Header Ads



கொரோனா நோயும், நோன்பு பிடிப்பதும் - ஒரு சட்டப் பார்வை

- அஷ்ஷைக் பளீல் -

கொரோனா நோயாளிகள், நோய் வரலாம் என எதிர்பார்க்கப்படுவோர் மற்றும் சிகிச்சை செய்யும் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள் நோன்பிருக்கலாமா என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டு வருகிறது.

இதற்கான பதிலை கட்டம் கட்டமாக நோக்குவோம்.

காரணமின்றி ஒரு நாள் நோன்பை விட்டவர் முடிந்தால் 60 நாட்கள் குற்றப் பரிகாரமாக நோன்பிருக்க வேண்டும் என்பது நாம் அறிந்த விடயம்.

ஆனால், இஸ்லாத்தைப் பொறுத்தவரை பருவ வயதை அடைந்த, பைத்தியமல்லாத ஒவ்வொருவர் மீதும் நோன்பு கடமையாக இருந்தாலும் நோன்பு பிடித்தால் அதிக சிரமங்களுக்கு உள்ளாகலாம் எனக் கருதும் பிரயாணிகள், நோன்பாளிகள் நோன்பை விடலாம். ஹய்ள், நிபாஸ் வந்த பெண்கள் நோன்பிருக்கலாகாது. இத்தகையவர்கள் விட்ட நோன்புகளைக் கணக்கிட்டு ரமழானின் பின்னர் கழா செய்ய வேண்டும்.

வயது முதிர்ந்த ஆண்கள் அல்லது பெண்கள் நோன்பு இருக்க முடியாத பலவீனமான நிலையில் இருந்தால் நோன்பை விட்டுவிட்டு பிடிக்கத் தவறிய ஒரு நோன்புக்குப் பகரமாக ஒரு மிஸ்கீனுக்கு உணவளிக்க வேண்டும்.

கர்ப்பவதிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாரும் அடிப்படையில் நோன்பிருக்க வேண்டுமாயினும் நோன்பிருப்பதால் ஆபத்துண்டு என நம்பகரமான வைத்தியர் ஆலோசனை கூறினால் மாத்திரம் நோன்பை விட்டு பின்னர் கழா செய்யலாம்.

கொரோனா நோயாளியும் நோன்பும்

கொரோனாவானது கடுமையான ஒரு நோய் என்பதனால் நோயாளி பற்றிய ஷரியத்தின் நோன்புச் சட்டங்கள் அவருக்கும் பொருந்தும். ஆனால், இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்படாத ஒருவர் நோன்பிருப்பது கட்டாயமாகும் என்பதே அடிப்படையாகும்.

ஆனால், கொரோனா நோய் தொற்றுவதற்கான பிரதான காரணம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதாகும் என்ற காரணத்தினால் நோன்பு பிடிப்பதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி குறையுமா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

இவ்வினாவுக்கு பின்வரும் விளக்கத்தை வழங்க முடியும்:-

இமாம் நவவீ அவர்கள் தனது 'அல் மஜ்மூஉ' எனப்படும் கிரந்தத்தில் நோன்பை விட முடியுமான நோய் பற்றி பின்வருமாறு கூறுகிறார்கள்:-

"நோன்பு பிடிப்பதன் மூலமாக தெளிவாகவே ஒரு சங்கடம் ஏற்படும் என்றிருந்தால் நோன்பை விடலாம். அதாவது தாங்கிக்கொள்ளவே முடியாத ஒரு சிரமமாக அது இருக்க வேண்டும். ஆனால், வெளிப்படையான சிரமத்தை தராத இலேசான நோயைப் பொறுத்தவரையில் அப்படியான நோயாளி நோன்பை விடலாகாது என்பதில் எம்மவருக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் இல்லை." எனக் கூறுகிறார். (அல்மஜ்மூஉ 6/261)

இமாம் இப்னு குதாமா அவர்கள் "நோன்பு பிடிப்பதன் மூலமாக ஒருவரின் நோய் அதிகரிக்கும் அல்லது குணமடைவதற்கு காலம் எடுக்கும் என்ற நிலையிலுள்ள கடுமையான நோயாக அது இருந்தால் அவர் நோன்பை விடலாம்" 

(அல்முக்னீ-4/403) என்கிறார்.

இவ்வாறு நியாயமான காரணங்களுக்காக நோன்பை விட்டவர்கள் கட்டாயமாக ஏனைய நாட்களில் கழா இருக்க வேண்டும்.

'முஸ்லிம்களது அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றிய' த்தின் வெப் தளத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, 25.3.2020 அன்று இடம்பெற்ற ஆய்வுக்கும் பத்வாவுக்குமான ஐரோப்பிய மன்றத்தின் கூட்டத்தின் போது நோன்பிருப்பதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியானது குறைவடையமாட்டாது என நான்கு நிபுணத்துவ வைத்தியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

நோன்பிருப்பதன் மூலமாக நோய் பரவுகின்ற விகிதாசாரத்தை குறைக்க முடியும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட முடியுமென்றும் அதேபோன்று அழிந்த கலங்களை புதுப்பிக்கும் சக்தி நோன்புக்கு இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நோய் வரலாம் என எதிர்பார்த்து நோன்பை விடுவது:

ஹனபி மத்ஹபைச் சேர்ந்த சில சட்ட அறிஞர்கள், ஒருவர் நோன்பிருந்தால் குறிப்பிட்ட ஒரு நோய் வரும் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டால் அவர் நோன்பை விட முடியும் என்றும், ஆனால் இது கடந்த கால அனுபவங்கள் மூலமாகவும் அறிஞர்களது (வைத்தியர்களது) சாட்சியத்தின் மூலமாகவும் பெறப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். (ஹாஷியத்து இப்னு ஆபிதீன் -2/216)

ஆனால், இமாம் மாலிக் அவர்களுடைய மத்ஹபைச் சேர்ந்தவர்கள் நோய் எதிர்பார்க்கப்படலாம் என்பதை வைத்து நோன்பை விட முடியாது. ஏனெனில், நோன்பிருப்பதால் அவருக்கு நோய் வராமலிருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள். (ஹாஷியதுத் தஸூகீ-1/535)

ஆனால், ஒருவர் நோன்பிருப்பதனால் அவருக்கு கொரோனா வரக்கூடிய வாய்ப்பு 50% திற்கும் அதிகமாக இருப்பதாக நிபுணத்துவமிக்க மருத்துவத் துறை சார்ந்த பலர் நம்பகரமான வைத்திய அறிக்கை மூலம் கூறினால் அவருக்கு நோன்பை விட முடியும். ஆனால் கழாச் செய்துகொள்வதாக அவர் நிய்யத்துக் வைத்துக்கொள்ள வேண்டும் என பேராசிரியர் குர்ரா தாகீ கூறுகிறார்.

فلا يجوز لأحد من المسلمين أن يفكر في ترك هذا الركن العظيم إلا بعذر مشروع أذن الله به.
ومع هذا التأكيد العلمي فلو قال أكثر من طبيب من خلال تقرير طبي موثق: إن الشخص الفلاني معرض للإصابة بمرض كورونا بنسبة أكثر من 50% لأي سبب مقبول حسب شهادة أهل التخصص فيجوز له الإفطار مع نية القضاء بعد زوال العذر.

வைத்தியர்கள் நோன்பு பிடிப்பது?

கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யும் முஸ்லிம் வைத்தியர்கள் நோன்பை விடலாமா என்ற கேள்விக்கு தென்னாபிரிக்காவில் உள்ள சர்வதேச சமாதான கலாசாலையைச் சேர்ந்த ஷாதிபி மகாஸித் நிறுவனத்தின் பேராசிரியர் ஜாஸிர் அவ்தா அவர்கள் பின்வருமாறு பதில் தருகிறார்:-

If the Muslim medical personnel can function without harming him/herself or falling short in their duty to save lives, then they should indeed fast.
Otherwise, that is if he/she assessed that there will be harm to him/her or their patients in any way, then they could break their fasting and make up for the days later during the year. Allah does not ask of a believer what puts them in hardship.
https://aboutislam.net/…/can-muslim-medical-professionals-…/

"உயிர்களை பாதுகாப்பது சமூகத்திலுள்ள ஒரு கூட்டுக் கடமையாகும். தற்கால சூழ்நிலையில் மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மிகப்பெரிய பொறுப்பை சுமந்திருக்கிறார்கள். எனவே அவர்கள் வைத்தியசாலைகளுக்கப் போகாமல் விடுமுறை எடுக்கலாகாது.

முஸ்லிம் வைத்தியர் ஒருவர் நோன்பு இருப்பதன் மூலமாக தனக்கோ தனது நோயாளிகளுக்கோ ஏதாவது ஒரு வகையில் பாதிப்பு ஏற்படும் என்று கருதினால் மட்டும் நோன்பை விட்டு ஏனைய தினங்களில் கழாச் செய்யலாம்" என்கிறார்.

சுருக்கம்

கொரோனா நோய் வந்தாலே ஒழிய எவரும் நோன்பை விட முடியாது. ஆனால் மருத்துவ அறிக்கையின் மூலமாக நோன்பு இருப்பதன் மூலம் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஒருவர் உள்ளாகலாம் என்று உறுதியாக நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே அவர் நோன்பை விட முடியும். ஆனால் அவர் பின்னர் கழாச் செய்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பானாக!

அல்லாஹ்வே எல்லாவற்றையும் நன்கு அறிந்தவன்.

No comments

Powered by Blogger.