Header Ads



தேர்தலை விட மக்களின் உயிர்களே முக்கியம், திகதியை நிர்ணயித்தமை குறித்து கண்டனத்தை வெளிப்படுத்துகிறோம்

 (நா.தனுஜா)

தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் தேர்தல் திகதியை நிர்ணயித்தமை குறித்து கண்டனம் வெளியிட்டிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இறுதி நோயாளரும் குணமடைந்து விட்டமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

இதுகுறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இவ்வருடம் செப்டெம்பர் மாதம் வரையில் செயற்படக்கூடிய பாராளுமன்றத்தைக் கலைத்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தேர்தலை நடாத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது.

ஆனால் அது கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் சாத்தியமற்றது என்பதை நன்கறிந்திருந்தும் கூட வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கை இடம்பெற்றது. நிலைமை தீவிரமடைந்து நாடு முழுவதும் ஊரடங்கை அமுல்படுத்த வேண்டிய நிலையிலும் கூட அரசாங்கம் தேர்தல் கனவிலேயே இருந்தது.

எனினும் தற்போது தேர்தலைப் பிற்போடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்திருக்கும் தீர்மானத்தையும், தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் ஊடாக உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கோருவதற்கு முற்பட்டமையையும் வரவேற்கின்றோம்.

தேர்தலை விடவும் மக்களின் உயிர்களே முக்கியமானது என்பதே எப்போதும் எமது நிலைப்பாடாகும். அந்தவகையில் ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கி முன்பாக தேர்தலை நடாத்தக்கூடாது என்று நாங்கள் முன்வைத்த கோரிக்கையை செவிமடுத்தமைக்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இறுதி நோயாளரும் குணமடைந்து விட்டமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட வேண்டும். 

தேர்தலுக்கு முன்னர் பிரசார நடவடிக்கைகளுக்காக வேட்பாரளர்களுக்குக் குறைந்தபட்சம் 5 வாரகாலத்தையேனும் வழங்குவது அவசியமாகும். அவ்வாறிருக்க இந்த அசாதாரண சூழ்நிலையில் தேர்தல் திகதியை நிர்ணயித்தமை குறித்து எமது கண்டனத்தை வெளிப்படுத்துகிறோம்

No comments

Powered by Blogger.