Header Ads



தேர்தல் தொடர்பான மனுக்களை விசாரிக்க 3 நீதியரசர்கள் அடங்கிய அமர்வு - நாளை விசாரணை

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்தும் நோக்கில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவித்து அதனை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நாளை தினம் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளன.

இதனடிப்படையில், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, எஸ்.துரைராஜா, முர்து பெர்னாண்டோ ஆகிய மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளன.

சட்டத்தரணி சரித்த குணரத்ன முதலில் இந்த வழக்கு சம்பந்தமான அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உட்பட அரசியல் கட்சிகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் என 10க்கும் மேற்பட்டோர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் மீண்டும் கூட்டப்பட வேண்டும் எனவும் மனுதார்கள் கூறியுள்ளனர்.

மூன்று மாதத்திற்குள் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டப்படாத காரணத்தினால், பொதுமக்களின் உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் மனுதார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், சட்டமா அதிபர் ஆகியோர் மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.