Header Ads



‘’இறந்த உடலிலிருந்து, கொரோனா தொற்று பரவாது’’ - சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்


தமிழ்நாட்டில் மேலும் 43 பேருக்கு இன்று கொரோனா உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை அந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1520ஐத் தொட்டுள்ளது. 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மாநில சுகாதாரத் துறை திங்கட்கிழமை மாலை வெளியிட்ட தகவல்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 43 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 46 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1520 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 457 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நோயால் இன்று இருவர் உயிரிழந்திருக்கும் நிலையில், மொத்த உயிரிழப்பு 17ஐத் தொட்டுள்ளது. தற்போது 1043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 6 பேர் சற்று கடுமையான உடல்நல பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழ்நாட்டிலேயே சென்னை நகரில்தான் இந்நோயால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 303 பேர் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து வாரணாசிக்கு புனித யாத்திரை செய்தவர்கள், அங்கிருந்து சிறப்புப் பேருந்து மூலம் தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அப்படி வந்த 127 பேரில் 2 பேருக்கு அந்நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று தொடர்பான புள்ளிவிவரங்களைத் தெரிவித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்கிய விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டில் ஒரு கிட்டை 600 ரூபாய்க்கு வாங்கியிருக்கும் நிலையில், ஆந்திரப் பிரதேசம் 700 ரூபாய்க்கு வாங்கியிருப்பதாகவும் ஆனால், அங்கிருக்கும் எதிர்க்கட்சிகள் டெஸ்ட் கிட் வந்ததற்காக முதல்வரைப் பாராட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டார். மத்திய அரசு சொன்ன விலைக்கு, மத்திய அரசு குறிப்பிட்ட நிறுவனத்திலேயே ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

கொரோனா தாக்கி உயிரிழந்த மருத்துவரின் உடலைப் புதைப்பதற்கு அப்பகுதிவாசிகள் எதிர்ப்புத் தெரிவித்தது குறித்துப் பேசிய அமைச்சர், இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் இது தொடர்பாக இருபது பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இறந்த உடலிலிருந்து யாருக்கும் இந்நோய் பரவாது என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் இதுவரை சமூகப் பரவல் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

2 comments:

  1. இவர் சொன்னது சரியாக இருக்கலாம்। இருந்தாலும் புதைக்கும்போது சரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்। இலங்கையில் அதட்குரிய நடைமுறை இருப்பதாக தெரியவில்லை। இருந்தாலும் நடைமுறை படுத்துவார்கள் என்று சொல்ல முடியாது।

    ReplyDelete
  2. இந்த விடயம் தொடர்பாக விசேட மருத்துவர்களின் ஆலோசனை தான் எமக்குத் தேவை.

    ReplyDelete

Powered by Blogger.