Header Ads



சட்ட விரோத மதுபான உற்பத்தியாளரை கைதுசெய்ய வேண்டாமென பிக்கு விடுத்த, கோரிக்கையை மீறிய பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் நிலையத்திற்குள் தாக்குதல்

(எம்.எப்.எம்.பஸீர்)

சட்ட விரோத மதுபான உற்பத்தியாளர் ஒருவரைக் கைதுசெய்ய வேண்டாம் என தேரர் ஒருவர் விடுத்த கோரிக்கையை மீறி செயற்பட்டமைக்காக,  பொலிஸ் பரிசோதகர் தர அதிகாரி ஒருவர் மீது பொலிஸ் நிலையத்துக்குள்ளேயே தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவமொன்று வாரியப்பொல பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது. 

வாரியப்பொல பொலிஸ் நிலையத்துக்கு புதிதாக கடமைகளுக்காக சென்ற, அப்பொலிஸ் நிலையத்தின் சுற்றிவளைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி இரவு, பிரதேசத்தின் சட்ட விரோத மதுபான உற்பத்தியாளராக கருதப்படும் சந்தேக நபர் ஒருவர், குறித்த பொலிஸ் அதிகாரிக்கு தொலைபேசியில் அழைத்து, தன்னை  கைதுசெய்ய வேண்டாம் என கோரியுள்ளார்.

இது குறித்து உடனடியாக ஏனைய அதிகாரிகளையும் தெளிவுபடுத்தியுள்ள பொலிஸ்  பரிசோதகர், அது தொடர்பில் பொலிஸ் புத்தகத்திலும் தேவையான பதிவுகளை இட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், நேற்று 20 ஆம் திகதி காலை, பிரதேசத்தின் விகாரை ஒன்றின் விகாரதிபதி எனக் கருதப்படும் தேரர் ஒருவர்,  தொலைபேசியில் அழைத்து,   பொலிஸ் புத்தக பதிவுகளை நீக்குமாரும், சந்தேக நபரை கைது செய்ய வேண்டாம் எனவும் பொலிஸ் பரிசோதகரிடம் கோரியுள்ளார்.

இதேவேளை வேறு கடமைகளுக்காக வெளியே சென்ற போது, குறித்த பொலிஸ் பரிசோதகரை தேரர் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும்,அன்றைய தினம்  வெளியே கடமைகளை முடித்துவிட்டு  குறித்த பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் நிலையம் வந்த போது, அங்கு குறித்த தேரர், சட்ட விரோத மதுபான உற்பத்தியாளர் என கருதப்படும் நபர் உள்ளிட்ட பலர் இருந்துள்ளனர்.

இந்நிலையில்,  வாரியப்பொல பொலிஸ் நிலையத்தின், சிறைக் கூடத்துக்கு அருகே, தேரருடன் வந்த நபர் ஒருவர் குறித்த பொலிஸ் பரிசோதகரை சுவருடன் சேர்த்து பிடித்து தாக்கிகியுள்ளதாகவும், இதன்போது உடன் இருந்த தேரர் உள்ளிட்டோர் அந்த பொலிஸ் அதிகாரியை மிகக் கேவலமாக திட்டியதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும்  தாக்குதல் நடாத்திய நபரை உடனடியாக பொலிஸார் கைது செய்துள்ளனர். சுவருடன் சேர்த்து தாக்கும்போது பொலிஸ் பரிசோதகரின் தலைப் பகுதியில்  உபாதை ஏற்பட்டுள்ள நிலையில், அவர் நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் இன்று வாரியபொல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில், பொலிஸ் பரிசோதகர் மீதான தாக்குதலின் போது, அங்கு சென்ற,  சட்டவிரோத கோரிக்கையை முன்வைத்த தேரர் கைதுசெய்யப்படாத நிலையில், அது குறித்து பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்னவை வீரகேசரி வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், குறித்த சம்பவத்தில் கூறப்படும் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விசாரணை தகவல்களுக்கு அமைய  மேலதிக கைதுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என சுட்டிக்காட்டினார். 

1 comment:

Powered by Blogger.