May 01, 2020

90 களின் நோன்புகள்....

அவை டிஜிட்டல் நோன்புகளாக இருக்கவில்லை. பாடசாலை விடுமுறை என்பது இரட்டிப்பு சந்தோசம், இப்போதுபோல் 10 பாடங்களுக்கும் அந்தநேரம் டியூசன் இருந்ததில்லை. காலை 9மணிக்கே "அதிரிக்குடில்" (அப்படித்தான் அழைப்போம்) எனப்படும் ஹதீஸ் மஜ்லிஸ் களில் ஊரெங்கும் இஸ்லாமிய கீதம், சிறுவர்களின் சலவாத்து கேட்கும். காலையிலேயே சிறுவர்கள் சுறுசுறுப்பாக இருப்பர்.

அதிரிக்குடில் அருகில் லொத்தர் மட்டையில் லொத்தர் இழுத்து பரிசு பெறுவது, இறுங்கு பக்கட், முட்டாசி, தேங்காய் மஸ்கத் வாங்குவது, உடல் சோர்வு குறைந்த குண்டு, ஈச்சங்கொட்டை விளையாட்டு போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது, கள்ள நோன்பு பிடிப்பது மறக்கமுடியாதவை.

ளுஹர் தொழுகையின்பின் ஹிஸ்பு ஓதுதல் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளியில் நடக்கும், இதில் நிறைய சிறுவர்கள் கலந்துகொள்வோம் (இப்போது காணமுடிவதில்லை). ஷோட் ஈட்ஸ் கலாச்சாரம் பொதுவாக இல்லாத காலம், நோன்புகள் எளிமையாகவே திறக்கப்படும். பள்ளி கஞ்சி வாங்க லைனில் நிற்பார்கள்.இக்காலம் போல் அதில் கௌரவ பிரச்சினை இருக்கவில்லை. பள்ளிவாசலில் ஈச்சம்பழம் பகிருவார்கள், அதைப்பெற முண்டியடித்துக்கொண்டு வாங்கப்போவதில் ஒரு சந்தோசம். இரவில் தராவீஹ் தொழுகையில் சிறுவர்களை அதிகமாக காணலாம். தொழுகை முடிஞ்சதும் பிஸ்கட்/சம்சா, பிளேன்டி பகிருவார்கள். இதனால் தறாவீஹ் கடைசி நேரத்திலே சிறுவர்கள் பள்ளிக்கு ஒதுங்குவார்கள். பெண்களுக்கு அதிரிக்குடிலில் தறாவீஹ் தொழுவிக்கப்படும். மஃரிப் நேரம் வீதியால் போகும்போது சத்தமாக ஓதும் சத்தமே ஒவ்வொரு வீட்டிலும் கேட்கும்.

நோன்பு 27இல் பித்ரா காசு கொடுப்பார்கள். பிரபலமாக மையோன் முஸ்தபாவின் வீட்டில் பெரியவர்களுக்கு காசும், உடைகளும், சிறுவர்களுக்கு பச்சைக்கலர் பத்துரூபாய் புதுத்தாள் கொடுப்பார்கள். அது கிடைப்பதில் உள்ள சந்தோசம், வேறெதிலுமில்லை. பெருநாள் வந்தால் குடும்ப உறவினர்களின் வீட்டுக்கு சென்று, பெருநாள் காசு தரும்வரை காத்திருப்போம். 50சதம் தந்தாலும் அதை ஏற்றுக்கொண்டோம், ஈகோ இருக்கவில்லை. யாருக்கு பெருநாள் காசு கூட என அடிக்கடி எங்களுக்குள் கணக்கிட்டு பெருமைப்படுவதில் ஒரு சந்தோசம். 27ம் கிழமை என்றால், பள்ளியில் விடிய விடிய நிகழ்ச்சிகள், சாப்பாடு, ஷோட் ஈட்ஸ் ஏற்பாடு செய்யப்படும். ஊரெல்லாம் வீடுகளில் சந்தனக்கூடு கட்டி ஏற்றிவிடப்பட்டிருக்கும். தனவந்தர்கள் 27க்கு ஊரில் மாடறுத்து பகிர்வார்கள். ரெடிமேட் உடுப்புகளை விட டய்லர் கடைகள் விடிய விடிய திறந்திருக்கும். உடுப்புக்கு அளவு கொடுக்க வாப்பாவோடு பைசிக்கலில் சென்று வருவோம். இக்காலத்தில் 90 வீதம் ரெடிமேட் உடுப்புகளே.

பெருநாளைக்கு பாபுஜீஸ் போய் ஒரு ஐஸ்கிறீம் சாப்பிடாவிட்டால், அது பெருநாளேயல்ல. வீடுகளில் அயல்வீட்டார் ஒன்று சேர்ந்து துதல் செய்வார்கள். வாப்பா, சகோதரர்களின் கையை பிடித்துக்கொண்டு ஒன்றாக பெருநாள் தொழுகைக்கு செல்வோம், வந்து ஒன்றாகவே சாப்பிடுவோம். பெருநாள் தொழுகை ஐந்து ஆறுதடவை தொழுவிக்கப்படும், இதனால் அன்று 11மணிவரை  பள்ளிவாயல் களைகட்டும்.

இன்றைய ஒரு போனுடன் வீட்டுக்குள் அடங்கும் சிறுவர்களின் பெருநாளையும், நோன்புகளையும் நினைக்கும்போது மனது கனக்கிறது.. ஒரு தசாப்தத்தில் இத்தனை மாற்றமா??? மேலுள்ளவற்றில் இப்போது எஞ்சியிருப்பது ஒரு சில நடைமுறைகள் மட்டுமே.

மேற்கூறப்பட்ட நிகழ்வுகள், அவை இஸ்லாத்துக்கு முரணானதா இல்லையா என்பதற்கு அப்பால், நிஜமான சம்பவங்களாக எழுதப்பட்டவை.

அன்றைய ஆதம்பாவா ஜலீல் சாய்ந்தமருது

2 கருத்துரைகள்:

ஒரு சிலவற்றை தவிர நம் ஊரிலும்
இதே நடை முறை ஹ்ம்ம்.......

ஏதோ யுபிறடீஸ் தைக்றீஸ் நாகரீகம் போல.. சொல்லுகிறாறே....
உன்மயைச்சொன்னால்... அதிகமாக மூடநம்பிக்கை தான்டபமாடிய காலம்
.

Post a comment