Header Ads



2 வது, 3 வது கொரோனா தாக்குதல்களுக்கு நாடுகள் தயாராக வேண்டும் - Dr Hans Kluge

கொரோனாவுக்கு தடுப்பூசி ஒன்று தயாராகும் வரையில் இரண்டாவது மூன்றாவது கொரோனா தாக்குதல்களுக்கு நாடுகள் தயாராக இருக்கவேண்டும் என உலக சுகாதார மைய நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்!

உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குநரான Dr Hans Kluge, கொரோனா இப்போதைக்கு போகப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

உலகம் முழுவதிலுமுள்ள அறிவியலாளர்கள் கொரோனாவுக்கெதிரான தடுப்பூசி ஒன்றை எப்படியாவது தயாரித்துவிடுவதென கங்கணம் கட்டிக்கொண்டு முழு மூச்சுடன் முயற்சியில் இறங்கியிருந்தாலும், தடுப்பூசி தயாராக இன்னும் பல மாதங்கள் வரை ஆகலாம் என்றே தோன்றுகிறது.

உலக சுகாதார மைப்பின் ஐரோப்பிய கூட்டம் ஒன்றில் பேசிய Dr Kluge, முதல் கொரோனா அலை முடிவுக்கு வந்தபின்னரும், நாடுகள் எதிர்காலத்தில் வர இருக்கும் கொரோனா கொள்ளைநோய்களுக்குத் தயாராக இருப்பது மிகவும் அவசியம் என்று கூறினார்.

முதல் கொரோனா அலை முடிவடைந்தாலும், ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத வரையில், இது அடுத்து வரும் கொரோனா அலைகளை எதிர்கொள்ளத் தயாராகும் காலகட்டம் என்றே கருதவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பாவின் சில நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஏற்கனவே சில நாடுகளில் பள்ளிகளும் கடைகளும் திறந்தாயிற்று.

ஆனால் பிரித்தானியாவில் கொரோனா உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்னமும் பிரித்தானியா கடுமையான ஊரடங்கின் கீழ்தான் இருக்கிறது.



மேலும், சுகாதாரம்தான் பொருளாதாரத்தை நடத்தும் சாரதி என்று கூறியுள்ள Dr Kluge, சுகாதாரம் இல்லையென்றால் பொருளாதாரமும் இல்லை என்பதை நாம் கண்ணாரக் கண்டுகொண்டிருக்கிறோம் என்றார்.

சுகாதாரம் இன்றி தேசிய பாதுகாப்பும் இல்லை என்றார் அவர். ஒன்றிணைந்து போராடி இந்த கொள்ளைநோயிலிருந்து மீண்டபின்னரும், நாம் ஒருபோது மறக்கக்கூடாத ஒரு பாடம் இது என்கிறார் அவர்.

No comments

Powered by Blogger.