Header Ads



கொவிட் - 19 கொடூரத்துக்குள்ளும், தொடரும் பழிவாங்கும் படலம்

- முல்லை முஸ்பர் - 

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளினை ஈஸ்டர் பண்டிகை நாளாகக் கருதி உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்துவ மக்கள் உயிர்த்த ஞாயிற்றுக் கிழமையினை விஷேட தினமாகக் கொண்டாடி மகிழ்வது வழக்கம். உயிர்த்த ஞாயிறன்று அதாவது, 2019.04.21 அன்று இலங்கை திருநாட்டின் வரலாற்றில் நடந்தேறிய மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதலாக அத்தாக்குதல் பதிவாகியது.

இலங்கை தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் இலங்கைத் தீவின் தலைவராகவும் அறியப்பட்ட சஹ்றான் ஹாஷிமின் தலைமையில், ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் அங்கத்தவர்கள் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட எட்டுப் பேர் மேற்கொண்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக, மரணித்த 269 அப்பாவிப் பொதுமக்களின் மரணத்துக்கும் அவர்களே பொறுப்பாளிகளாக ஆக்கப்பட்டனர்.

சஹ்றான் ஹாஷிம் என்பவர் பூர்வீகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, அவரது இளமைப் பருவத்தில் மிக்க ஆற்றல் உள்ள ஒரு மாணவனாக தனது சமயக் கற்கை நிலையத்தில் (மதரஸா) விளங்கினார். பின்னர் இஸ்லாம் மார்க்கம் குறித்த சஹ்றான் ஹாஷிமினது நெறிமுறையற்ற மற்றும் தவறான சித்தாந்தங்கள் காரணமாக, அந்தச் சமயக் கற்கை நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், சஹ்றான் ஹாஷிம் தனது சமய ரீதியான தீவிரப் பிரச்சாரப் பணியினை, 2016 ஆம் ஆண்டு சமூக ஊடகங்களில் ஒளிப்பதிவு காணொளிகளை பதிவேற்றம் செய்வதன் மூலம் வெளிப்படையாகவே ஆரம்பித்தார். குறிப்பிட்ட விடயம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் மூலமாக, இலங்கை புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிக்கை இடப்பட்டும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர், தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்றான் மற்றும் அவரது குழுவினருக்கும், சூபி முஸ்லிம்களுக்குமிடையில் காத்தான்குடியில் ஓர் உள்ளக மோதல் இடம்பெற்றது. குறிப்பிட்ட சம்பவமானது கையில் வாள்கள் ஏந்திக்கொண்டு நடைபெற்றதற்கான சான்றுகள் சஹ்றானிடமும் அவனது சகாக்களிடமும் இருந்தன. இந்த மோதலைத் தொடர்ந்து, காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் “சஹ்றான் ஹாஷிம் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினை இலங்கையில் நிறுவுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்” எனத் தெரிவித்து, பொலிஸார் அவனைக் கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர். ஆனால் அது தொடர்பில் எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெறுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், இனந்தெரியாத குழுவினரால் புத்தர் சிலை ஒன்று சேதமாக்கப்பட்டிருந்தது. பின்னர் குறிப்பிட்ட புத்தர் சிலையுடைப்பு விவகாரத்தோடு சஹ்றான் ஹாஷிமுக்கு தொடர்பு இருந்தமை கண்டறியப்பட்டது. திரு.தஸ்னீம் என்றழைக்கப்படும் ஒரு உள்ளூர் முஸ்லிம்  நபர் பொலிஸாருக்கு இடத்தின் அமைவிடம், 125 கிலோகிராம் வெடிபொருட்கள் மற்றும் 99 வெடிகுண்டுகள் தொடர்பான ஆதாரங்களை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், இந்த ஆதாரங்களினை வழங்கியது தொடர்பில் பொலிஸார், திரு.தஸ்னீமினதோ அல்லது அவரது குடும்பத்தாரினதோ பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியிருந்தனர். அதன் காரணமாக அவர் வீட்டில் இருந்தபோது ஒருநாள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, இன்று வரையில் அவரது இடது கால் முடங்கிய நிலையில் உள்ளார். குறிப்பிட்ட விடயம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒருவர்தான் 2019.04.21 அன்று சங்கிரில்லா ஹோட்டலில் தற்கொலைத் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைதாரி இல்ஹாம் இப்ராஹீம் ஆவார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், அத்தோடு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர் கூட கிறிஸ்தவ ஆலயங்கள், சுற்றுலாத்தளங்கள்  என பல இடங்களில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதென, இந்திய புலனாய்வுத் துறையினரால் இலங்கை புலனாய்வுத் துறைக்கு தகவல் வழங்கப்பட்டிருந்த போதிலும், பாதுகாப்பு அதிகாரிகளினால் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று ஐந்து நாட்களின் பின்னர்,  முஸ்லிம் குடும்பம் ஒன்று வழங்கிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் சஹ்றான் ஹாஷிமின் குடும்பத்தினரை கண்டுபிடிப்பதற்காக சென்றபோது, சஹ்றான் குடும்பம் தற்கொலை செய்துகொண்டது.

மேலே குறிப்பிட்டுள்ள சம்பவங்களின் தொடர்ச்சியானது தெளிவாக சுட்டிக்காட்டுவது யாதெனில், முஸ்லிம் சமூகம் குறிப்பிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட விடயங்களில், பாதுகாப்புப் படைக்கும் அரசுக்கும் அவர்களது பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளமையாகும். ஆனால், இன்னமும் இந்த நாட்டு முஸ்லிம்களை ஒரு பயங்கரவாத சமூகமாக, இனவாதக் குழுக்கள் அடையாளப்படுத்துகின்றன. இவ்வாறு முஸ்லிம் சமூகத்தை ஒரு பயங்கரவாத சமூகமாக சித்தரித்து, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பாரியதொரு வாக்குச் சேகரிக்கும் ஆயுதமாக முஸ்லிம் மக்களை சிங்கள மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் காண்பிக்கப்பட்டது.

முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள் மீதும் முஸ்லிம் சமூகத்தின் மீதும் எவ்வித அடிப்படையுமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது, முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்ததோடு, குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று, நிரபராதிகள் என உறுதிப்படுத்தப்படும் வரையில் பதவிகளை பொறுப்பேற்றிருக்கவில்லை.

இந்த இனவாத குழுக்களினது பிரதான இலக்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே காணப்பட்டார். ஏனெனில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது, வில்பத்துக் காடழிப்பு மற்றும் நிலச்சுவீகரிப்பு என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே தொடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது அப்போதிருந்த எதிர்க்கட்சியினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட பிரமாண்டமான பிரச்சாரம் தொடர்பில், இலங்கை பொலிஸார் ரிஷாட் பதியுதீன் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இரண்டு முஸ்லிம் ஆளுநர்கள் மீதும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில், முறைப்பாடுகளை பதியுமாறு பகிரங்கமாக கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதன் பிறகு ஏறத்தாழ ஒரு மாதத்தின் பின்னர், பதில் பொலிஸ்மா அதிபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்பு இருந்ததா? என்பது தொடர்பான உத்தியோகபூர்வ, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் ஒப்பமிடப்பட்ட கடிதத்தினை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அனுப்பினார். குறிப்பிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை படி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் உயிர்த்த ஞாயிறு  தற்கொலைத் தாக்குதலுக்கும், வேறு எந்தவிதமான பயங்கரவாத தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இருந்திருக்கவில்லை என தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இறுதியாக குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நாட்டு முஸ்லிம்களும் முஸ்லிம் சமூகமும் பாதுகாப்புத் துறையினருக்கும், அரசாங்கத்துக்கும் விசாரணைகளை முன்னெடுப்பதில் முற்றுமுழுதான ஒத்துழைப்பினை வழங்கியிருந்த போதிலும் கூட, பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், இனவாதப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்டுகின்றன. முஸ்லிம் சமூகமானது பயங்கரவாத சமூகமாக அடையாளப்படுத்தப்படுவதும் அச்சமூகத்தை, வாக்கு வாங்கியை அதிகரிக்க ஒரு துரும்புச் சீட்டாகவும் பயன்படுத்தப்படுகிறார்கள். இந்த முஸ்லிம் சமூகம் குறித்த இனவாதப் பிரச்சாராம், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல், தற்போதைய அரசாங்கத்தின் வெற்றிக்கும் அது கால்கோளாய் அமைந்துது. உண்மையில் இதனை மிக தெளிவாக விபரிப்பதற்கு முடியும். அதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றபோது, பாதுகாப்பு அமைச்சுக்குப் பொறுப்பாகவும் அராங்கத்தின் தலைவராகவும் இருந்த முன்னாள் ஜனாதிபதி, இன்று புதிய அரசோடு கைகோர்த்துக்கொண்டு, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதானது, அதனை தெளிவாகப் புலப்படுத்துகின்றது.

புதிய அரசாங்கம் மற்றும் புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் என தெரிவித்து, ஏழு நபர்கள் இவ்வருட உயிர்த்த ஞாயிறு காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஏழு நபர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் உடன்பிறந்த சகோதரரும், மிகவும் பிரபல்யமான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வும் அடங்குவர். இந்தக் கைதானது ஒரு நன்கு திட்டமிடப்பட்டு நடாத்தப்படுகின்ற அரசியல் பழிவாங்கல் என்பதனையே நிரூபித்து நிற்கின்றது.

மேலும் நம்பத்தகுந்த மூலாதாரங்களினூடாக அறியக் கிடைத்ததாவது யாதெனில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 12,000 இடம்பெயர்ந்த வாக்காளர்களை அவர்களது சொந்த ஊரில் வாக்களிக்கச் செய்வதற்கு பேரூந்து போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகும். அத்தோடு, இவை அனைத்தும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினதும், நிதி அமைச்சரினதும் அனுமதியுடனேயே நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிப்பதாவது, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை உயிர்த்த ஞாயிறு தாக்குதலோடு தொடர்புபடுத்தி, கைது செய்வதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதனை நிரூபிப்பதற்கான எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லாததினால் அது கைகூடவில்லை. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனைத் தொடர்ந்து, தான் உடனடியாகக் கைது செய்யப்படுவதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளர்.   

1 comment:

  1. சிறப்பான கட்டுரை..
    அடிக்கடி பேசப்பட வேண்டிய கருத்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.