Header Ads



ஊரடங்கை மீறிய 59 ஆயிரத்து 35 பேர் கைது

(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தொற்று நீக்கம் சட்டத்திற்கமைய பொலிஸாரால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக இதுவரையில் 59 ஆயிரத்து 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 16 ஆயிரத்து 436 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் கொவிட் -19 வைரஸ் பரவல் இலங்கையிலும் பரவி வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக  கடந்த மார்ச் மாதம் 18 திகதி குறிப்பிட்ட சில பகுதிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம், மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டது.

கடந்த 11 ஆம் திகதி முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் தொடர்ந்தும் அமுல் படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலப்பகுதியில் இரவு எட்டு மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், இன்று திங்கட்கிழமை தளர்த்தப்பட்டதுடன்,  இரவு எட்டுமணிக்க அமுல்படுத்தப்பட்டு, காலை 5 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படும். இந்த முறையிலே அடுத்துவரும் நாட்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும். இதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று  திங்கட்கிழமை காலை ஆறு மணிவரையிலான 24 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 2709 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், இவர்களிடமிருந்து 946 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஒரு மாதமும் 28 நாட்களும் கடந்துள்ள நிலையில், இதுவரையில் 59 ஆயிரத்து 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 16 ஆயிரத்து 436 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் இன்று  காலை ஆறு மணிவரையில் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக   15 ஆயிரத்து 695 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள்  5660 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.