April 19, 2020

கொரோனாவை கட்டுப்படுத்த உதவும், சகலருக்கும் முஸ்லிம் சமூகத்தின் நன்றிகள்...!

ஐ.எல்.தில்ஷாத் முஹம்மத் (கபூரி)

சென்ற பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இலங்கையில் கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது. உலகையே உலுக்கிய இக்கொடிய நோயின் விபரீதத்தை உணர்ந்த அரசு, அத்தொற்று இந்த நாட்டிலும் பரவாமல் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு முப்படைகள், சுகாதார அமைப்புக்கள், பொது மற்றும் சிவில் அமைப்புக்கள் உட்பட அனைத்து அரச தினைக்களங்களும் தம்மாலான பங்களிப்புகளை செய்து கொண்டிருக்கின்றன. 

எதிர்கட்சிகளின் பங்களிப்பு இங்கு குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய விடயமாகும். தற்போது ஆட்சியில் உள்ள அரசு எதிர்கட்சியாக இருக்கும் போது நடந்துகொண்ட விதமும், தற்போதுள்ள எதிர்கட்சி மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளும் நடந்துகொள்கின்ற விதமும் உண்மையான நாட்டுப் பற்றாளர்கள் யார் என்பதை துள்ளியமாக காட்டி நிற்கிறது. இவ்வாரான ஒரு இக்கட்டான நிலையில் எதிர்கட்சி மற்றும் ஏனைய அரசியல் கட்சிகள் அரசுக்கு ஒத்துழைப்பாகவும், நாட்டு நலனில் அக்கரையுடனும், எல்லா விடயங்களிலும் மிகவும் பக்குவமாகவும், பண்பாகவும் நடந்துகொள்வது மனதிற்கு ஆருதலைத் தருகிறது. 

நாட்டில் ஏற்பட்ட பெருத்த மழையும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினையும், எவ்வாரு தங்களது கீழ்த்தரமான அரசியலுக்காக பயண்படுத்தினார்கள் என்பதையும், சென்ற வருட ஏப்ரல் உயிர்த்த ஞாயிரு தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அச்சம், பீதி, பொருளாதார நெருக்கடி, இலங்கை நாணயத்தின் வீழ்ச்சி தொடர்பில் அன்றைய எதிர்கட்சியும் இன்றைய ஆளும் கட்சியும் நடந்து கொண்ட விதம் எவ்வாரு என்பதையும் யாவரும் அறிந்ததே.

இவை அனைத்தையும் தங்களது சுய அரசியல் இலாபத்திற்காகவும் எதிர்கால அரசியல் நலனுக்காகவுமே அன்றைய எதிர்கட்சி பயண்படுத்தியது. ஒரு சில சிறிய விடயங்களையும் பெரும் பூதாகரமாக மாற்றி, தங்களுக்கு சார்பான ஊடகங்களையும் பயண்படுத்தி கீழ்த்தரமான எதிர்கட்சி அரசியலைச் செய்ததை யாரும் மறந்திருக்கமாட்டர்.

இன்று நாடும் நாட்டு மக்களும் இருக்கின்ற நிலையில், இன்றைய எதிர்கட்சி மற்றும் ஏனைய பிரதான கட்சிகள் நடந்து கொள்கின்ற விதம் முற்றிலும் வித்தியாசமாக பார்க்கப்பட வேண்டியிருக்கிறது. 

நாட்டின் பொருளாதாரம் அதளபாதாலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்றைய அரசு மென்மேலும் கடன்களை வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்க டொலர் ஒன்று ரூபா 200யும் தாண்டி சென்றுவிட்டது. இலங்கை வரலாற்றில் அமெரிக்க டொலர் ஒன்று எட்டிய ஆகக்கூடிய அடைவு இதுவாகும். எமது நாட்டின் பொருளாதராம் எங்கிருக்கிறது என்பதை கணக்கிட இதுவொன்றே போதுமானதாகும்.  

விவசாயிகள் தங்களது மரக்கரிகளை விற்றுக்கொள்ள முடியாமல் திண்டாடுகின்றனர். அவர்களுக்கான உரம் சரியாக கிடைப்பதில்லை என நாடுபூராகவும் முறைப்பாடுகளும், போராட்டங்களும் தொடர்கின்றன. அரச இயந்திரம் முற்றாக செயலிழந்து நிற்கிறது. கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய நீண்ட வரிசையில் நிற்கவேண்டியிருக்கிறது. வைத்தியசாலைகளில் போதிய மருந்துகள் இன்றி மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். 

நாடளாவிய ரீதியில் மக்கள் சொல்லொனா துன்பத்திற்கும், கஷ்டத்திற்கும் மத்தியில் வாழ்கின்றனர். குறிப்பாகவும் வடகிழக்கு மக்கள் தாங்கள், வாழ்வதா சாவதா என்ற மனோநிலையில் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்கள், முச்சக்கர வண்டிக் காரர்கள், தினக் கூலித் தொழிலாளர்கள் என எல்லோரும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தொழில் நிமித்தமும், உயர்கல்விக்காகவும், சுற்றுலாவிற்கெனவும் வெளிநாடு சென்றவர்கள் தாயகம் திரும்ப முடியாமலும், அங்கு அச்சமின்றி இருக்கவும் முடியாமலும் திண்டாடுகின்றனர். 

அரசு மக்களுக்கு வழங்கும் சலுகைகள் சரியான முறையில் சென்றடையாமையால் சமுர்தி பெருபவர்களும், பிற அரச உதவிகளைப் பெருபவர்களும் நொந்து போயுள்ளனர். பணம் படைத்தவர்களோ தங்களது பணத்தை வங்கிகளிலிருந்து மீளப்பெற நீண்ட வரிசைகளில் நிற்கவேண்டியுள்ளனர். இவ்வாரு மக்கள் எதிர்நோக்கும் பல ஆயிரம் பிரச்சினைகளையும், சவால்களையும், சங்கடங்களையும் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.  

இவ்வாரான இக்கட்டான ஒரு நிலையினை ஒரு நாடு எதிர்நோக்கும் போது மேற்சொன்ன பிரச்சினைகளுக்கு நாடும், அதன் மக்களும் முகம் கொடுக்க நேரிடுவது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. இவ்வாரான சந்தர்ப்பங்களில் அரசு முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாட்டு நலன் கருதி, கீழ்த்தரமான அரசியல் நலன்களுக்கு அப்பாற்பட்டு ஒத்துழைப்பாக செயல்பட வேண்டியது அனைவரினது தார்மிக பொருப்பாகும். 

அந்த வகையில் இன்றைய எதிர்கட்சியினதும், ஏனைய அரசியல் கட்சிகளினதும் நடவடிக்கைகளை பாராட்டுவதே எனது நோக்கமாகும். அரசின் குறைகளையும், அர்த்தமற்ற சில நடவடிக்கைகளையும் தனது வங்கரோத்து அரசியலுக்கு பயண்படுத்தாமல் பொருப்போடு செயல்படுவதை பாராட்டுகிறோம். 

தமது அற்ப எதிர்கால அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக இந்த தொற்று நோயினை பயண்படுத்தி குளிர்காய நினைக்காமைக்காக நாம் அவர்களை பாராட்டுகிறோம். தாம் எதிர்கட்சினர் என்பதற்காக, அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்காமல் ஒத்துழைத்தமைக்காக நாம் அவர்களை பாராட்டுகிறோம்.

இன்றைய ஆளும் கட்சியினர் எதிர்கட்சியாக இருக்கும் போது, வெங்காயத்தையும், தக்காளிக்காவையும், கரட்டையும் கொண்டுவந்து செய்தியாளர் சந்திப்பை நடாத்தியது போன்றும், பெற்றோலிற்கான விலை வெரும் 7ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போது, ஆர்பாட்டங்களையும், வேலைநிருத்தங்களையும் முன்னெடுத்து நாட்டை முடங்கச் செய்தது போன்று இன்று பொதுமக்களுக்கு சுமார் 42ரூபாவிற்கு வழங்க முடியுமான பெற்றோலை வழங்காததை பயண்படுத்தி அற்ப அரசியல் செய்யாத இன்றைய எதிர்கட்சியையும், ஏனைய அரசியல் கட்சிகளையும் நாம் பாராட்டுகிறோம்.

நாட்டையும் அதன் மக்களையும், அதன் பொருளாதாரத்தையும் மீள கட்டியெழுப்ப அரசுக்கு எப்போதும் ஒத்துழைபாக இருப்போம் என்ற அவர்களது கொள்கையை பாராட்டுகிறோம். 

கொரோனாவை காரணமாக காட்டி, நாட்டை அழிவுக்கு இட்டுச் சென்று எதிர்வரும் பொதுத் தேர்தலை இலகுவாக வெற்றிகொள்ள நினைக்காத எதிர்கட்சியின் நாட்டுப்பற்றினை பாராட்டுகிறோம். 

சில அரசியல்வாதிகளினதும், அரசியல் கட்சிகளினதும் கைம்பொம்மைகளாக யெல்பட்ட சில ஊடகங்களைப் போன்று, தர்மத்தை பேனும் ஊடகங்களையும், அவற்றை முறைகேடாக பயண்படுத்தாத எதிர்கட்சியையும் ஏனைய அரசியல் கட்சிகளையும் நாம் பாராட்டுகிறோம்.

கட்சிகள் பல இருக்கலாம், சட்டங்களும், சம்பிரதாயங்களும் வந்துபோகலாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டையும் மக்களையும் நேசித்த அனைத்து இலங்கையர்களையும் பாராட்டுகிறோம்.


2 கருத்துரைகள்:

Post a comment