Header Ads



- வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஜனாதிபதியின், முன்னெடுப்புகளுக்கு நிபுணர்கள் பாராட்டு


கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை உடனடியாக ஒழிப்பதற்கு தேவையான வைத்திய நிபுணர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பல்வேறு துறைகளை சேர்ந்த வைத்திய நிபுணர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கமும் பாதுகாப்புத் துறையும் சுகாதார துறையும் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தற்போது வைரஸ் தொற்றுடையவர்களுடன் நெருங்கிப் பழகிய குழுக்கள் அதற்கப்பாலும் இரு கட்டங்களுக்கு அப்பால் தொடர்புகளை கொண்டிருந்தவர்களை இனம்காண்பது தொடர்பில் பரிசோதிக்க வேண்டியதன் அவசியத்தை வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

வைரஸை இனம்காண்பதற்கு தேவையான பரிசோதனை கருவி தொகுதி (Test Kits) போதுமானளவு இருந்த போதும் எந்தவொரு நிலைமைக்கும் முகம்கொடுக்கக்கூடிய வகையில் அவற்றை தருவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

உலகின் ஏனைய நாடுகளை பார்க்கிலும் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி முன்னெடுத்த நோய்த்தடுப்பு நிகழ்ச்சித்திட்டங்களை வைத்திய நிபுணர்கள் பாராட்டினர். அந்த நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பலப்படுத்துவது வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு மிகவும் முக்கியமானதாகும் என்றும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.

வைரஸ் பரவாத பிரதேசங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வைத்தியர்கள் வலியுறுத்தினர். வைரஸ் பரவியுள்ள பிரதேசங்களில் இருந்து அப்பிரதேசங்களுக்கு வைரஸ் செல்வதை தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அனைவரும் முடியுமானளவு வீடுகளில் இருப்பது முதலாவது நடவடிக்கை என்ற வகையில் மிகவும் முக்கியமானது என வைத்தியர்கள் குறிப்பிட்டனர். வீட்டிலிருந்து வெளியேறும் போது முகக் கவசங்களை அணிதல், முகத்தை தொடுவதை தவிர்த்தல், எப்போதும் ஒரு மீற்றர் தூரத்தை பேணுதல் மற்றும் கைகளை நன்றாக கழுவிக்கொள்தல் ஐந்து முக்கிய பாதுகாப்பு நடைமுறைகளாகும்.

நிபுணர்கள், பல்கலைக்கழகங்கள், தொழிநுட்ப நிறுவனங்கள், தனிப்பட்ட குழுக்கள் கொவிட் 19 தொடர்பான பல்வேறு கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுள்ளனர். அக்கண்டுபிடிப்புகளை உடனடியாக துறைசார்ந்த மட்டத்தில் ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கொரோனா வைரஸ் விரைவாக தொற்றக்கூடியவர்கள் குறித்தும், அவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு பின்பற்றப்படவேண்டிய முறைமைகள் என்னவென்றும் ஜனாதிபதி வினவினார்.

நீரிழிவு, சுவாச பிரச்சினைகள் மற்றும் இருதயம் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் உரிய மருந்துகளை உரிய முறையில் எடுக்க வேண்டும் என்றும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர். அதேபோன்று புகைப்பதை முற்றாக தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அனைவரும் எல்லா சந்தர்ப்பங்களிலும் தொண்டைப் பகுதியை ஈரலிப்பாக வைத்திருப்பதற்காக நீராகாரங்களை பருக வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

1 comment:

  1. Why can't arrange a dialog between virus expert and specialist doctors and JMO. We were told to keep distance between 1m distance with one another but we were not allowed to bury 8 feet depth. Please understand that you are violating fundamental rights of the Muslims. Virus spread through water after burying is a myth according the medical expert.

    ReplyDelete

Powered by Blogger.