Header Ads



பழைய பாராளுமன்றம் தானாகவே செயற்பட ஆரம்பிக்கும் - அகில விராஜ்

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்தி நாடாளுமன்றத்தை கூட்ட முடியாது போனால், பழைய நாடாளுமன்றம் தானாகவே செயற்பட ஆரம்பிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தேர்தல் நடத்த இருக்கும் வசதிகள் சம்பந்தமாக எதனையும் செய்ய முடியாது என்ற காரணத்தினாலேயே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தேர்தலுக்கான திகதியை வழங்கினார் என்பது அவரது தெளிவுப்படுத்தல் மூலம் நாம் புரிந்துக்கொள்ளக் கூடியதாக இருந்தது.

அரசியலமைப்பு ரீதியான பிரச்சினை இருப்பதும் அவரது பேச்சின் மூலம் உணர முடிந்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் புதிய நாடாளுமன்றத்தை ஜூன் 2 ஆம் திகதிக்கு முன்னர் கூட்ட முடியாது என்றால், பழைய நாடாளுமன்றத்தை தானாகவே கூட்ட வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.