Header Ads



கொரோனா அச்சத்தால் வயோதிப பெண்ணை ஏற்கமறுத்த உறவினர்கள், வறிய குடும்பத்தின் மனிதாபிமான செயல்


கொரோனா தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 74 வயதான வயோதிப பெண்ணை பொறுப்பேற்க அவரின் உறவினர்கள் மறுத்து விட்ட நிலையில், மிகவும் வறிய குடும்பம் ஒன்று அந்த பெண்ணை பொறுப்பேற்றுள்ளதாக வலல்லாவிட பிரதேச செயலாளர் எம்.ரஞ்சித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.

மீகஹாதென்ன பொலிஸ் பிரிவில் லிஹினியாவ குமாரகந்த என்ற முகவரியை சேர்ந்த ஆர்.ஏ.எமலின் என்ற இந்த வயோதிப பெண், கடந்த வாரம் கொரோனா தொற்று பரவியதாக கூறப்பட்ட இரண்டு இடங்களில் தாங்கியிருந்த காரணத்தினால், அந்த பெண்மணியை 21 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்குமாறு சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்திருந்தனர்.

இருமல், தடிமன், காரணமாக அண்மையில் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த பெண்மணிக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டதுடன் அவருக்கு கோவிட் - 19 என்ற கொரோனா வைரஸ் தொற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்த பெண்மணி சிகிச்சை பெற்ற வைத்தியசாலை விடுதியில் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் கண்டறியப்பட்டமை காரணமாக பெண்மணியை ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்துள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண்மணியை ஹோமாகமை தனிமைப்படுத்தல் நிலையத்தில் அதிகாரிகள் கொண்டு சேர்த்துள்ளனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா தொற்றவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

எனினும் அங்கு கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டதால், அதிகாரிகள் மேலும் 21 நாட்களுக்கு பெண்மணியை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

திருமணமாகாத இந்த வயோதிப பெண்மணியை அவரது சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோர் ஏற்க மறுத்துள்ளதுடன் அதே பிரதேசத்தை சேர்ந்த வறிய குடும்பம் அந்த பெண்ணை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளது.

இது மனிதாபிமானம் மற்றும் மனிதாபிமானமற்ற நிலைமையை எடுத்துக்காட்டிய சம்பவம் என சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும் பெண்மணியை ஏற்றுக்கொண்ட வறிய குடும்பத்தினர் வசிக்கும் வீட்டில் பெண்மணியை தனிமைப்படுத்த வசதி இல்லை என்பதால், அதிகாரிகள் லிஹினியாவ மொரகல என்ற பிரதேசத்தில் உள்ள சமூக நிலையம் ஒன்றில் அவரை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.