Header Ads



மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இக் கலந்துரையாடலில் மக்களின் பாவனைக்கு முக்கியமான பொருளாக  அரசி காணப்படுவதால் அரிசி உற்பத்தி செய்யப்படும் நெல் ஆலைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இக் கலந்துரையாடல் தொடர்பில் பிரதமர் அலுவலகம் இன்று 09 வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரிசி பற்றாக்குறை ஏற்படாமலிருப்பதற்காக நெல் உற்பத்தியில் ஈடுபடும் பிரதான ஆலைகளை தொடர்ந்தும் திறந்து வைப்பதற்கு ஆளுந்தரப்பு உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலை காரணமாக மக்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

எனினும் தற்போது வரை நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. அதற்கேற்க வகையில் நெல் உற்பத்தி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்க்கைக்கு அரசி மிக முக்கிய  பொருள் என்பதால் அதனை அத்தியாவசிய பொருளாக பிரகடனப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று மீன் பிடித்துறையினுள் தோன்றியுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவதானம் செலுத்தினர். மீன்பிடித் திணைக்களத்துடன் கலந்துரையாடி துரிதமாக அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்குமாறு இதன் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிதி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார். அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்று; மருந்து என்பவற்றை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தை மேலும் விஸ்தரிப்பது தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச, அமைச்சர்களான விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, பவித்திரா வன்னியாராச்சி, மஹிந்தானந்த அலுத்கமகே, அநுர பிரயதர்ஷன யாப்பா ஆகியோரும் றோஹித அபே குணவர்தன,  தயாசிறி ஜயசேகர, பியல் நிஷாந்த, செஹான் சேமசிங்க, காஞ்சன விஜேசேகர, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்,  இராணுவத்தளபதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

1 comment:

  1. இந்த படத்தைப் பார்த்துக்கொண்டு ஒரு ஏப்பம் விடவேண்டியது தான்.பிரச்சினைகள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல் அகன்று விடும்.

    ReplyDelete

Powered by Blogger.