Header Ads



கொழும்பில் தங்கியுள்ள வெளிமாவட்ட, ஊழியர்களுக்கான முக்கிய அறிவித்தல்

(ஆர்.யசி)

கொழும்பில் தங்கியுள்ள வெளிமாவட்ட வேலையாட்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்புவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும், 20 ஆம் திகதியின் பின்னர் அவர்கள் தொடர்பில்  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்கம் கூறுகின்றது. வெளியேற விரும்பும் நபர்கள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தம்மை பதிவுசெய்துகொள்ளுமாறும் தெரிவிக்கின்றது.

தமது வாழ்வாதாரத்திற்காக கொழும்பில் தங்கியிருந்து பணிபுரியும் வெளிமாவட்ட ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சத்தை அடுத்து தமது பிரதேசங்களுக்கு செல்ல முடியாத நெருக்கடியில் உள்ளதை  அடுத்து அரசாங்கம் இது குறித்து எடுக்கவிருக்கும் தீர்மானம் என்னவென வினவியபோதே அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவற்றைக் கூறினார்.

அவர் இது குறித்து கூறுகையில்,

தொழில் நிமிர்த்தம் கொழும்பில் தங்கியுள்ள வெளிமாவட்ட வேலையாட்கள் அனைவரையும் அவர்களின் பிரதேசங்களுக்கு அனுப்புவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. 20 ஆயிரத்திற்கும் அதிகமான வெளி மாவட்ட மக்கள் கொழும்பில் வேலை நிமிர்த்தம் தங்கியுள்ளனர். 

இவர்களை 20ஆம் திக்குக்கு பின்னர் வெளியேற்றுவது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. அமைச்சரவையிலும், கொழும்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கூட்டத்திலும் இந்த விடயங்கள் அதிகமாக கலந்துரையாடப்படுகின்றது. இந்த விடயத்தில் அரசாங்கம் நினைத்தால்போல் ஒரு தீர்மானத்தையும் முன்னெடுக்க முடியாதுள்ள ஏனெனில் மருத்துவ அதிகாரிகள் இந்த விடயத்தில் என்ன கூறுகின்றனர் என்பது கேட்டறியப்பட வேண்டும்.

எவ்வாறு இருப்பினும் இவர்களை மீண்டும் அவர்களின் பிரதேசங்களுக்கு அனுப்பும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. அவ்வாறு தங்கியுள்ள நபர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தம்மை பதிவுசெய்துகொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்த நபர்கள் குறித்து மருத்துவ அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்துவார்கள்.  அத்துடன் கொழும்பில் பாதிக்கபட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவது குறித்த வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுக்க உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.


No comments

Powered by Blogger.