Header Ads



மக்களை அமைதியாக வாழச்செய்து, விரைவில் தேர்தலை நடத்த எதிர்பார்க்கின்றோம் - சஜித்திடம் சொன்னார் ஜனாதிபதி


(ஆர்.யசி)

கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை அவசரகால நிலைமையாக கருதவில்லை. அவசரகால சட்டமொன்றை உருவாக்குவது தவிர்ந்து வேறு எந்தவொரு நிலைமையிலும் பாராளுமன்றத்தை கூட்டவும் முடியாது. 

ஆகவே பாராளுமன்றத்தை கூட்டும் நிலைப்பாட்டில் தான் இல்லையென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தனது உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். வெகு விரைவில் தேர்தலை நடத்துவதே தனது எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான அமைச்சர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடையில் நேற்று முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போது சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதற்கு பதில் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இந்த காரணியை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததானது, "பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் நாட்டில் அவசர சட்டமொன்றை உருவாக்கிக்கொள்வது தவிர்ந்து வேறு எக்காரணம் கொண்டும் பாராளுமன்றத்தை கூட்ட முடியாது. 

அரசியல் அமைப்பில் அதற்கான இடமில்லை. அவரச நிலைமையை பிரகடனப்படுத்த எந்த நோக்கமும் எனக்கில்லை. தற்போது நாட்டில் ஒரு நெருக்கடி நிலைமை உருவாக்கியிருக்கின்ற காரணத்தினால் பாராளுமன்ற தேர்தலை நடத்த கால தாமதம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு என்னிடம் தெளிவுபடுத்தியுள்ளது.

இப்போது தேர்தலை நடத்த முடியாது, ஆகவே முதலில் மக்கள் அமைதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். அதில் உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பை நான் எதிர்பார்த்துள்ளேன். ஆகவே தேர்தல் ஒன்றினை நடத்தக் கூடிய சூழலை உருவாக்கி வெகு விரைவில் தேர்தலை நடத்தவே நாம் எதிர்பார்க்கின்றோம். ஆகவே அதற்கிடையில் பாராளுமன்றம் கூட்டப்படாது"  என ஜனாதிபதி தெளிவாக தனது முடிவை அறிவித்துள்ளார்.

1 comment:

  1. சனாதிபதியின் பதிலில் அரசியல் முதிர்ச்சியோ,நாட்டை சுமுக நிலைமைக்குத் திரும்புவதற்காக சரியான ஏற்பாடுகளோ,மக்களின் நலன்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டமைக்கான தௌிவோ காணப்படவில்லை. அடுத்துவரும் காலங்கள் மக்களுக்கு எவ்வாறு அமையும் என்பது பெரியதொரு புதிராகவே தெரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.