Header Ads



மூச்சுக்காற்றின் மூலமும், கொரோனா பரவும் - அமெரிக்க தேசிய சுகாதார அமைப்பு

கொரோனா பரவல் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வந்தாலும் மக்கள் சமூகத்தில் இருந்து விலகி இருந்தலே அதிமுக்கியமான தற்காப்பாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

உலக அளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு எண்ணிக்கை சீனா, இத்தாலியைவிட அமெரிக்காவிலேயே அதிகமாக உள்ளது. 2 லட்சத்து 77 ஆயிரத்து 985 பேர் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,146 பேர் பலியாகியுள்ள நிலையில் 12 ஆயிரத்து 283 பேர் குணமாகியுள்ளனர்.

இருப்பினும், அந்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்தே வருகிறது. இதன் காரணமாக ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.

இப்படி இருக்கையில், கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில், அமெரிக்க தேசிய சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் இருமல், தும்மலினால் மட்டுமல்லாமல் அவர்களது மூச்சுக்காற்றின் மூலமும் பரவும் என எச்சரித்துள்ளது.

இதனடிப்படையிலேயே மக்கள் அனைவரும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதேபோல, அந்நாட்டு தேசிய அறிவியல் அகாடமியும் கொரோனா பரவல் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்நிறுவனமும், நோயாளிகள் பேசுவதம் மூலமும், சுவாசம் மூலமும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகக் கூறியுள்ளது.

முன்னதாக, கொரோனா தாக்கம் உள்ளவர்கள் இருமும் போது 6 மீட்டர் தூரமும், தும்மும் போது 8 மீட்டர் தூரமும் பரவும் என மசுசூஸட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உலக சுகாதார அமைப்போ, ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என கூறியிருந்தது.

கொரோனா தொடர்பாக ஏராளமான ஆராய்ச்சிகள், ஆய்வுகள் நடைபெற்று வந்தாலும், மக்கள் அனைவரும் வீடுகளிலேயே தனித்திருந்து, கொரோனா பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதே ஒருமித்த வலியுறுத்தலாக உள்ளது.

No comments

Powered by Blogger.