April 15, 2020

கொரோனாவால் இறப்பவர்களுக்கு, இறுதிச்சடங்கு செய்யும் இஸ்லாமியர்

இந்தியாவின், குஜராத்தில் கொரோனாவால் இறக்கும் நபர்களுக்கு இஸ்லாமியர் இறுதிச்சடங்கு நடத்தி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 396-ஐ தொட்டுள்ளது. 11,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோய் எளிதாக பரவிவிடும் என்பதால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை தொடுவதற்கும், அருகில் செல்வதற்கும் குடும்பத்தினர் சிலர் பயந்து வருகின்றனர்.

அப்படி இருக்கும் நிலையில், குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் வசித்து வரும் அப்துல் மலபாரி என்ற இஸ்லாமியர் ஒருவரின் செயல் தற்போது பலரிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர் எந்த மதம் அல்லது ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும், இவர் இறுதிச்சடங்கை நடத்தி வருகிறார்.

இது குறித்து பிரபல ஊடகமான பிபிசியிடம் கூறுகையில், சுமார் 30 ஆண்டுகளாக, சாலையோரங்களில் பிச்சை எடுப்பவர்கள், இறக்கும்போது அவர்களுடன் யாரும் இருப்பது இல்லை, அதேபோல, தற்கொலை செய்து கொள்பவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு இறப்பவர்களின் இறுதிச்சடங்கை செய்ய யாருமே முன்வருவதில்லை.

இந்த சேவையை கேதார்நாத் வெள்ளம், கட்ச்சில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சென்னையில் சுனாமி வந்தபோதும் நாங்கள் செய்தோம். இந்த சேவையில் என்னோடு சேர்ந்து, 35 பேர் தன்னார்வலர்களாக பணியாற்றுகிறார்கள்.

கொரோனாவின் தாக்கம் அதிகமாக துவங்கியதும், சூரத் பேரூராட்சி அதிகாரிகள் எங்களை தொடர்பு கொண்டு, உலகளவில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக எப்படி ஆயிரக்கணக்கான உயிர்கள் போயுள்ளது என்பது குறித்து விளக்கினர்.

இவ்வாறான மரணங்கள் சூரத்தில் நடப்பதற்கு வாய்ப்புள்ளது என்பதால், அப்படி மரணிப்பவர்களின் உடலை குடும்பத்தினரிடம் கொடுக்க முடியாது, இதனால் இந்த உடல்களை தகனம் செய்யவோ, எரியூட்டவோ முடியுமா? என்று கேட்டார்கள். நாங்கள் உடனடியாக ஒப்புக்கொண்டோம் என்று கூறியுள்ளார்.

மேலும், இணை ஆணையரான ஆஷிஷ் நாயக், இறந்தவர்களின் உடலை எப்படி மூட வேண்டும்? எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும்? என்பதை எல்லாம் கற்றுத்தந்துள்ளதால், நாங்கள் பாதுகாப்பான உபகரணங்களுடன் கிளம்பிவிடுவோம்.

இருப்பினும் கொரோனா தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்பிருப்பதால், உடல சுகாதார நிறுவனத்தின் அறிவுரைப்படி,முகக்கவசம், கையுறை, உடலுக்கான பிரத்யேகமாக ஆடை ஆகியவற்றை அணிந்துகொள்கிறோம்

இறந்தவர்களின் உடல்களில் ரசாயனம் முழுமையாக தெளிக்கப்பட்டு, பிளாஸ்டிக் கொண்டு உடல்கள் கட்டப்படுகின்றன.

உடல்களை எடுத்து செல்வதற்கென எங்களிடம் 5 வண்டிகள் உள்ளன. இதில் 2 வண்டிகளை கொரோனா வைரஸ் மரணங்களுக்காகவே பிரத்யேகமாக ஒதுக்கியுள்ளோம். அதை தொடர்ந்து கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து வருகிறோம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்தால், அவரின் இறுதிச்சடங்கில், குடும்பத்தினர் பங்கேற்க முடியாது. நாங்கள் இந்த பணியை பல காலமாக செய்து வருகிறோம். ஆனால், கொரோனாவால் ஏற்படும் மரணம் என்பது, பயத்தைவிட வலியை அதிகமாக கொண்டுள்ளது.

இறந்தவருக்கு கடைசி மரியாதை செய்ய, குடும்பத்தினர் விரும்புவதை பார்க்கும்போது, வருத்தமளிக்கிறது. அந்த இடத்தில் இருக்கவேண்டும் என குடும்பத்தினர் விரும்புவது இயற்கையான ஒன்று என்றாலும், இந்த சூழலில், அது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது.

இந்த இறுதிச்சடங்கின் போது, அவர்களின் மத நம்பிக்கைப்படி, முறையே இறுதிச்சடங்குகளை செய்வோம் என்று உறுதியளிக்கிறோம்.

ஆனாலும், அவர்கள் சமாதானம் கொள்வதில்லை. சூரத்தில் இறந்த நான்கு பேரில், மூவர் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள்.

தூரத்து சொந்தங்கள் சில நேரத்தில், சற்று தள்ளி நின்று இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

அப்படியான சூழல்களில், இறுதி சடங்கு நடக்கும் இடத்திற்கு அவர்களை நாங்கள் தனியே ஒரு வாகனத்தில் அழைத்து செல்கிறோம். சற்று தள்ளி நின்று பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள் என்று கூறிவிடுவோம்.

தற்போது இது போன்ற சூழ்நிலையில் நாங்கள் இருப்பதால், குடும்பத்தை விட்டு தனியாகவே இருக்கிறோம்.

வேலை முடிந்த பிறகு, நாங்கள் வெதுவெதுப்பான நீரில் கை, கால்களை கழுவி விட்டு, சுத்தமான உடைகளை அணிந்துகொள்கிறோம்.

இருப்பினும் இது எங்களின் குடும்பத்திற்கு ஆபத்தாக அமைய வாய்ப்புள்ளது என்பதால், குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக, அவர்களிடமிருந்து விலகியே வாழ்கிறோம்.

இந்த சூழல் சுமூகமாகும் வரையில், எங்களின் குடும்பத்தை பார்க்கவே முடியாது. எங்களின் அலுவலகத்திலேயே ஓய்வு எடுத்துக்கொள்ளும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.

1 கருத்துரைகள்:

மகத்தான இந்த விடயத்தை அல்லாஹ் பொருந்திக் கொண்டு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலியைத் தருவானாக.

Post a comment