Header Ads



கொரோனா நிலவரம் - ஜா எலயில் சிறப்பு நடவடிக்கை

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றுக் காரணமாக இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளது.

இன்று இரவு 8.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் ஜா எல பகுதியின் 6 பேர் உட்பட 8 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இந்த எண்ணிக்கை இவ்வாறு உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்நிலையில் ஜா - எல பகுதியில் அடையாளம் காணப்பட்ட வைரஸ் தொற்றாளர்களின் பின்னணி உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அப்பகுதியில் சுகாதார, உளவு மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் விஷேட வேலைத் திட்டங்களை நடை முறைப்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாரத்தின் ஆரம்பத்தில் ஜா - எல பகுதியில் முச்சக்கர வண்டி சாரதியான இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை ராகம வைத்தியசாலையில் கண்டறியப்பட்டது.

குறித்த முச்சக்கர வண்டி சாரதிக்கு  பெரும் எண்ணிக்கையிலான நபர்களுடன் தொடர்புகள் இருந்த நிலையில், அவரது தொடர்பாடல் வலையமைப்பை கருத்தில் கொண்டு ஜா-எல சுதுவெல்ல, பாரிஸ் பெரேரா மாவத்தை, கறுப்புப் பாலம் பகுதி உள்ளிட்டவை முடக்கப்பட்டன.

அந்த சாரதி கொழும்பு மருதானை பகுதிக்கும் வந்து சென்றுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு  சுகாதார தரப்பும் பாதுகாப்புத் தரப்பும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கின.

எனினும் அதனை  பொருட்படுத்தாது, முழு பிரதேசமெங்கும் உலாவிய போதைப் பொருளுக்கு அடிமையான 23 பேர் கடற்படையின் உளவுப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு ஒலுவில் கடற்படை முகாமில் உள்ள  தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

அவர்களை அங்கு அழைத்து செல்ல முன்னர், அவர்களின் சளி மாதிரிகள் பி.சி.ஆர். எனும் கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்காக எடுக்கப்பட்டன. அதன் முடிவுகள் நேற்று வெள்ளிக்கிழமை பின் இரவில் வெளிப்படுத்தப்பட்டன. அதன் போது, அந்த 23 பேரில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அவர்களில் ஒருவரின் மனைவிக்கும் கொரோனா தொற்றிருப்பது ராகம வைத்தியசாலை பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரே இரவில் ஜா எல பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்த நிலையில், நேற்று அப்பகுதியில் விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கடற்படையினரின் உதவியுடன் சுகாதார அதிகாரிகள் இந் நடவடிக்கைகளை எடுத்தனர்.

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 6 பேரும் பழகிய கம்பஹா மாவட்டத்தின் ஜா எல உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 52 பேர் ஓரிடத்தில் திறட்டப்பட்டு, அவர்களின் சளி மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்காக பெறப்பட்டன.  இதில் 41 ஆண்களும் 6 சிறுவர்களும் 5 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களின் மாதிரிகள் கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்கு அனுப்பட்ட நிலையில், அவர்கள் ஒலுவில் கடற்படை  முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இன்று அழைத்து செல்லப்பட்டனர்.

இந் நிலையிலேயே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஜா எல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விஷேட வேலைத் திட்டங்கள் விஷேடமாக நடைமுறைபப்டுத்தப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.