Header Ads



முஸ்லிம்களின் இன்றைய, நிலை இதுதான்

- எம்.சஹாப்தீன் -

மாமியார் உடைத்தால் மண் குடம். மருமகள் உடைத்தால் பொன் குடம். இதுதான் முஸ்லிம்களின் இன்னறைய நிலையாக இருக்கின்றது, முஸ்லிம்கள் மட்டும்தான் சட்டத்தை மீறுவது போன்று பேசுகின்றார்கள்;. முஸ்லிம்களில் சிலரும், முஸ்லிம் அல்லாதவர்களில் சிலரும் சட்டத்தை மதிக்காமல் நடக்கின்றார்கள். முஸ்லிம்களில் ஒருசிலர் சட்டத்தை மீறினால் முழுச் சமூகமும் சட்டத்தை மீறியது போன்று பேசுகின்றார்கள். எழுதுகின்றார்கள். மாற்று இனத்தவர்களில் உள்ள இனவாதிகள்தான் இப்படி எழுதுகின்றார்கள் என்றால், முஸ்லிம்களில் சிலரும் அறிவு மேதைகள் போன்று முஸ்லிம்கள் சட்டத்தை மீறுகின்றார்கள் என்று நீதி சொல்லுகின்றார்கள்.

இக்காலப் பகுதியில் முஸ்லிம் அல்லாதவர்கள் சட்டத்தை மீறவில்லையா என்று கேட்கின்றேன். முஸ்லிம் அல்லாதவர்கள் சட்டத்தை மீறிய போதிலும், அவர்கள் சார்ந்த சமூகம் சட்டத்தை மீறியதாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுவதில்லை. அச்சமூகத்தில் உள்ளவர்கள் புத்தி சொல்லவருவதில்லை. எந்தவொரு சமூகத்திலும் முழுமையாக சட்டத்தை மதித்து நடக்கின்றவர்கள் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. எதிர்பார்க்கவும் முடியாது. நாட்டில் அதிகாரிகள், அமைச்சர்கள், நாட்டின் தலைவர்கள், மதத் தலைவர்கள் என எல்லா சமூகத்தை சேர்ந்தவர்களும் சட்டத்தை மதிக்காது நடந்துள்ளார்கள். ஏன் நீதிபதிகள் கூட சட்டத்தை மதிக்காது நடந்துள்ளார்கள். இவ்வாறு செயற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தண்டனை பெற்றுள்ளார்கள். ஆனால், முஸ்லிம் என்றால் அதற்கு சாயம் பூசிக் கொள்கின்றார்கள். பட்டாசு கொளுத்தி ஆட்களை கூட்டுகின்றார்கள்.

முஸ்லிம் தலைவர்களிடம் குறைகள் உள்ளன. அது போன்று ஏனைய சமூகத்தின் தலைவர்களிடமும் குறைகள் உள்ளன. அதற்காக அவர்கள் தங்களின் சமூகத்திற்காக முற்றும் முழுதாக பேசாதிருக்கின்றார்கள் என்று சொல்ல முடியாது. அவ்வப்போது சமூகத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் தமது சமூகத்தின் முக்கிய தேவை பற்றி பேசினால் இனவாதிகள் என்று முத்திரை குத்துகின்றார்கள். உண்மையை பேச முடியாதுள்ளது.

அண்மையில் கொரனா தொற்று குறித்து பரிசோதனைக்கு சென்ற அதிகாரியை பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். இந்த மிகப் பெரிய செயலை அந்நபர் செய்த போதிலும், அதற்காக அந்த பெரும்பான்மை சமூகத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைக்கவில்லை. அதனை ஒரு சம்பவமாகவே பார்த்தார்கள். இதே செயலை ஒரு முஸ்லிம் செய்து இருந்தால் முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் குற்றச்சாட்டுக்களை வைத்திருப்பார்கள். அதனை ஒரு சம்;பவமாக பார்த்திருக்கமாட்டார்கள். இதற்காக சில ஊடகங்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளன. இது இலங்கையில் மட்டுமல்ல. உலகில் பல நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அநீயாயங்களை விதைத்தவர்கள் ஒரு போதும் நல்ல அறுவடையை பெற்றதில்லை. அதன் வளர்ச்சி பெரிதாகவே இருக்கும். இறுதி முடிவு அழிவாகவே அமையும்.

இவ்வாறு முஸ்லிம்களை வைத்து அரசியல், பொருளாதாரம் போன்ற எல்லாவற்றையும் வளர்த்துக் கொள்ள திட்டமிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும் கும்பல் கொரனாவின் கொடுமையிலும் முஸ்லிம்களை எவ்வாறு சந்தைப்படுத்தலாமென்று சிந்தித்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு எண்ணெய் ஊற்றும் வேலையை முஸ்லிம் சமூகத்தில் ஒரு சிலர் செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் பேரினவாதிகளின் ஏஜன்டுகள். பேரினவாதிகளை குஷிப்படுத்துவதே இவர்களின் ஒரேயொரு வேலையாகும்.

இதே வேளை, தமது கை பட்டாலும் குற்றம், நாம் பார்த்தாலும் குற்றம், ஆடை அணிந்தாலும் குற்றம் என்றதொரு நெருக்கடியில் முஸ்லிம்களாகிய நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். அதனால், நாம் புத்திசாதுரியமாக செயற்பட வேண்டும். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை கட்டுப்படுத்துங்கள், குடும்பத் தலைவர்கள் வீட்டோடு இருங்கள். அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள். நமக்கு எதிரான சூழ்ச்சியை நமது கெட்டித்தனத்தால் வெற்றி கொள்ள முடியாது. அல்லாஹ்வின் உதவியால்தான் வெற்றி கொள்ள வேண்டும். பாவமன்னிப்பு கேளுங்கள். வீடுகளை அல்லாஹ்வுக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ளுங்கள். அப்போதுதான் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து கருநாகங்களையும் தோல்வியடையச் செய்ய முடியும். வீரப் பேச்சுக்கள் வேண்டாம். வசனங்களும் வேண்டாம். இனவாதிகளுக்கு துணையான கருத்துக்களை வெளியிட வேண்டாம். பொறுப்புடன் நடப்போம். அல்லாஹ் போதுமானவன். 

1 comment:

  1. Good advise and lets stick to the law of this government and rest we will leave it to Almighty he will take care of this culprits. Lets all be patience.

    ReplyDelete

Powered by Blogger.