April 30, 2020

தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான, இனவாத போக்கே உள்ளது - நீதிமன்றத்தில் சுமந்திரன்

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராகவே இனவாத பிரசாரங்கள்  இடம்பெறுவதாகவும் அது குறித்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்தினை அடிப்படையாகக் கொண்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு ( ஐ.சி.சி.பி.ஆர்.) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ரம்ஸி ராஸிக் தொடர்ந்தும் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்த ஒருவர் என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இன்று -30- கோட்டை  நீதிவான்  நீதிமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

பிரபல சமூக வலைத்தள எழுத்தாளராக கருதப்படும் ரம்ஸி ராஸிக், சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த வழக்கு இன்று   கொழும்பு பிரதான  நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மேற்படி விடயங்களை நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இன்று -30- வழக்கு விசாரணைக்கு வந்த போது,  சி.ஐ.டி. சார்பில்  உப பொலிஸ் பரிசோதகர்  துஷித்த குமார மன்றில் ஆஜராகி மேலதிக விசாரணை அறிக்கை ஒன்றினை மன்றில் சமர்ப்பித்தார்.

எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் ஆரம்பத்தில் மக்களின் மனநிலையை மாற்றவே முயற்சிப்பதாகவும், ரம்ஸி ராஸிக்கும் அவ்வாறான சில சொற்களைப் பயன்படுத்தி இனங்களுக்கு இடையே குரோதம் ஏற்படும் விதத்திலான சமூக வலைத்தள பதிவுகளை அனைவரும் பார்க்கும்படியாக (பப்லிக்) பதிவிட்டு வந்துள்ளார் என்றும் இதன்போது  குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்பாக ஆஜரான உப பொலிஸ் பரிசோதகர் துசித குமார நீதவான் முன்னிலையில் தெரிவித்தார். 

' இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி, 28 ஆம் திகதி மற்றும் 2019 ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி போன்ற தினங்களிலும் அவர் இதுபோன்ற பதிவுகளைப் பதிவிட்டுள்ளார் என்றும் அதற்கு சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பொது மக்களிடையே குழப்பத்தை தூண்டும் வகையில்  இருந்துள்ளமையை  தெளிவாகின்றது. அவர் தொடர்பில் உளவுத் துறை அறிக்கையைப் பெற்றுள்ளோம். அதனூடாக இந்த விடயங்கள் வெளிப்பட்டுள்ளன. 

மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. ' என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்பாக உப பொலிஸ் பரிசோதகர் துசித குமார நீதிமன்றத்தில் தெரிவித்தார்.  இதன்போது சந்தேக நபரான ரம்ஸி ராஸிக் சார்பில் சட்டத்தரணி டிலன் டி சில்வாவுடன் ஆஜராகி பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், 

' சந்தேக  நபர் ஒரு பிரபலமான எழுத்தாளர். அவர் ஒரு முஸ்லிம்.  அவர் தொடர்ந்தும் இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் இனவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்த அது குறித்து எழுதிவந்த ஒருவர் எனத் தெரிவித்து அதனை உறுதிப்படுத்துவதற்காக பல சமூக வலைத்தள பதிவுகளின் பிரதிகளையும் நீதிமன்றத்தில் முன்வைத்தார். 

அவர் ஒரு போதும் இனவாதத்தை தூண்டவில்லை. நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத போக்கொன்றே உள்ளது. இரு  ஊடகங்கள் பொதுக்களத்தில் இனவாதத்தை தூண்டுகின்றன. குறிப்பாக இந்த கொவிட் தொற்று  நிலைமையை எடுத்து பாருங்கள். முதல் தொற்றாளர்  அடையாளம் காணப்படும் போது அவர் வெறும் தொற்றாளர்.

முஸ்லிம் ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணும் போது அவரின் இனத்தை குறிப்பிட்டு பல்வேறு பிரச்சாரங்கள் இடம்பெறுகின்றன.  குறிப்பாக  நாட்டில் பிரதான ஊடகமொன்றின் சதுர என்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் பொது வெளியில் (பப்லிக்) முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாத பிரச்சாரங்கள் மேற்கொள்கிரார். அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை. அவரை நெருங்கக் கூட எவரும் முற்படுவதில்லை. இங்கு முஸ்லிகளுக்கு எதிராகவே இனவாதம் தூண்டப்படுகின்றது என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக் காட்டினார்

இதன்போது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக யார் இனவாதத்தை தூண்டுகிறார் என நீதிவான் லங்கா ஜயரத்ன  கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், அரசுதான் என பதிலளித்தார்.

அத்துடன், எனது சேவைப் பெறுநர் கைது செய்யப்பட்டுள்ள தோற்றுவித்துள்ள பதிவு, இனங்களுக்கு இடையே குரோதத்தை ஏற்படுத்தும் விதமான பதிவொன்று அல்ல.  குறித்த பதிவு முஸ்லிம்கள் வன்முறைகளை நோக்கி செல்லக் கூடாது என்பதையே வேண்டுவதாக உள்ளது.  சொற்களையன்றி முழுமையான கருத்தையே பார்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள ரம்ஸி ராஸிக் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் என்பதோடு ஏனைய அவரது ஆரோக்கிய நிலைமையையும்  கருத்திற் கொண்டு பிணை வழங்கப்பட வேண்டும்.' என  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றைக் கோரினார்.

அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்ட நீதவான், கைதுசெய்யப்பட்டுள்ள ரம்ஸி ராஸிக் வேண்டுமென்றே குற்றம் புரிந்துள்ளாரா என்பதைத் தேடி ஆராய்ந்து, அவரது முகநூல் கணக்கையும் முழுமையாக ஆராய்ந்து , ஒரு விரிவான பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் நீதிவான்  நீதிமன்றத்தில் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க முடியாத ஐ.சி.சி.பி.ஆர், கணினிக் குற்றங்கள் போன்ற சட்டங்களில் கீழ் சந்தேக நபர்களை முன்னிலைப் படுத்துவதற்கு முன்னர் அவர்கள் வேண்டுமென்றே குற்றம் புரிந்துள்ளார்களா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும், ஒரு சொல்லை மட்டும் பிடித்துக்கொண்டு கைது செய்து ஆஜர் செய்வது என்பது பொருத்தமற்றது எனவும்  நீதவான் சுட்டிக்காட்டினார். 

எனினும் தற்போதைய சூழலில், குறித்த சந்தேக நபர், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் ஆஜர்படுத்த முடியாதென்று கூறுவதாக இருந்தால், அவற்றை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான எழுத்து மூல ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு ரம்ஸி ராஸிக் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளுக்கு நீதிவான் அறிவித்தார். அவ்வாறு இல்லையெனின், இந்த சட்டத்தின் கீழ் இந்த நீதிமன்றத்தில் பிணை பெற்றுக்கொள்ள முடியாதென்றும், மேல் நீதிமன்றத்திற்கு பிணை மனுவொன்றை முன்வைக்குமாறும் அறிவித்துள்ளார்.

ரம்ஸி ராஸிக்கின் மருத்துவ அறிக்கையை சிறைச்சாலைக்கு அனுப்பவும், அது தொடர்பான விடயங்களை மேற்கொள்வதற்கும் நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரான ரம்ஸி ராஸிக் மே மாதம் 14 ஆம் திகதி  தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


0 கருத்துரைகள்:

Post a comment