாரிசுகள் என திருத்தம் செய்து அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த மனுவை கவனத்தில் கொண்ட நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் தங்கள் தீர்ப்பை மாற்றி வெளியிட்டுள்ளனர். அதில், `ஜெயலலிதா திருமணம் ஆகாதவர். எனவே, அவரின் சொத்துகளுக்கு இந்து வாரிசுரிமை சட்டத்தின்டி ஜெயலலிதாவின் அண்ணன் குழந்தைகள் ஜெ. தீபா மற்றும் தீபக் நேரடி வாரிசுதாரர்களாக நியமிக்கிறோம். இரண்டாம் நிலை என்ற வார்த்தையை தீர்ப்பில் இருந்து நீக்குகிறோம்' என்று கூறியுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பால் தீபா, தீபக் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்தத் தீர்ப்பால், ஜெயலலிதாவின் 913 கோடி மதிப்புள்ள சொத்துக்கும் ஜெ. தீபா மற்றும் தீபக் ஆகியோர் நேரடி வாரிசு ஆகியுள்ளனர். நீதிபதிகள் தீர்ப்பையடுத்து நேற்று பேட்டியளித்த ஜெ. தீபா, "நியாயமான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சட்டத்தின் முன் யாரும் தப்பிக்க முடியாது. அ.தி.மு.க-வினர் உயர்நீதிமன்றத் தீர்ப்பை தலைவணங்கி ஏற்க வேண்டும்" என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் `கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா' என்கிற நிலையில் ஜெ.தீபா, தீபக் ஆகியோரின் நிலை உள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், இதுவரை தமிழக அரசு தரப்பில் எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை. மேல் முறையீடு செய்தாலும் சட்டபூர்வமாக இவர்கள் இருவரும் வாரிசுகள் என்பதை யாராலும் மாற்ற இயலாது. இதற்கிடையில், சசிகலாவும் விரைவில் விடுதலையாகி வருவார் என்ற கருத்து பரவி வருவதால் இந்தத் தீர்ப்பையும் அத்துடன் முடிச்சுப்போட்டு புதிய கணக்குகளைப் போட ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்.

0 கருத்துரைகள்:

Post a comment