April 07, 2020

இனவாத முதலீட்டை ரணில், கையில் எடுத்தாரா...?

இலங்கையில் இனவாதத்தை விதைத்து அரசியல் செய்வதொன்றும் புதிதல்ல. அது காலம் காலமாக நடந்தேறி வருவது தான். இதற்கு ரணிலொன்றும் விதி விலக்குமல்ல என்பது நிரூபணமாகியுள்ளது. ரணிலை பொறுத்தமட்டில் அவரொரு மேற்கத்திய சிந்தனை கொண்டவர் என்ற கருத்தாடல்களே அதிகம் காணப்பட்டன. இவர் பெரும்பாலும் இனவாத செயற்பாடுகளுக்குள் மூக்கை நுழைப்பதில்லை. அதுவே இவரது பண்பும் கூட. இப்போது " முஸ்லிம்கள் பிடிவாதமாக இருக்கக் கூடாதென" ஜனாஸா எரிப்பு விடயத்தில் கூறியுள்ளார்.

ஏன் இவர் இவ்விடயத்தினுள் மூக்கை நுழைக்க வேண்டும். தற்போது இவருக்கு முஸ்லிம் கட்சிகளின் ஆதரவில்லை. இவ்வளவு நாளும் எமது முஸ்லிம் கட்சிகளே அவருக்கு முட்டி கொடுத்திருந்தன. அதிலும் குறிப்பாக மு.காவானது தனது பெரு ஆதரவை வழங்கியிருந்தது. அவரை இத்தனை நாளும் ஒரு அரசியல் தலைவராக சித்தரித்து வைத்திருந்ததில் மு.காவுக்கு பெரும் பங்குண்டு என்றாலும் தவறாகாது. இவ்வாறான நிலையில் முஸ்லிம் கட்சிகள் ரணிலுக்கான ஆதரவை விலக்கியுள்ளன.

இச் சந்தர்ப்பம் ரணிலுக்கு மிக முக்கியமானது. இதற்கு முன்னரும் மு.கா பல தடவைகள் ஐ.தே.கவிலிருந்து விலகிச் சென்றுள்ளது. அன்றெல்லாம் ரணில் இனவாதம் பேசவில்லை. அன்று அவர்கள் மாறியது எதிர்க்கட்சிக்கு. தேவையான சந்தர்ப்பத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கையும் ரணிலிடத்தில் இருந்திருக்கலாம். அவ்வாறே நடந்துமிருந்தது. இன்று முஸ்லிம் கட்சிகள் ஆதரவை விலக்கி சஜிதை ஆதரித்துள்ளதானது ரணிலின் அரசியலையே துடைதெறியக் கூடியது. இனியும் ரணில் தனதாட்டத்தை காட்டாமலிருக்க முடியாது. இனவாதத்தை கையிலேந்தியுள்ளார்.

கடந்த காலங்களில் பிரதமர் மஹிந்தவுக்கு பெரும் சவாலாகவிருந்த முஸ்லிம் கட்சிகள் இந்த ஜனாஸா விடயத்தில் அவரின் காலடிக்கு சென்றுள்ளன. சென்றேயாக வேண்டுமென்ற நிலைப்பாடே உள்ளது. இந் நிலையில் முஸ்லிம் கட்சிகளை தனது காலடியில் கொண்டுவரச் செய்யும் ஒரு உத்தியாகவும் இது நடைபெற்றிருக்கலாம். இவர் இதில் இனவாதம் பேசுகின்ற போது அதனை நிறுத்த முஸ்லிம் கட்சிகள் அவரை நாடியேயாக வேண்டுமல்லவா? ரணிலும் நரித் தந்திரத்தில் தேர்ச்சி பெற்ற அரசியல்வாதியல்லவா?

இனி முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு ரணிலுக்கில்லை என்பது உறுதியானது. பேரின மக்களின் வாக்கை கவரும் நோக்கிலும் இது பேசப்பட்டிருக்கலாம். ரணிலின் அரசியல் மிகவும் தந்திரோபாயமானது. இத்தனை காலமும் அவருக்கு பக்கபலமாகவிருந்த முஸ்லிம் கட்சிகள் ஆதரவு வழங்காதென நன்கு தெரிந்தும் தனித்து அரசியல் களத்துக்கு வந்துள்ளார். இவ்விடயத்தில் ரணில் தானாக முன் வந்து முஸ்லிம்கள் பற்றி பேசுகிறார். முஸ்லிம்கள் யாருமே அவரிடம் இவ்விடயம் தொடர்பில் எதுவுமே கோரவில்லை. இன்றைய ஆளும் ஆட்சியாளர்களே இவ்விடயத்தில் முஸ்லிம்கள் வெறுக்காத வண்ணம் அனைத்தையும் அதிகாரிகளின் தலைமீது போட்டு காய் நகர்த்தும் போது, இவருக்கு ஏன் இந்த பேச்சு. நாட்டின் மீது அப்படி அக்கறையா?

மேலுள்ள அனைத்தையும் தொடர்புபடுத்தி பார்க்கின்ற போது எதிர்வரும் தேர்தலில் ரணிலின் பிரதான அஸ்திரமாக இனவாதமிருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. இது ஒரு ஆபத்தான செய்தி. இலங்கையிலுள்ள பிரதான முஸ்லிம் கட்சிகள் இன்னுமின்னும் ஒரு பிரதான கட்சியின் கீழுள்ளததன் விளைவே இது என்பதையும் சுட்டியாக வேண்டும். இத் தவறையே எமது முஸ்லிம் தலைமைகள் கடந்த காலத்திலும் செய்திருந்தன.

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

4 கருத்துரைகள்:

No need of further explanation after all he is a most and worst politician in the UNP political history. He knew that he will not get a single vote in the coming election. His time ripe to stay home instead giving statement.

ஐயோ!
ரணிலா?
அப்படியா?
இருக்காதே!
இதுதான் எமது சமூகத்தின் இன்றைய நிலை.
யார் நண்பன்?
யார் துரோகி? என்பதை இன்னும் பகுத்தறியவில்லை?
உணர்ச்சிக்குப் பின்னால் அள்ளுண்டு செல்லும் அறிவுப் பஞ்சமான சமூகம் ஒரு போதும் எழுச்சி பெறுவதில்லை.

Ranil will be nowhere after the general election. No need to pay any attention to him.

இவனைப்போல எத்தனபேர் வந்தாலும் அல்லா இருக்கிறான்

Post a Comment