April 13, 2020

அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகள்

- Mahibal M. Fassy - 

உலக மக்கள் இன்று வெறும் கண்ணுக்குத் தெரியாத ஓர் நுண்ணுயிர்க் கிருமிக்கு அஞ்சி தம் வீடுகளில் அடங்கிக் கிடக்கின்றனர்.

ஆணவங் கொண்டு உலகெங்கும் அலைந்து அநியாயங்கள் புரிந்த வல்லரசுகள் இழிந்த நிலையில் காலனின் முன் கதி கலங்கி நிற்கின்றன.

கொத்துக் கொத்தாக இறந்து குவியும் மனித உயிர்களைக் காக்க வழியின்றி  உலகமே அடைக்கலம் தேடி நிற்கிறது.

விடை தேடி நிற்கும் வினாவுக்கு முன், அனைத்துக்கும் ஆற்றல் மிக்கவன், சர்வாகலா வல்லவன் அல்லாஹ் ஒருவனே என்பதை, 1,400 வருடங்களுக்கு முன் புனித அல் குர்ஆனில் மிகத் தெளிவாகச்  சொல்லியுள்ளதை இன்றைய மார்க்க அறிஞர்கள் நமக்கு ஞாபகமூட்டுகிறார்கள்.

ஆம், அது தினமும் நாம் அரபியில் ஓதி விட்டு வைத்து விடுவோமே புனித குர்ஆன்,  அதில்தான் அது பதிவாகியுள்ளது.

உலகின் அணைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு எங்கே, யாரிடம் உள்ளது என ஏங்கித் தவிக்கும் மக்களுக்கு இறைவன் யார், எப்படிப்பட்டவன் என்பதை அறிமுகப்படுத்த வேண்டிய கடப்பாடு முஸ்லிம்களுக்கு உள்ளது.

அவர்கள் சுமந்திருக்கும் இறுதி வேதம் அவர்களுக்காக மட்டும் இறக்கி அருளப்பட்டதல்ல.  அகிலத்தாருக்குமானது.   அதனை தாமும் சரியாக பின்பற்றி  பிறருக்கும்  அறிமுகப்படுத்தாது விடுவதன் காரணமாக அவனது கோபத்திற்கும் அவர்களது வெறுப்பிற்கும் இலக்காக நேரிடும்.

எனவே, இதில் இருந்து நாமும் தப்பி, உலகின் அனைத்து மொழிபேசும் மக்களுக்கும் அல்லாஹ்வை அறிமுகப்படுத்தி, அவர்கள் அவனோடு நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு தம் தேவைகளை நிறைவேற்றி சீரான வாழ்வொன்றை அமைத்துக்கொள்ள உதவுவது நம் கடமையாகும்.

அந்த வகையில் புனித அல் குர்ஆனின் அந் நம்லு என்ற அத்தியாயத்தின் 60 முதல் 66 வரையான வசனங்கள் பெரிதும் உதவக்கூடியதாகும்.  அவற்றை சிந்தித்து உணர்வதற்காக இங்கு முன் வைக்கப்படுகிறது:

* அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள். 
(அல்குர்ஆன் : 27:60)

* இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். 
(அல்குர்ஆன் : 27:61)

* கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும். 
(அல்குர்ஆன் : 27:62)

* கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய “ரஹ்மத்” என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன். 
(அல்குர்ஆன் : 27:63)

* முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.” 
(அல்குர்ஆன் : 27:64)

* (இன்னும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.” 
(அல்குர்ஆன் : 27:65)

* ஆனால் மறுமையைப் பற்றிய அவர்களுடைய அறிவோ மிகக் கீழ்நிலையிலே உள்ளது; அவர்கள் அதில் (பின்னும்) சந்தேகத்திலேயே இருக்கின்றனர்; அது மட்டுமா? அதைப்பற்றி அவர்கள் குருடர்களாகவே இருக்கின்றனர்."  
(அல்குர்ஆன் : 27:66)


தாம் வணங்கி வழிபடத் தகுதியானவன் இறைவன் ஒருவனே என நம்பும் ஒருவன் தனது ஈருலக சாந்திமயமான வாழ்வுக்கான  வழிகள் அனைத்தையும் அங்கே ஒருங்கே காண்பான்.

2 கருத்துரைகள்:

Dear Mr. Mahibal M. Fassy. Would you please post your contact mobile or e.mail id please.

Yes brother. 0777 655 603
mahibalmfassy@gmail.com

Post a Comment