Header Ads



அரசியல் இலாபம் பெற, மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசியல்வாதிகள் - தேர்தல்கள் ஆணைக்குழு கவலை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசியல்வாதிகளில் சிறு பிரிவினர் அதன் மூலம் அரசியல் இலாபம் பெற முயற்சிக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முழு நாடும் கொரோனா வைரஸ் ஒழிப்பிற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசியல் பிரசார செயற்பாடுகளிலிருந்து விலகிக் கொள்ளுமாறும் ஆணைக்குழு அனைவரிடமும் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

இதற்கு முன்னெப்போதும் இல்லாதவாறு கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், வியாபாரிகள், சமூக சேவையாளர்கள் மற்றும் ஏனைய அனைவருக்கும் எமது கௌரவத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எவ்வாறிருப்பினும் இவ்வாறு நிவாரணங்களை வழங்குபவர்களில் அரசியல்வாதிகளில் சிறு குழுவினர் நிவாரணங்களை வழங்கும் போது புகைப்படங்களை எடுத்து தம்மை பிரசாரப்படுத்திக் கொள்கின்றனர். அத்தோடு சமூக வலைத்தளங்களிலும் இவற்றைப் பதிவிடுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அவர்கள் அரசியல் இலாபம் பெற முயற்சிக்கிறார்கள் என்பது கண்காணிக்கப்பட்டுள்ளது.

முழு சமூகமும் கொரோனா வைரஸ் பரவலை ஒழிப்பதற்கு பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு அரசியல் இலாபம் பெறும் வகையில் செயற்படுவது சிறந்ததல்ல என்பதை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

எனவே இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து விலகி முழுமையாக கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைளில் ஈடுபடுவதற்காகு அனைவரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். 

(எம்.மனோசித்ரா)

1 comment:

Powered by Blogger.