Header Ads



சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்யாதோரை, மேலதிக கண்காணிப்புக்குட்படுத்த நடவடிக்கை

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் தொற்று பரவலில் இருந்து  பொது மக்களை பாதுகாக்கும் நோக்குடன் கடந்த மார்ச் 17 ஆம் திகதி, பொலிஸாரின்  நேரடி கண்காணிப்பில் ஆரம்பிக்கப்பட்ட சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் இதுவரை 62 ஆயிரம் பேர்  கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன கூறினார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று -17- ஊடகவியலாளர்களுக்கு  விடயங்களை தெளிவுபடுத்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

' சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடுத்தி கண்காணிக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் கடந்த  மார்ச் 17 ஆம் திகதி முதல் ஆரம்பித்தனர்.

தற்போது  அந் நடவடிக்கைக்கு ஒரு மாதம் பூர்த்தியாகியுள்ளது. இந்நிலையில் இதுவரை இந்த ஒரு மாதத்தில் 62 ஆயிரம் பேர்வரை சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 39 ஆயிரம் பேர்வரை தற்போது  தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்துள்ளனர். மேலும் 23 ஆயிரம் பேர் வரை தொடர்ந்து தற்போதும் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் கீழ்  கண்காணிப்பில் உள்ளனர்.

 இந் நிலையில் அண்மையில், தனிமைப்படுத்தல் காலத்தின் பின்னரும் சில கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த பின்னணியில்,  பதில் பொலிஸ் மா அதிபரின் விஷேட உத்தரவுக்கு அமைய, தனிமைப்படுத்தல்  காலத்தின் பின்னர்,  சுய தன் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தோரை கண்காணிக்கும் விஷேட பொறி முறை அமைக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு பொலிஸ் நிலையங்கள் ஊடகவும் அவ்வந்த பொலிஸ் பிரிவுகளில் இந் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன்,  அவ்வாறு தனிமைப்படல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்த எவருக்கேனும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால், அல்லது அது சார்ந்த சந்தேகங்கள் எழுந்தால் அந்த பொலிஸ் நிலையம் ஊடாக உரிய சுகாதார அதிகாரிகளை இணைத்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.