April 11, 2020

சக்காத்தை முன்கூட்டியே வழங்கலாமா...?


- சட்டத்தரணி பஸ்லின் வாஹிட் -

ஆளுக்கு ஆள்
குடும்பத்துக்கு குடும்பம் 
வீதிக்கு வீதி 
ஊருக்கு ஊர் 
உதவிய கரங்கள்

உதவிக் கொண்டிருக்கும் கரங்கள் ஓராயிரம். உலகையே ஆட்டிப் படைத்து உலக மக்களின் மூன்றில் ஒரு பகுதியை வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வைத்திருக்கும் இந்த வைரஸின் வீரம் இன்னும் எத்தனை நாளுக்கு தொடரப் போகின்றது என்பது யாருக்குமே தெரியாத புதிர், புரியாத புதிர். படைத்த இறைவன் மட்டுமே அறிவான். இலங்கை மக்களையும் மூன்று வாரங்களாக வீடுகளிலேயே முடக்கி வைத்திருக்கிறது.

பணத்தைக் கொண்டு பலத்தைக் கொண்டு  உலகையே ஆட்டிப் படைக்கலாம் என்று நினைத்த உலக மக்கள் அனைவருக்கும்  பணத்தினதும்  பலத்தினதும் துணை கொண்டு  பிணமாவதை  தடுக்க முடியாது என்ற பாடத்தை மீண்டும் புகட்டுகின்றது இந்த கொடூர வைரஸ்.

கைகளில்  வீடுகளில் இருந்ததைக் கொண்டு முதலாம் வாரமும், உற்றார் உறவினர் ஊரார் செய்த உதவிகளுடன் இரண்டாம் வாரமும், அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவன உதவிகளுடன் மூன்றாம் வாரமும் கழிந்து விட்டது. அடுத்து எங்கே போவது என்று தெரியாமல் பல  குடும்பங்கள் ஏங்கி நிற்கின்றன. ஏழைகள் என்ற வர்க்கத்தினர் மட்டுமல்லாமல் நடுத்தர மக்களும் இன்று கைநீட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மௌனமாக இருப்பது தங்களது பிரச்சினைகளை வெளியில் சொல்ல முடியாமல் வெட்கிப்பதனால் ஆகும்.

புனித ரமழான் மாதம் நெருங்குகின்றது. 'ஸக்காத் 'என்ற  ஏழைகளின் வரி. அது எட்டு கூட்டங்களுக்கு உரித்தானது. அந்த எட்டு கூட்டத்தினுள் கடந்த வருடம் அடங்காத, உள் வராத பல நடுத்தர குடும்பங்களும் இவ்வருடம் உள்ளடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஸக்காத் பணத்தை வழங்குவதற்கு நோன்பின் இறுதிப்பகுதி வரை காத்திருக்கத் தான் வேண்டுமா? அது ரமழான் மாதத்தில் மட்டும் தானா கொடுக்க வேண்டும் ? இல்லை. அப்படி எந்தவிதமான ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் இல்லை. வருடத்தில் எப்பொழுதும் கொடுக்கலாம் அதை விடவும் அதனை  முன்கூட்டியே கொடுக்கலாம் என்று கூட பல ஹதீஸ்களில் உள்ளது. 

நோன்புக்கு முன் ஸக்காத்  பணத்தில் ஒரு தொகையை இன்றைய அத்தியாவசிய தேவையான பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த  உதவுவதற்கு சிந்திக்கலாம்.

அவ்வாறு கொடுப்பதில் உள்ளங்கள் தயங்குகின்றன என்றால் 'ஸதகாவை' மேலும் வலுப்படுத்துவோம். கடமையான ஸக்காத்துக்கு  அப்பால் ஒரு மனிதன் ஸதகாவை  கொடுக்கும்போது அதற்கு பல மடங்கு நன்மைகளை அல்லாஹுத்தஆலா அள்ளித் தருவான். ஸதக்கா கொடுப்பதற்கு கூட்டங்களை தேடிக்கொண்டு இருக்க அவசியமும் இல்லை. நடக்கும் பாதையில் இருக்கும் ஒரு வாழைப்பழத் தோலை எடுத்து ஒதுக்குப்புறமாக வீசுவதும் ஸதகாவில் அடங்கும் என்கிற மார்க்கம் இஸ்லாம். இன்றைய தேவை, பண பொருள் உதவிகள். ஒரு சிறு தொகையையாவது  ஏனையோருக்கு உதவும் பணியில் மீண்டும் செலவழிப்பதை பற்றி சிந்திப்போம்.

இவற்றுக்கப்பால் பல பள்ளிவாயல்களில் பெருந்தொகை பணம் கணக்குகளில் முடங்கிக் கிடக்கின்றன. மாதாந்த வருமானம் மூலம் சேகரித்த பணம் ஒருபுறமிருக்க வாராந்தம் பள்ளிவாயல்களில் தொழுகைக்குப் பின்னர் கட்டட நிதி என்றும் பராமரிப்பு நிதி என்றும் சேகரிக்கப்பட்ட பணமும் இவற்றில் அடங்குகின்றன.

பள்ளிவாயல்கள் விஸ்தரிப்புகளை அல்லது அவற்றின் அபிவிருத்தி திட்டங்களை கொஞ்ச காலத்துக்கு தள்ளிப் போட்டுவிட்டு அப்பணத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் செலவிட நம்பிக்கையாளர் சபைகள் முன்வரவேண்டும். அந்தப் பணத்தை பொதுமக்கள் நலனுக்காக செலவிட முடியும் என்று 'வக்பு' சட்டத்திலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளரும் அண்மையில் இது சம்பந்தமான அறிவித்தல்களை வழங்கியிருந்தார். இந்தப் பணத்தை செலவிடுவதில் சட்டரீதியான எந்தத் தடையும் இல்லை. ஆகவே நம்பிக்கையாளர் சபைகள் இந்த விடயத்தில் உடனடி தீர்மானங்களை எடுக்க வேண்டும். இது விடயமாக அண்மையில் ஒரு பள்ளிவாயல் நம்பிக்கையாளரருடன் நான் கதைத்த போது அவர் கூறினார் அந்த பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளார்களாம். நம்பிக்கை சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதில் இதுவும் ஒன்று. 

பணிப்பாளரின் கட்டளையை புறக்கணிப்பு செய்யும் சபைகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா என்பது பற்றியும் சிந்திக்க வேண்டி வரலாம். ஆகவே இன்றைய காலத்துக்கு ஏற்ப சில முடிவுகளை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. இது பற்றி ஒவ்வொரு தனிமனிதனும் சிந்திப்போம்.

இவற்றையெல்லாம் எழுதும் நான் ஒருவேளை சிலருக்கு சமூகத் துரோகியாகக் கூட இருக்கலாம் ஆனால் உண்மையை எடுத்துக் கூறுவதில் தயங்கப் போவதில்லை. அது என் கடமை.

2 கருத்துரைகள்:

நல்ல ஆலோசனை .முதலில் மனிதம் வாழ வேண்டும் .

Yes. It will be a useful information for Ulama sabah

Post a Comment