Header Ads



மனிதாபிமான நோக்குடன் ஜெர்மனிய, பெண்ணுக்கு உதவிய இலங்கை கடற்படையினர்


உலக சுற்றுப்பயணம் மேற்கொண்ட MSC Magnifica சுற்றுலா கப்பலில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் இன்று கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டு பூசா தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

MSC Magnifica பயணிகள் கப்பலில் பணியாற்றிய அனுர பண்டார எனப்படும் பணியாளர் தன்னை இலங்கைக்கு அழைத்து வருமாறு கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஜனாதிபதியின் அனுமதியின் அடிப்படையிலும் கடற்படைத்தளபதியின் ஆலோசனையின் பிரகாரமும் அவரை இன்று கொழும்பு துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு கடற்படையினர் தீர்மானம் மேற்கொண்டனர்.

MSC Magnifica பயணிகள் கப்பல் கொழும்புத் துறைமுகத்திலிருந்து 4.4 கடல் மைல் தூரத்திற்கு வருகை தந்த போது, கடற்படையின் இரசாயன, உயிரியல் விஞ்ஞான மற்றும் கதிரியக்க அவசரப் பிரிவு மீட்புப் பிரிவினர் அனுர பண்டாரவை கிருமித்தொற்று நீக்கம் செய்து அழைத்து வந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி இந்த கப்பல் உலக சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தது.

COVID-19 உலகம் முழுவதும் தாக்கம் செலுத்திய நிலையில், சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கப்பலில் பயணித்தவர்களை அந்தந்த நாடுகள் பொறுப்பேற்றுக்கொண்டன.

கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட அனுர பண்டார அதன் பின்னர் பூசா கடற்படை மையத்தின் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

இதேவேளை, MSC Magnifica பயணிகள் கப்பலில் இருந்த, இருதய நோய்க்குள்ளான ஜெர்மனிய பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

75 வயதான ரோஸ்மேரி மார்கிரட் இருதய நோய்க்குள்ளானமையால் மருத்துவ உதவிக்காக அவர் கப்பலில் இருந்து இறக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

சர்வதேச சட்டங்கள் மற்றும் இணக்கப்பாடுகளுக்கு அமைய, இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசிக்கும் கப்பல் தொடர்பில் ஆராய்வதற்கும், வலயங்களுக்குள் ஏற்படும் அவசர நிலைமையின் போது நிவாரணத்தை வழங்குவதற்குமான பொறுப்பு இலங்கை கடற்படையினருக்குள்ளது.

எனினும், பொறுப்புகளுக்கு அப்பால், உலக நாடே தற்போது எதிர்கொண்டுள்ள சுகாதார சவாலை கருத்திற்கொண்டு மனிதாபிமான நோக்குடன் குறித்த ஜெர்மனிய பெண்ணை இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்றனர்.​

இத்தாலி நோக்கி குறித்த கப்பல் தற்போது பயணிக்கின்றது.

No comments

Powered by Blogger.