Header Ads



ஏப்ரல் 21 தாக்குதல் - ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்று (14) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்ரமசிங்க ஆணைக்குழுவின் இன்று சாட்சியமளித்தார்.

தாக்குதல் நடத்தப்பட்ட காலப்பகுதியில் மேல் மாகாண வடக்கு பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக அவர் கடமையாற்றினார்.

தேவாலயங்களின் பாதுகாப்பு தொடர்பில் தாம் வழங்கிய ஆலோசனைகள் எவையும் கடான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தாக்குதல் நடத்தப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, தமக்கு தொலைபேசியூடாகத் தெரிவித்ததாக இன்று சாட்சியமளித்த வசந்த விக்ரமசிங்க கூறினார்.

தகவல்கள் குறிப்பிடப்படும் ஆவணங்களை முதலில் எப்போது கண்டீர்கள் என ஆணைக்குழு வினவியபோது, 2019 ஏப்ரல் 9ஆம் திகதி வீபீஎன் தொழில்நுட்பம் ஊடாக நாட்டின் சில கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் இந்திய தூதரகத்திற்கு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் எனக்குறிப்பிடப்பட்டு கடிதமொன்று கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் சஹ்ரான் ஹஷீம் மற்றும் ரில்வான் மொஹமட் ஆகியோரின் பெயர், அடையாள அட்டை இலக்கம் மற்றும் புகைப்படங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் அது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு குறிப்பிடப்பட்டதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மேல் மாகாண தெற்குப் பிரிவிற்கு குறித்த பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவருக்கு வாய்மொழி மூலமும் எழுத்து மூலமும் தொலைநகல் மூலமும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து 16 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக வசந்த விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

மேல் மாகாண வடக்குப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அப்போது விடுமுறை சென்றிருந்தமையால் அந்தக் காலப்பகுதியில் தாம் அந்தப் பிரிவில் கடமையாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் இவ்வாறான ஆவணமொன்று பொலிஸ் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தேசபந்து தென்னக்கோனின் விடுமுறை எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என இதன்போது ஆணைக்குழு வினவியது.

இது குறித்து பொலிஸ் மா அதிபரே தீர்மானிப்பதாகவும் எந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு விடுமுறை அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து தமக்குத் தெரியாதெனவும் வசந்த விக்ரமசிங்க கூறினார்.

No comments

Powered by Blogger.