April 03, 2020

இன்ஷா அல்லாஹ் இந்நோயிலிருந்து விடுபடலாம்...


- சட்டத்தரணி பஸ்லின் வாஹிட் -

2019ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட Dettol  போத்தல்களில் கொரோனா கிருமியையும் அழிக்கும் ஆற்றல் உண்டு என்றவாறு அதன் லேபலில்  குறிக்கப்பட்டிருந்தது. இந்த வைரஸ் நோய் வருவதற்கு முன்னர் எவ்வாறு கொரோனா உள்ளது என்பதை குறிப்பிட்ட நிறுவனம் அறிந்துகொண்டது என்று பலரும் வியந்த வண்ணம் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் பறந்துகொண்டிருந்தன.

சுவாசத் தொகுதியைத் தாக்கும் வைரஸ்களுக்கு பொதுவான பெயர் கொரோனா. இந்த வகையான வைரஸ் பல உள்ளன.சாதாரண தடிமல் கொண்டு பல்வேறுபட்ட சுவாச நோய்களுக்கு காரணியாக உள்ள வைரஸ்கள் கொரோனா வகையைச் சேர்ந்ததாகும் .அதனால்தான் தற்போது பரவும் வைரசுக்கு  Covid-19 என்று பெயரிடப்பட்டது. 

 இன்றைக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ஒரு வைத்திய குறிப்பிலும் கொரோனா என்று குறிப்பிட்டு இருந்ததை ஆச்சரியத்துடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டிருந்தனர் .
ஆகவே இங்கு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதை அனைவரும் புரிந்திருப்பீர்கள். அத்தோடு இம்முறை வந்தது மரபணு திரிபடைந்த ஒரு புதிய corona வைரஸ் ஆகும். 

இந்த வைரஸ் ஒருவரை தொற்றி உள்ளதா என்பதை எவ்வாறு பரிசோதனை மூலம் கண்டு கொள்ளலாம் என்பது சம்பந்தமாக பலரும் அறிய ஆவலாய் இருப்பர். ஒருவருக்கு கொரோனா தொற்றி உள்ளதா என்பதை பரிசோதிப்பதற்கு என்று இரண்டுமுறைகள் உள்ளன. ஒன்று அவரின் மூக்கின் ஆழமான பகுதிகளில் இருந்து அல்லது சுவாசத் தொகுதியில் இருந்து எடுக்கும் திரவத் துளியை பரிசோதித்து அதில் covid 19 வகை வைரஸ் கிருமிகள் உள்ளனவா என நேரடியாக பரிசீலிக்கலாம். இது இன்று பரவலாக எல்லா உள்ள இடத்தில் உள்ள பரிசோதனை முறையாகும்.

 அது உடலுக்கு நோய் கிருமி ஒன்று தொற்றியதும்  உடலில் பிறபொருள் எதிரி (Antibody) உருவாக்கப்படும்.  அதாவது நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்காக உடலில் இயற்கையாகவே உருவாக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தியே இதுவாகும்.உடலில் இரத்த மாதிரி ஒன்றை எடுத்து அதில் இந்த வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி உருவாக்கப்பட்டு உள்ளதா என்பதை பரிசோதிப்பது இரண்டாவது வகை முறையாகும். இந்த வகை பரிசோதனை மூலம் நோயாளிக்கு எந்த அளவு நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாக்கப்பட்டு உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.தற்போது பரவலாக உலகெங்கிலும் இவ்விரு பரிசோதனைகள் முறைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. இந்நோய்க்கு மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல் வைரஸ்களுக்கு எதிராகச் ஏற்றப்படும் தடுப்பூசி மருந்தும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.இதற்கு எதிரான தடுப்பூசி ஒன்றை கண்டுபிடிப்பதற்கு கூட இன்னும் குறைந்தது ஆறு மாதங்களாவது செல்லும் என்று பிரபல இந்திய வைத்தியர் ஒருவர் கூறுகின்றார் .அதுவரை நாம் நோய் கிருமிகள் தொற்றாது பாதுகாப்பாக இருக்க வேண்டியதே ஒரே வழி.

 அதேநேரம் நோய்க் கிருமிகளுக்கு தொற்றுக்கு உள்ளாகியவர்களில் 80 வீதமானவர்களுக்கு எந்தவிதமான மருத்துவமும் அவசியமில்லை.அவர்கள் தானாகவே குணமடைந்து விடுவர் .20 வீதமானவர்களுக்கு உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதன் காரணமாக வைத்திய உதவி தேவைப்படுகின்றது. அதிலும் ஐந்து வீதமானவர்களே மரணத்தை தழுவுகின்றனர் இதில் ஏற்கனவே நாட்பட்ட நோய்களை உள்ளவர்கள் குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் ,நீரிழிவு சுவாசக் கோளாறுகள் ,சிறுநீரகப் பிரச்சினைகள் போன்ற நோய்களை உடையவர்களுக்கு இந்நோயின் கிருமிகளின் தாக்கமும் சேர்ந்து கொள்வதன் காரணமாக போதிய நோய் எதிர்ப்பு சக்தி இன்மையினால் மரணத்தை தழுவுகின்றனர்.இத்தாலியில் 93 வயதுடைய பெண்மணி ஒருவரும் இந்திய கேரள மாநிலத்தில் 93,88 வயது உடைய தம்பதிகளும் நோய்க் கிருமியின் தாக்கங்களின் பின்னர் முற்றாக குணமடைந்துள்ளனர். இலங்கையில் மரணமடைந்த நோயாளர்களை நோக்கும் போதும் அவர்களில் 3 பேர் ஏற்கனவே பல்வேறு நோய்களுக்கு ஆளானவர்கள் என்பது புரிகின்றது. அதற்காக இது வயோதிபர்களை மட்டும் மரணத்தருவாயிற்கு கொண்டு போகும் என்பது அல்ல. இது வயது வேறுபாடின்றி எல்லோரையும் தாக்கக் கூடியது.என்றாலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால்  காப்பாற்றப்படுகின்றனர்.

இளம் வயதினருக்கும் சிறு பிள்ளைகளுக்கும் இந் நோய்க்கிருமிகள் தொற்றி இருந்தாலும் எந்த விதமான அறிகுறிகளும் தென்படாமல் குணமடையும் வாய்ப்பு அவர்களுக்கு அதிகம்.ஆனால் சிறுபிள்ளையிடமிருந்து வயோதிபர் ஒருவரை தாக்கும்போது அது வயோதிபர் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே வயோதிபர்களை சிறுபிள்ளைகள் இடமிருந்து காப்பாற்றுவதும் இன்றைய தேவையாக உள்ளது. சுருக்கமாக கூறினால் எல்லோருமே தனிமைப்படுத்தல் அறிவுரைகளை சரியாக பின்பற்றினால் இந்நோயிலிருந்து இன்ஷா அல்லாஹ் விடுபடலாம்.


1 கருத்துரைகள்:

Corona is a group of virus existing over a long period of time.currrntbone us covid 19.what is stated in the bottle was a general property of that disinfectant.people should read well before posting articles of public importance

Post a comment