Header Ads



கோபிநாத் என்ன செய்கிறார்...?

"வீட்டை மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டிய கடமை பெண்களுடையது மட்டுமே என நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். அந்த எண்ணம் தவறு என்று ஆண்களுக்கு இந்த லாக்டௌன் புரியவைத்திருக்கும்."

'நீயா நானா' கோபிநாத், லாக்டௌன் நாள்களில் தன் வீட்டுக்குள் வானவில்லைக் கண்டடைந்திருக்கும் அனுபவம் பகிர்கிறார் நம்முடன்...

'' 'வீட்டுக்குக் கிளம்பவே முடியலை... டெய்லி ரொம்ப லேட் ஆகிடுது' என்பது ஒரு 'மித்'துதான். எனக்குக்கூட அப்படித் தோன்றியிருக்கிறது. ஆனால், அதுபோன்ற பல 'மித்'களை இந்த லாக்டௌன் நாள்கள் உடைத்திருக்கின்றன. வேலைப்பளுவை முறையாகத் திட்டமிட்டுக் கையாண்டால், நம்மால் கூடுதல் நேரத்தை வீட்டில் செலவிட முடியும் என்பது இப்போது நன்றாகப் புரிகிறது. வீட்டுக்கு நேரம் செலவு செய்திட முடியாத அளவுக்கு மிகப்பெரிய வேலையில் எல்லாம் நாம் ஒன்றும் இல்லை.

இந்த லாக்டௌன் நாள்கள், வீட்டிலிருந்தால் நாம் என்னென்ன வேலைகளையெல்லாம் செய்யலாம் என்பதை எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது. என் வீட்டையே இப்போதுதான் நான் முழுமையாகப் பார்க்கிறேன். வீட்டின் பால்கனியில் நின்று அதிக நேரம் வேடிக்கை பார்க்கிறேன். வீட்டுக்கு வெளியே இரண்டு முருங்கை மரத்தில் காய்கள் காய்த்திருப்பதைப் பார்க்கிறேன். வீட்டுக்கு வெளியில் நிறைய புறாக்கள் கூட்டமாகப் பறந்து வருகின்றன. திடீரென்று பறந்துபோகின்றன. அவற்றில் இரண்டு புறாக்கள், திடீரென்று வீட்டுக்குள் பறந்துவந்து கிச்சன்வரை வந்து போகின்றன. வீட்டுத் திரைச்சீலைகளின் நிறம், வீட்டுச் சுவரில் அடிக்கப்பட்டிருக்கும் பெயின்ட் நிறம், மனைவியும் மகளும் செய்திருக்கும் அழகுகள்... இப்போதுதான் இவற்றையெல்லாம் கவனிக்கிறேன்.

நம் வீட்டுக் கதவு நிறத்தைத் தவிர, மற்றவர்களின் வீட்டுக் கதவுகளின் நிறங்கள் நமக்கு இதுவரை தெரிந்ததில்லை. ஆனால், இப்போது நாம் அவற்றையெல்லாம் உற்று கவனித்துக் கொண்டிருக்கிறோம். கதவுகளை மட்டும் அல்ல, மனிதர்களையும் இப்போதுதான் நாம் கவனிக்கத் தொடங்கியிருக்கிறோம்.

'வீட்டிலேயே அடைந்துகிடப்பதா? நோ... நோ... நோ... என்னால முடியாது' என்று அரற்றுவார்கள். ஆனால், வீட்டில் இருப்பதும் சுகமான விஷயம்தான் என்பதை நான் கற்றுக்கொண்டேன். இப்போதுதான் எங்கள் வீட்டு மொட்டை மாடிக்குப் போய் பார்க்கிறேன். நிறைய வீடுகளின் மொட்டைமாடிகள் பளிச்செனத் தெரிகின்றன. சென்னையின் வான்வெளி அழகாக இருக்கிறது. இதையெல்லாம் கவனிக்கத் தவறியிருக்கிறோம். அங்கு ஒருவர் தன் ஜிம்மில் எக்ஸர்சைஸ் செய்கிறார். இன்னொருவர் வாக்கிங் போகிறார். ஒருவர் யோகாசனம் செய்கிறார். ஒரு பெண்மணி துணி காயப் போடுகிறார். சிலர் பட்டம் விடுகிறார்கள்.

வானம் ஒரு பெரிய போதிமரம்போல் தெரிகிறது. திறந்தவெளியைப் பார்க்கும்போது மனத்தில் பெரிய சந்தோஷம் பிறக்கிறது. இவையெல்லாம் நம்மிடம்தான் இருந்திருக்கின்றன. நாம்தான் கவனிக்கத் தவறியிருக்கிறோம்.

வீட்டை மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டிய கடமை பெண்களுடையது மட்டுமே என நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். அந்த எண்ணம் தவறு என்று ஆண்களுக்கு இந்த லாக்டௌன் புரியவைத்திருக்கும். இந்தக் கருத்து ஆண்களைவிட, பெண்களிடமே அதிகம் வேரோடியிருக்கிறது. வீட்டை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு ஆண்களுக்கும் இருக்கிறது.

உண்மையில், ஆண்கள் வீட்டுக்குப் போனதும் வண்டியை நிறுத்திவிட்டு, பேன்ட், ஷர்ட்டை மாற்றிக்கொண்டு லுங்கியுடன் சாப்பிட உட்கார்ந்துவிடுகிறோம். டி.வி பார்க்கிறோம். புத்தகம் படிக்கிறோம். தூங்கச் செல்கிறோம். இப்படித்தான் நம்முடைய நாள்கள் நகர்ந்திருக்கின்றன. ஆனால் குடும்ப நிர்வாகம், குடும்பப் பராமரிப்பு ஆகிய பெரிய பொறுப்புகளை போகிறபோக்கில் பெண்கள் செய்துவருவதை இந்த லாக்டௌன் நம்மை கவனிக்க வைத்திருக்கிறது.

வீட்டுக்கு வெளியில்தான் உலகம் என்று ஆண்கள் சுற்றி வந்து கொண்டிருந்த நேரத்தில், வீட்டுக்குள்ளேயே உலகம் இருப்பதை அறிய வைத்திருக்கிறது லாக்டௌன்.

'மோஸ்ட் ரொமான்டிக் ப்ளேஸ் இன் அவர் ஹோம் இஸ் கிச்சன்!' என்று மேடைகளில் அடிக்கடி சொல்வேன். கணவன், மனைவியின் அன்பு பெருகுவதற்கு சமையலறையில், மனைவிக்கு கணவன் செய்யும் உதவிகள் பெரிய காரணமாக அமையும். ஹோட்டல்களின் கதவுகள் சாத்தப்பட்டிருப்பதால், வீட்டில் பலகாரம் செய்து சாப்பிடும் பழக்கம் மீண்டும் வந்திருக்கிறது. கிச்சனில் மனைவியுடன் சேர்ந்து சின்னச்சின்ன வேலைகளைச் செய்கிறேன். நான், மனைவி, மகள், என் அம்மா, மாமியார் என கூட்டுக் குடும்பமாக இருப்பதால், பழைய கிராமத்துச் சமையலை அவ்வப்போது செய்கிறோம்.

லாக்டௌன் நீட்டிக்கப்பட்டதை என் அம்மாவிடம் கூறினேன். '14 நாள்னா என்ன, 24 நாள்னா என்ன, பொண்ணுங்களுக்கு எல்லா நாளும் லாக்டௌன்தான்' என்று சாதாரணமாகச் சொல்லிக் கடந்தார்கள். என்னைப்போலவே, உங்களின் அம்மா, மனைவி, பிள்ளைகள், சகோதரி எல்லோரையும் நீங்களும் உற்று கவனிக்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்துள்ளது.

நான்கு சுவர்களுக்குள் ஒரு குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் ரகசியம் பெண்களுக்குத்தான் தெரியும். பெண்களை நாம் உற்று கவனித்தால், இந்த ரகசியமும் அதிலுள்ள சாமர்த்தியமும் நமக்கு புலப்படும். நமக்கும் அது கைவரப்பெறும். செய்வோமா?!

என் வீட்டுச் சமையலறையில் கரண்டி உத்தியோகம் எனக்குக் கிடைத்தால், அடிக்கடி நான் செய்வது புதுக்கோட்டை முட்டை மாஸ்... 'முட்டை மசால்' என்பதைத்தான், எங்கள் பகுதியில் அப்படிச் சொல்லுவார்கள். புதுக்கோட்டைப் பகுதியில் முட்டை மசால் ரொம்ப ஃபேமஸ்.

நான்கு வேகவைத்த முட்டைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் ஒவ்வொரு முட்டையையும் நான்கு நான்கு துண்டுகளாக கட் பண்ணி வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக்கொண்டு, வெட்டிவைத்த தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு வதக்கிக்கொள்ள வேண்டும். நன்றாக வதங்கியதும், இரண்டு கரண்டி அளவு அன்றைக்கு வைத்த குழம்பு அல்லது கறிக்குழம்பு ஏதேனும் ஒன்றை ஊற்றி, லேசாக சூடு செய்ய வேண்டும். சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி அதில் வெட்டிவைத்த முட்டைத் துண்டுகளைப் போட்டு இறக்கினால், முட்டை மாஸ் ரெடி. என் மகளுக்கு மிகவும் பிடித்த உணவு. சாப்பாடு, டிபன் இரண்டுக்கும் மேட்சாகக்கூடிய சைடு டிஷ் இது.

சமையல் வேலைகளைக் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து செய்யும்போது, அதில் ஒரு மகிழ்வான பகிர்வு இருக்கும். தம்பதிக்கு இடையிலான உறவு, சமையல் அறையில் உதவும்போது இன்னும் கூடுதலாகும் என்பது என் அனுபவம். சமையல் அறைக்கு அருகிலேயே டைனிங் டேபிளும் இருந்ததன் காரணம் அதுதான். சுடச்சுட தோசையும் மிளகாய்ச் சட்டினியும் சேர்த்து சாப்பிடும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான்.

உணவின் வழியாக ஓர் ஆணின் இதயத்தை ஒரு பெண்ணால் தொட முடியும் என்று சொல்லுவார்கள். அந்த வாய்ப்பு இப்போது கணவர்களுக்குக் கிடைத்திருக்கிறது!

ஹேப்பி லாக்டௌன்!

1 comment:

  1. இன்னும் மேலதிகமாக பயனுள்ள நூல்களையும் வாசிக்கலாம். முக்கியமாக மத நூல்கள். குறிப்பாக புனித அல் குர்ஆன். கட்டாயம் உங்களுக்கு பிரயோசனம் அளிக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.