Header Ads



முகநூல் ஆர்வலர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- இப்னு செய்யத் -

கொவிட் - 19 வைரஸ் தாக்குதலில் அரசியல் இலாபம் அடைந்து கொள்வதற்குரிய நடவடிக்கைகளில் வல்லரசு நாடுகள் உட்பட சாதாரண அரசியல்வாதிகள் வரை முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் தாங்கள் பிரபல்யம் அடைய வேண்டுமென்பதற்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை, தமது நடவடிக்கைகளினால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு கொடுப்பதில்லை. யாருடைய வீட பற்றினாலும் தனக்கு நெருப்பாக வேண்டும். அதில் தான் பிடி பற்றவைத்துக் கொள்ள வேண்டுமென்றுதான் நினைக்கின்றார்கள். இதில் ஒரு சில அதிகாரிகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு, ஊடகவியாலாளர்கள் என்ற போர்வைக்குள் தாமாகவே உட்பிரவேசித்துக் கொண்டு செயற்பட்டிருக்கும் முகநூல் ஆர்வலர்களும் கொவிட் -19 வைரஸ் தாக்க விவகாரத்தில் பொறுப்பற்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருப்பதனை அவதானிக்கின்றோம். இதே வேளை, இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டுக் கொண்டிருப்பதனையும் அவதானிக்கின்றோம்.

இலங்கையில் இந்த நிமிடம் வரை கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்கு 190 பேர் ஆளாகியுள்ளார்கள். இவர்களில் அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றார். நாட்டில் ஏனைய பிரதேசங்களில் கொவிட் - 19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான போதிலும், அவர்கள் பற்றி முகநூலில் பெரிய அளவில் நேரடி ஒளிபரப்புக்கள் செய்யப்படவில்லை. அந்த நபர், இடம் பற்றி அதிகாரிகள் விரிவான விளக்கம் கொடுக்கவில்லை. அதிகாரிகள் யாரும் இப்பிரதேசத்தில் கொவிட் - 19 வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்கள் உள்ளார்கள் என்று தெரிவிக்கவில்லை. 

ஆனால், அக்கரைப்பற்றில் அதுவும் அம்பாரை மாவட்டத்தில் முதலாவது கொவிட் - 19 வைரஸ் தொற்று நோயாளி என்றவுடன் உடனடியாக அந்த பிரதேசத்திற்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சென்றுள்ளார். கடமையின் நிமித்தம் அவர் சென்றுள்ளார் என்பதுதான் உண்மை. அதே வேளை, அவ்விடத்தில் முகநூல் ஆர்வலர்களும் சென்றுள்ளார்கள். இந்த முகநூல் ஆர்வலர்கள் வழக்கம் போன்று சுடச் சுடச் செய்தி என்ற ஆர்வக் கோலாறு காரணமாக நேரடி ஒளிபரப்பு ஒன்றினை செய்கின்றார்கள். இதன் போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கொவிட் - 19 தொற்று நோயாளி பற்றியதொரு விரிவான விளக்கத்தை கொடுக்கின்றார். அவர் தான் நின்று கொண்டிருக்கும் வீதியின் பெயரைக் குறிப்பிடுகின்றார். இதனால், அந்தப் பிரதேசம் முழுமையாக காட்டப்படுகின்றது. 

அக்கரைப்பற்று மக்கள் மட்டுமன்றி அம்பாரை மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் அச்சமடைந்து விடுகிறார்கள். இந்த ஒளிபரப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மற்றுமொரு முகநூல் ஆர்வலர் களியோடை பாலத்தில் நின்று கொண்டு நேரடி ஒளிபரப்பு இடம்பெறுகின்றது. இதன்போது அக்கரைப்பற்றில் கொவிட் - 19 வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர் அடையாளங் காணப்பட்டுள்ளார். இதனால், பாதுகாப்பு கருதி களியோடை பாலம் முற்றாக மூடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றார். இதற்கு நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளரும், நிந்தவூர் பிரதேச செயலக செயலாளரும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்று இந்த இரண்டு பேருக்கும் புகழாரம் செய்யப்படுகின்றது. 

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது எந்தவொரு வாகனமும் வீதியால் பயணிக்க முடியாது. அவசர தேவைக்காக மட்டும் பயணிக்க முடியும். அதற்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆதலால், களியோடை பாலம் மூடப்பட்டுள்ளது என்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அவசர தேவைக்காக அனுமதியுடன் செல்வதற்குரிய வாய்ப்பு பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்பட்டது. 

இந்நிலையில்  நேற்று முன் புதிதாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியிலும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பகுதியிலும்  விஷேட பாதுகபபு நடை முறைகளை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டன. அதற்கு அமைவாகவே களியோடை பாலத்தில் மாத்திரமன்றி பொத்துவில் அக்கரைப்பற்று வீதிகளிலும், அக்கரைப்பற்று அம்பாரை வீதியிலும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டனர். 

அரசாங்கத்தின் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் கொவிட் - 19 வைரஸ் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்துக் கொள்வதேயன்றி, பொது மக்களை கஸ்டத்திற்குள்ளாக்குவதல்ல. 

ஆனால், சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அரசாங்கம் எடுத்துக் கொண்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பயன்படுத்திக் கொண்டு, தங்களினால் இந்த பனம் பழம் விழுந்ததென்று பெயர் சூட்டிக் கொள்கின்றார்கள். தாங்கள்தான் முதன்முதலில் இந்த செய்தியை வழங்கினோம் என்று காட்டுவதற்கு முற்பட்டுக் கொண்டதனை அக்கரைப்பற்று சம்பவத்தில் காண்கின்றோம்.nகோவிட் - 19 தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேற்பார்வை, கட்டளைகள், ஆலொசனைகளுக்கு அமையவே வெற்றிகரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சிலரின் பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் அரசாங்கத்தின் நோக்கத்தை அடைந்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. கொவிட் 19 மூலமாக இனவாதம் பேசுகின்றவர்களின் வாய்களுக்கு அவல் போட்டது போன்றும் உள்ளது.

ஆதலால், பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டு பிரதேசவாதத்தையும், இனவதத்தையும் தங்களுக்கு தெரியாமலேயே தூண்டிக் கொண்டிருக்கும் முகநூல் ஆர்வலர்களுக்கு எதிராக அரசாங்கம் தகுந்த நடவடிக்கைளை எடுக்க வேண்டும். 

No comments

Powered by Blogger.