Header Ads



அரசுக்கு முடியுமானால், என்னை கைது செய்யட்டும் - மனோ

(ஆர்.யசி)

உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு வழங்கும் நிதியை நிறுத்த வேண்டாம் என  வெளிநாட்டு நண்பர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு விடுத்த கோரிக்கையை போல், அப்பாவி மக்களுக்கு முறையாக 5000 ரூபா சென்றடைய வேண்டும் என உள்நாட்டு நண்பர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விட வேண்டும் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா ஒழிப்புக்காக, அரசாங்கத்துக்கு அரசை சுற்றி இருக்கும், சுகாதார துறைக்கு, பாதுகாப்பு, பொலிஸ் துறைக்கு, நாம் எமது முழுமையான ஆதரவை, தருகிறோம்.

இது தொடர்பில் சந்தேகமோ விவாதமோ வேண்டாம். எமக்கு நாட்டின் மீது இருக்கின்ற பற்றின் காரணத்தால் இதை செய்கிறோம். ஆனால், அந்த ஆதரவு கொரோனாவை ஒழித்து அதை எம் மண்ணில் இருந்து துடைத்து எறிவதற்கு மட்டுமே.

ஆனால் இதனை பயன்படுத்தும் அரசாங்கம் அதில் அரசியல் இலாபம் அடைகின்றது என்பதே உண்மையாகும். கொரோனாவை அழிக்க வேண்டும், ஆனால் ஜனநாயகத்தை அழிக்க முடியாது.

ரூ 5,000/= வாழ்வாதார கொடுப்பனவு பட்டியல் பணிகளை கிராம சேவகர்களிடமிருந்து, அரசாங்க அரசியல்வாதிகள் கைப்பற்றியுள்ளார்கள்.  இன்று வாழ்வாதார கொடுப்பனவு ரூ 5,000/= வழங்குவது என்பது முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க இயந்திரத்தின் முதல் முகவரான கிராம சேவகர்கள் தமது பணிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளமை இதற்கு சான்றாக விளங்குகிறது. இதைவிட வாழ்வாதார கொடுப்பனவு வழங்களில் அரசின் அலங்கோலத்தை பற்றி சொல்ல என்ன இருக்கிறது? ரூ 5,000/= கொடுப்பனவு வழங்கும் பட்டியல் தயாரிப்பு பணிகளை கிராம சேவகர்களிடம் இருந்து, அரசாங்க கட்சி அரசியல்வாதிகள் கைப்பற்றியுள்ளார்கள். இதற்கு ஜனாதிபதி இடம் கொடுத்துள்ளார். நாட்டில் மிகவும் பின்தங்கிய தோட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை.

இந்நாட்டில் இன்று “முழு ஊரடங்கு அடைப்பால்” மிகவும் பாதிப்புக்கு உள்ளான பிரிவுகளாக மலைநாட்டு தோட்டப்புற, கொழும்பு மாவட்ட நகர ஏழை, கீழ் நடுத்தர வர்க்க மற்றும் கொழும்பில் வந்து சிக்கியுள்ள வெளிமாவட்ட மக்களும் அடையாளப்பட்டுள்ளார்கள். கொரோனா சாவுக்கு முன், மலைநாட்டு தோட்டப்புறத்தில் அல்லது கொழும்பு மாவட்ட நகர ஏழை, கீழ் நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் பட்டினி சாவு ஏற்படலாம். இது நடக்க கூடாது என நாம் பிரார்த்திக்கிறோம். பட்டினி சாவு ஏற்படலாம் என நான் இங்கே பகிரங்கமாக கூறுகிறேன். முடியுமானால் என்னையும் கைது செய்யுங்கள்.

ஆனால், ஊரடங்கால் திக்கற்று போயிருக்கும் இம்மக்களுக்கு வழங்க வேண்டிய வாழ்வாதார கொடுப்பனவுகளை வழங்காமல், அரசாங்கம் ஓரவஞ்சனை செய்வதால், இத்தகைய அனர்த்தம் நடக்க இடமுண்டு என நான் கூறுகிறேன். சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரம் செய்கின்றார்கள் என பலரை இந்த அரசு கைது செய்துள்ளது. கொரோனா சாவுக்கு முன், பட்டினி சாவு ஏற்படலாம் என்று நான் இங்கே பகிரங்கமாக கூறுகிறேன். 

அரசுக்கு முடியுமானால் என்னை கைது செய்யட்டும். எனக்கு தினசரி கொழும்பு நகர ஏழை, கீழ் நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் மலைநாட்டு தோட்டப்புற மக்கள் மத்தியில் இருந்து வருகின்ற தொலைபேசி தகவல்கள், நேரடி தகவல்கள் எனக்கு இந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

அரசின் ஜனநாயக ஒழிப்பு, சமூக ஊடக சுதந்திர ஒழிப்பு, பேச்சு சுதந்திர ஒழிப்பு ஆகியவற்றை நாம் கடுமையாக எதிர்கிறோம்.  இன்று சமூக ஊடகங்களில், குறிப்பாக முகநூலில், அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தார்கள் என்று பதினேழு சமூக ஊடகவியலாளர்களை பொலிஸ் கைது செய்துள்ளது. இது, அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள பேச்சு, கருத்து சுதந்திர உரிமை ஒழிப்பாகும். கடந்த வருடம், இதேவேளையில், உயிர்த்த ஞாயிறு சம்பவத்தின் பின் அன்றைய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் ஆகியோரை சமூக ஊடகங்களில் தூஷணம் பேசி, படுமோசமாக திட்டி தீர்க்கவும் கூட  சுதந்திரம் இருந்தது. இப்போதும் கூட எம்மை திட்டினாலும் நாம் அமைதியாக கடமையை செய்கிறோம். ஆனால், இந்த கொடுங்கோல் அரசின் முகம் இத்தனை சீக்கிரமாக வெளிப்பட்டு விட்டது.

கொரோனா நோயாளர்களுடனான, முதல் தொடர்பாளர்களை சோதனை செய்து அவர்களுக்கு கொரோனா  உறுதி என கண்டறிய அரசாங்கத்துக்கு விருப்பம் இல்லை. ஏனெனில், அரசாங்கத்துக்கு இன்று கியூபாவைவிட, சிங்கப்பூரைவிட, கொரியாவைவிட நாம் திறமாக, கொரோனாவை கையாள்கிறோம் என காட்ட வேண்டிய அசிங்க அரசியல் தேவை ஏற்பட்டுள்ளது. அதனால், சோதனையை செய்யாமல் காலம் கடத்துகிறார்கள். 45,000 பேர் இப்படி இருப்பதாக இராணுவ பொலிஸ் புலனாய்வு தகவல்கள் சொல்கின்றன. நேற்று இரவு 20,000 சோதனை உபகரணங்கள் சீனாவிலிருந்து இலங்கை வந்தன. இன்னொரு 20,000 சோதனை உபகரணங்கள் கடந்த வரம் வந்தன. வந்த உடனேயே நான் டுவீட் செய்தேன். இதற்காக சீனாவுக்கு நன்றி. ஆனால், இப்போது இந்த 40,000 சோதனை உபகரணங்களை வைத்துக்கொண்டு அரசு சாம்பிராணி போடுகிறதா? ஏன் சோதனைகளை உடனடியாக துரிதப்படுத்த தயக்கம்?

உங்கள் அசிங்க அரசியல் அவசரத்திற்காக, மக்களை ஆபத்தில் போட வேண்டாம்.  அரசாங்கம் பல்கலைக்கழகங்களை திறக்க போகிறாதாம். திறக்கட்டும். பாடசாலைகளை திறக்கட்டும். அரச அலுவலகங்களை திறக்கட்டும். தனியார் அலுவலகங்களை திறக்கட்டும். தொழிற்சாலைகளை திறக்கட்டும். சந்தைகளை திறக்கட்டும். பொருளாதார மத்திய நிலையங்களை திறக்கட்டும். முழு நாட்டையும் திறக்கட்டும். நாம் முழு ஒத்துழைப்பையும் தருவோம். ஆனால், ஒரே நிபந்தனை. அதற்கு முன் கொரொனா பரிசோதனைகளை நடத்தி, இந்த நாட்டில் கொரோனா நோயாளர்கள் எத்தனை பேர், அவர்கள் எங்கே இருக்கிறார்கள், என்ற தகவலை நாட்டுக்கு தெரியப்படுத்தி, தெருவில் இறங்கி நடக்க மக்களுக்கு நம்பிக்கையை கொடுங்கள். நிம்மதியை கொடுங்கள். அதைவிடுத்து, உங்கள் அசிங்க அரசியல் அவசரத்திற்காக, நாடு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என காட்டுவதற்காக, மக்களை ஆபத்தில் போட வேண்டாம்.

வெளிநாட்டு நண்பர் ட்ரம்புக்கு விடுத்த கோரிக்கையை போல், உள்நாட்டு நண்பர் பிரதமர் மகிந்தவுக்கு ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விட வேண்டும்.  முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தன் வெளிநாட்டு நண்பர் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ட்ரம்புக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். “உலக சுகாதார ஸ்தாபன” த்துக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை குறைக்க வேண்டாம், நிறுத்த வேண்டாம் என ரணில், ட்ரம்பை கோரியுள்ளார். 

இதை நான் பாராட்டுகிறேன். இது தொடர்பில் முன்னாள் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதேபோல், இன்னொரு காரியமும் ரணில் செய்ய வேண்டும். தனது உள்நாட்டு நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் மூலமோ, ஏன் ஒரு தொலைபேசி மூலமாவது ஒரு கோரிக்கையை ரணில் முன் வைக்க வேண்டும். இந்த 5,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவை அரசியல் பேதங்கள் இல்லாமல் எல்லோருக்கும் கொடுக்கும்படி, ரணில் தன் நண்பர் மகிந்தவை கோர வேண்டும் என நான் வேண்டுகிறேன்.

2 comments:

  1. Correct, intha asinga arasiyalil irunthu makkal eppothu vilittukkolaargl???

    ReplyDelete
  2. Ranil கோரினால் Central Bank பிரச்சினை வெளியே வந்து விடுமே.

    ReplyDelete

Powered by Blogger.