Header Ads



மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி விடுக்கும் செய்தி.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் நடைபெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் எம்மனைவர் மனங்களிலும் ஒரு துன்பியல் நிகழ்வாக பதிந்து கிடக்கிறது.

அந்த மிலேச்சகரமான தாக்குதல்களில் மரணித்தவர்களது குடும்பத்தினர்களது துயரங்களில் நாமும் பங்கேற்கிறோம். அத்தோடு காயங்கள் ஏற்பட்டு துன்புறுபவர்கள் விரைவில் குணமடையவும், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடவும் இறைவனை நாங்கள் பிரார்த்திக்கின்றோம். 

இந்த தாக்குதல் எவ்வித ஐயமும் இன்றி பயங்கரவாதத் தாக்குதலேயாகும். இந்த தாக்குதல்களுடன் முஸ்லிம் பெயர் தாங்கிகள் சம்பந்தப்பட்டிருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு அவமானகரமான ஒன்றாகவே கருதுகின்றோம். 

ஆனால் பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் தாக்குதல் நடைபெற்ற தருணம் முதல் இன்று வரை இந்தத் தாக்குதல்களுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் உரிய தொடர்பு பற்றி நடுநிலையானதும் முஸ்லிம் சமூகத்தின் குற்ற மனப்பான்மை நீங்கும் வகையிலும் கருத்துரைப்பதும் செயற்படுவதும் முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் ஆறுதல் என்பதை நன்றியறிதலோடு நினைவுகூருதல் எமது கடமையாகும்.

அத்தோடு இந்த தாக்குதல்களை மையப்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளும் அதனால் ஏற்பட்ட சொத்தழிப்பு , உயிரிழப்பு , பீதி, அச்சம் என்பனவும் எமது நினைவை விட்டு அகலவில்லை. இந்த சம்பவங்களுக்கும் கிறிஸ்தவ/ கத்தோலிக்க / பொளத்த சமூகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை முஸ்லிம் சமூகமும் கோடிட்டுக் காட்ட விரும்புவதோடு அது தவறாக வழிநடாத்தப்பட்ட ஒரு குழுவினரது நடவடிக்கை என்பது திண்ணமாகும்.

இத்தகைய துன்பியல் நிகழ்வு போன்ற பலவற்றினால் இந்நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக சௌஜன்யமாக வாழ்ந்து வருகின்ற சிங்கள பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முன்னொரு போதும் இல்லாத வகையில் முரண்பாடொன்றையும் இடைவெளியையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதை பலரும் சுட்டிக் காட்டுகின்றனர். 

இத்தகைய நிகழ்வுகள் எமது நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்வதற்கு பதிலாக அனைத்து விதத்திலும் பின்னோக்கியே இட்டுச்செல்லும் என்பது எமது அவதானமாகும். இதன் நீட்சியாக சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் நலிவடைந்ததும் சர்வதேச ரீதியில் தலைகுனிந்த நிலையை அடைந்ததுமான தேசமொன்றினையே எமது எதிர்கால சந்ததியினர் காண நேரிடலாம் என்று ஐயப்படுகிறோம்.

இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைப் போதிப்பதில்லை. தனி மனிதனது உயிரும் மானமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, மனிதர்கள் அனைவரும் இறைவனின் படைப்பு என்றும், வேறுபாடுகள் அற்றவர்கள் என்றும் பறைசாற்றுகின்றது. முஸ்லிம் தான் வாழும் நாட்டின் பிரஜை. அந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு என்பவற்றை பன்பற்றி ஒழுகுவது அவனது மார்க்கக் கடமை. 

இன்று கண்ணுக்கு புலப்படாத கொரோனா வைரஸ் அல்லது COVID 19 ன் கொடூர தாக்குதலால் உலகம் புதியதொரு ஒழுங்கை நோக்கி நகர்கின்ற கால சூழலில்  நாம் அனைவரும் வாழ்கிறோம். நிச்சயமற்ற எதிர்காலமொன்று கண் முன் விரிந்து கிடக்கின்றது. இருப்பினும் நம்பிக்கையோடு இத்தகைய சவால்களை எதிர்கொள்வது அவசியமாகும். 

எமது குறுகிய சிந்தனைப் பாங்கிலிருந்து நாம் விடுபடவேண்டும். வேறுபாடுகள் மறந்த உடன்பாடு காண்கின்ற மனநிலை அவசியப்பட்டு நிற்கும் தருணம் இது. அடக்குமுறைகள், அராஜகம், ஆயுத விற்பனையும் போர்களும் அற்ற உலகொன்றை உருவாக்குவது எமது மறுதலிக்க முடியாத கடப்பாடாக எம்மீது சுமத்தப்பட்டிருக்கிறது.

சர்வதேச சமூகத்தின் ஒரு அங்கத்தினர் என்ற வகையில் இலங்கை எம் தேசமும் இந்தப் பாரிய உலக ஒழுங்கில் இணைய வேண்டும். பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சிந்தனைகள் இயல்பாகவே அமையப்பெற்ற இந்தத் தேசம் உலகத்திற்கே முன்மாதிரியாக தன்னை அமைத்துக் கொள்ள முடியும்.

எனவே அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள், துறைசார் நிபுணர்கள், இளைய தலைமுறையினர், கொள்கை வகுப்பாளர்கள் எம் தேசத்தை எமதுள்ளங்களிலும் சர்வதேச சமூகத்தின் பிரசன்னத்திலும் உயர்ந்து நிற்க தங்களால் இயன்ற பங்களிப்பினை வழங்க வேண்டும். இதனை அடியொற்றி நாம் அனைவரும் ஒன்றிணைவது இத்தருணத்தில் அவசியம் என்றே நாம் கருதுகின்றோம்.


அஷ்ஷெய்க். எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி
தலைவர்,

No comments

Powered by Blogger.