Header Ads



நாம் அனைத்து சந்தர்ப்பத்திலும், மக்களுக்கு சார்பாகவே செயற்படுவோம்

(எம்.மனோசித்ரா)

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கத்துவம் வகிக்கின்ற உறுப்பினர்கள் மூவரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்றால் ஆணைக்குழு அவசியமற்றதாகும்.

நாம் பல்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் இறுதியில் மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதே எமது ஒரே இலக்காகும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயங்களில் வெவ்வேறு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாலும்,  உறுப்பினர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாலும் ஒரே நோக்கில் ஆணைக்குழுவினால் பயணிக்க முடியாமலிப்பதாகக் கூறப்படுகின்றமை உண்மையா என்று ஊடகவியலாளர்களும் அரசியல் ஆர்வலர்களும் கேள்வியெழுப்புவதாகக் குறிப்பிட்டிருக்கும் மஹிந்த தேசப்பிரிய, அதற்கு பதிலளிக்கும் வகையில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தனது நிலைப்பாட்டை பதிவிட்டிருக்கிறார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஏன் வெவ்வேறு நிலைப்பாட்டில் உள்ளனர் ? இவ்வாறு காணப்பட்டால் ஆணைக்குழு செயலற்றதாகிவிடும். அதனால் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு ஊடகங்களிலும் சமூக வைத்தளங்களிலும் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றமையையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எனவே தான் இதுபற்றி எனது கருத்தினை தெரிவிக்க விரும்புகின்றேன்.

செய்திக்காக என்னை நேர்காணல் செய்த இரு ஊடகவியலாளர்களால் இதே கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நான் ,'மூன்று உறுப்பினர்களை கொண்ட ஆணைக்குழு ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்றால்  அல்லது மூவரும் எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் தான் இருப்பார்கள் என்றால் அந்த மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கிய ஆணைக்குழு அவசியமற்றதாகும்.' என்று பதிலளித்தேன்.

அவ்வாறிருக்க வேண்டும் என்றால் சிறிது காலத்திற்கு முன்னர் இந்தியாவில் காணப்பட்டதைப் போன்று ஒரு அங்கத்தவரைக் கொண்ட ஆணைக்குழு அல்லது பழைய முறைமையில் தேர்தல்கள் திணைக்களத்தை ஸ்தாபிக்க முடியும்.

ஆணைக்குழுவில் இடம்பெறும் கலந்துரையாடல்களில் பெரும்பாலும் ஒவ்வொருவராலும் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படும். எனினும் அவ்வாறு வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படும் போது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எம்மால் ஒருமித்த முடிவுகளுக்கு வர முடிந்தது. இவை ஜனநாயக ரீதியானதும் சட்ட ரீதியானதுமாகும். ஆனால் மக்களின் இறையான்மையைப் பாதுகாப்பதே எமது இறுதி இலக்காகும்.

எனவே ஆணைக்குழுவில் வெவ்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் நாம் ஒரே இலக்கிலேயே செயற்படுகின்றோம். நாம் அனைத்து சந்தர்ப்பத்திலும் மக்களுக்கு சார்பாகவே செயற்படுவோம். மக்களின் பாதுகாப்பு மற்றும் வாக்குரிமைக்காக முன்னின்று செயற்படுவோம். 

No comments

Powered by Blogger.