April 10, 2020

நள்ளிரவு ஒத்திகை; ஊமை இரவில் ஒரு சம்பாஷனை

"அந்த சைனாகாரனுக்கு எத திங்கிறதென்ட அறிவே இல்ல."
என்றபடி கட்டிலில் அமர்ந்தாள் சுலைஹா.

"பாருங்க சுலை. முடிச்ச இந்த ஒரு வருஷத்துல நீங்க செஞ்சதுக்கெல்லாம்  நான் கோபப்பட்டேனா?"
அப்பாவியாகக் கேட்டான் கணவன் அஹ்மத்.

"எனக்கு மூளை இல்ல என்டு மறைமுகமா சொல்றதா நெனப்பா!"
உறைப்பின்றி முறைத்தாள்.

"சைனாகாரன விடுங்க. இந்த கொரோனா வைரஸால எங்கட ஊருல ஒரு உசுரும் போய்ட்டுது. ஊரையே முடக்கிப் போட்டுட்டாங்க. ஆனாலும் ரெண்டு நாளக்கி முன்னாடி இந்தத் தெருவுல என்ன நடந்துச்சு.?'
எதுவும் சொல்லத் தோன்றாமல் அமைதியானாள் சுலைஹா.

சகோதர மதத்தவர்கள் கண்டிருந்தால் "மொத்தமாக வந்து குடியேறிய வைரஸ்கள்" என சொல்லியிருப்பார்கள், அன்று ஹெமில்டன் கால்வாய் அருகே திரண்டிருந்த அந்தத் தெருக்காரர்கள் காலையில் சேர்ந்து கஞ்சி காய்ச்சிப் பகிர்ந்த கதை காவல்துறைக்கு எட்டியிருந்தால் அனைவரையும் காய்ச்சி வடித்திருக்கும்."

"ஊரச்சேர்ந்த ஜனாஸா கொரோனாவால எரிக்கப்பட்டும் கூட எங்கட சனம் யோசிக்காம நடக்குதே."

ஆதங்கப்பட்டவனைப் பார்த்து,
அந்த நபரின் குடும்பத்தில இன்னும் மூனு பேர்க்கு நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கு போல...' என வருத்தப்பட்டாள்.

கதவைத் தாளிட்டு பக்கத்தில் அமர வந்தவனை,
'வேணா...'
அவசரமாகத் தடுத்தாள்.

ஏன் என அவன் வாயை விரிக்க,

'ஓ கொட்டாவியா? தும்மப் போறீங்க என்டு பயந்துட்டன்'.
சத்தமின்றி சிரித்தாள்.

'இனி காலம் பூரா நான் தான் ஒங்களுக்கு பாதுகாப்பு. தெரியுமா'
என்றபடி அருகானான்.

உண்மையா? கோடையும் மாரியும் முறையா வருதோ இல்லயோ, வியாதிகள் தானே பருவ காலமா மாறி, மாறி வருது.' அவனை அசைத்துப் பார்த்தாள்.

"கொரோனாவ விட கொடும இந்தப் பொஞ்சாதி."

அவன் பக்கமாகத் திரும்பி,
'இதுவரை ஏழு பேர் இறந்துட்டாங்க. அச்சுறுத்தல் நேரம், இப்போ எச்சரிக்கையோடு நடப்போம்.
சந்தோஷத்தில ஒன்றா கலப்போம்.' என்றாள்.

'தத்துவமா டியர்?'

'மார்ச் முப்பதில் எரிக்கப்பட்டது ஜனாசா இல்ல. எங்க உரிமை. இது எதுக்கான ஒத்திகையோ' சலித்துக்கொண்டாள்,
காற்றில் அவளது முகத்தில் விழுந்த முடியை நீவியபடி.

"இது எதுக்கான ஒத்திகை" என கேட்டான்.

"எதைக் கேக்குறீங்க."

"விழிப்புணர்வு வேணும் தான். அதுக்காக தூங்கவிடாமலா பேசுவீங்க?"

"என்ன செய்ய. பகல் நேரம் நான் பேசினா ஒங்களுக்கு காதே கேக்குறதில்லயே"

"ம்.. அந்த மகா தவறை இனி செய்யவே மாட்டேன். பெறும் பிழை செய்தவன் போல் காட்டிக்கொண்டவன், சீனாவைப்போல் நாங்களும் இந்த அச்சுருத்தலில் இருந்து மீண்டிடுவோம். சரிதானே.?
இந்த வைரஸ்க்கு எவ்ளோ நேசம் பார்த்தீங்களா.. மனுஷன விடமாட்டேங்குது."
என அவளைப் பார்த்தான்.

தொழில் பாதிப்பு இருந்தாலும் அதை மறைத்து அவளிடம் நம்பிக்கையாகவே பேசும் அவனை உள்ளூர ரசித்தபடி அமர்த்தலான குரலில் சொன்னாள்
"சில அமீபாக்களால் அடிக்கடி தொல்லை தான்."

எழுத்தும், சிந்தனையும்: போருதோட்டை மனால்

0 கருத்துரைகள்:

Post a comment