Header Ads



வெளிவிவகார அமைச்சுக்கு ஹக்கீம் கடிதம்

கொவிட் 19 நோய் நிலமையினால் ஏற்பட்டுள்ள சர்வதேச பயணத்தடை மற்றும் முடக்கம் காரணமாக பல வாரங்களாக தமிழ் நாட்டு சென்னையில் சிக்குண்டிருக்கும் 160 இலங்கையர்களை அவசரமாக நாட்டிற்கு அழைத்துவருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வெளிநாட்டு அமைச்சை கடிதம் மூலம் கேட்டுள்ளார்.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்கவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எழுதியுள்ள கடிதத்தில், நாடு திரும்ப முடியாமல் அங்கு சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் (சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள்) மன உளைச்சலுக்கும் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்துவருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அண்மையில் மேற்கொண்டிருந்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், சென்னையிலிருந்து வரமுடியாமல் தவிக்கும் இலங்கையர்களை அவ்வாறே அழைத்துவர விசேட விமானப் பயண ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோரியுள்ளார்.

அவ்வாறு அழைத்துவரும்போது, தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைகளையும் உரிய அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளுமாறும் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு திரும்ப வழியின்றி சென்னையில் இருக்கும் 160 இலங்கையர்களின் பெயர்கள் மற்றும் கடவுச் சீட்டு இலக்கங்கள் என்பவற்றையும் இக்கடிதத்துடன் அவர் இணைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.