April 13, 2020

கொரோனாவை வீழ்த்தும் கேரளாவும், பினராயி விஜயனும் - எப்படி நிகழந்தது அதிசயம்??

பொதுச் சேவைகளிலும் நிர்வாகத்திலும் சிறப்பான செயல்பாடுகளை ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து தற்போதுவரை அதாவது தொற்றுநோய் ஏற்பட்டுள்ள போதும் கூட திறம்படச் செய்துவருகிறது கேரள அரசு. இந்தியாவிலேயே இடதுசாரிகள் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கேரளாவில் ஆளும் அரசு சூப்பர் ஹீரோ அரசாக எல்லாவிதமான பிரச்னைகளையும் களத்தில் நின்று சமாளிக்கிறது.

முக்கியமாக பெருவெள்ளம் மற்றும் பேரழிவுகளுடன் நிஃபா வைரஸையும் சமாளித்த கேரளம் கொரோனாவை வென்று வருகிறது. நெருக்கடியான காலகட்டத்தை கையாள்வதில் முதல்வர் பினராயி விஜயனின் அனுபவத்தையும், அரசின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் எல்லாக் காலகட்டத்திலும் பார்க்க முடிகிறது. இதன் மூலம் பினராயி விஜயன் மற்ற முதலமைச்சர்களிலிருந்து பொதுமக்களுடனான நேரடித் தொடர்பில் தனித்து விளங்குகிறார்.

கேரளா கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளது என்று தேசிய ஊடகங்கள் கூறுகின்றன. நாட்டின் முதல் கொரோனா பாசிட்டிவ் அறிவிப்பு ஜனவரி 30 அன்று கேரளத்தில் தெரிவிக்கப்பட்டது. பிப்ரவரி தொடக்கத்தில் மேலும் 2 நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அதன்பிறகு புதிய நோயாளிகள் மார்ச் மாதத்தில் வரத் தொடங்கினர்.

மார்ச் 20 அன்று மட்டும் 28 ஆக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆனது. மார்ச் 21ல் இந்த எண்ணிக்கை 50ஐ கடந்தது. மார்ச் 24-ல் 100, 27-ல் 150, 29-ல் 200 என அதிகரித்து ஏப்ரல் 4ம் தேதி 300-ஐ தொட்டது. பெரும்பாலான நாட்களில் தினமும் 15 முதல் 40 என்கிற விகிதாச்சாரத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்த பெரும் பாதிப்புகளில் இருந்து ஏப்ரல் தொடக்கத்திலேயே நிலைமையில் மாற்றம் ஏற்படத் துவங்கியது. 70க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். கடந்த 5 நாட்களாக புதிய நோயாளிகள் 2 முதல் 4 சதவிகிதமாக குறைந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை புதிய நோயாளிகள் அளவுக்கோ அல்லது அதைவிட அதிகமாகவோ உள்ளது.

குறிப்பாக, செவ்வாயன்று 9 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டபோது, அன்றைய தினம் 12 பேர் நோயிலிருந்து விடுபட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இதே மார்ச் 30ம் தேதி நிலவரப்படி, நாட்டிலேயே அதிக நோயாளிகள் கேரளத்தில் இருந்தனர். மார்ச் 31 ம் தேதி மகாராஷ்டிராவில் இருந்து அதிக நோயாளிகள் பதிவாகினர். பின்னர், தமிழகம், டெல்லி, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் கேரளாவை முந்தின. ஆந்திரா, ராஜஸ்தான் மற்றும் உ.பி. மாநிலங்கள் நோயாளிகளின் எண்ணிக்கையில் கேரளா அளவுக்கு உயர்ந்தன.

இந்தச் சூழலில், சென்ற வாரத்தோடு ஒப்பிடும்போது தொற்று 30 சதவீதம் குறைந்தது மட்டுமல்ல; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 சதவீதமாக உள்ளது. கேரளாவில் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மற்றும் இத்தாலி நாட்டு குடிமக்கள் கூட குணமடைந்துள்ளனர். 75 வயதுக்கு மேலே உள்ள 6 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் இதுவரை 3பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இது இந்தியாவிலேயே மிக அதிகம். அதாவது அதிதீவிர முயற்சியால் உயிரிழப்பும் பாதிப்பும், பரவலும் குறைந்துள்ளது. இது மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் ஆகச்சிறந்த முன்னேற்றம்.

இந்த முன்னேற்றத்தை ஆராய்ந்து கேரள அரசின் செயல்பாடுகளை உலகப் புகழ் பெற்ற பத்திரிகையான ‘வாஷிங்டன் போஸ்ட்’ பாராட்டியுள்ளது. கேரளாவின் பணிகள் இந்திய அரசாங்கத்திற்கே கூட முன்மாதிரியாக உள்ளது என வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், இடதுசாரிகள் மீது எப்போதும் வெறுப்பை உமிழும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் கூட கேரள அரசின் செயல்பாடுகள் பற்றியும், பினராயி விஜயனின் துவளாத உறுதியையும் புகழ்பாடி வருகின்றனர்.

அதேவேளையில் இத்தகைய பாராட்டுகளைப் பெறுவதற்கு கேரளா அரசு எடுத்த முயற்சி என்பது சாதாரணமானது அல்ல; இது எப்படி சாத்தியமாயிற்று என இயல்பாக எழும் கேள்விக்கான பதில் இங்கே இருக்கிறது.

- பரிசோதனை
- தனிமைப்படுத்துதல்
- கண்டறிதல்
- மன நல ஆலோசனை

கேரள அரசு கொரோனா தொற்று துவங்கிய காலத்திலேயே, மிகத் தீவிரமான அதிக அளவிலான பரிசோதனைகளை மேற்கொண்டது. அதன்பிறகு தொற்று உள்ளவர்களை கண்டுபிடித்து நீண்ட நாட்களுக்கு தனிமைப்படுத்துதல், அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களை தீவிரமாக தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கும் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் நடவடிக்கையை எடுத்தனர்.

குறிப்பாக தொற்று உள்ளவர்களுக்கும் குணமடைந்தவர்களுக்கும் அடிக்கடி மன நல ஆலோசனைகள் அளிக்கப்பட்டன. இவ்வாறான மன நல ஆலோசனை அளிக்கும் பணிகளில் மட்டும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் 30,000க்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களைப் பணியில் அமர்த்தி அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனால் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் சிறு சுணக்கமின்றி தங்கள் பணியை செய்துள்ளனர். இதனால் தாங்கள் வகுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைக் கண்டுள்ளது கேரள அரசு.

ஆபத்து குறித்த அம்சங்களை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவித்தது கேரள அரசு. இது அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்கியது. மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களையும் ஈடுபடுத்தியது.

சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியான தகவலின்படி, கேரளாவிற்கு ஒரு ஆண்டிற்கு பத்து லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கேரள மக்கள் தொகையில் சுமார் 67 லட்சம் பேர் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். மேலும் கேரளாவிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சீனாவில் கல்வி பயில்கின்றனர்.

இந்த பிரிவினரில் எவர் வேண்டுமானாலும் வைரஸை கேரளாவிற்குள் கொண்டுவரும் அபாயம் இருந்தது. அதுதான் நடக்கவும் செய்தது. சீனாவில் தொற்று பரவும் செய்தி வந்த உடனேயே அங்கிருந்து கேரளாவுக்கு திரும்பும் அனைத்து மாணவர்களும் வளைகுடா நாடுகளிலிருந்து வருவோரும் கட்டாய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்திய அரசாங்கம் அறிவிப்பதற்கு முன்பாகவே இந்த நடவடிக்கைகளை கேரள அரசாங்கம் எடுத்தது. அப்படித்தான் ஜனவரி 30 அன்றே சீனாவிலிருந்து வந்த மாணவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் அனைத்து நடவடிக்கைகளும் மிக வேகமாக எடுக்கப்பட்டன.

கேரளா அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருந்தபோது கொரோனா பற்றி மோடி அரசாங்கம் சிந்திக்கக் கூட தயாராக இல்லை. குறிப்பாக மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு அராஜகத்தை அரங்கேற்றியது பா.ஜ.க. அதேபோல் அண்டை மாநில அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து தெரிந்தும் கண்டும் காணாமல் மோடியின் கட்டளைக்காக காத்துக் கிடந்தார் தமிழக முதல்வர்.

குறிப்பாக நாடாளுமன்றத்திலும், தமிழகத்தின் சட்டமன்றத்திலும் மோடி - எடப்பாடி அரசுகள் தீவிர சோதனைகள் தேவை இல்லை எனக் கூறிக்கொண்டிருந்தபோது கேரளா அவற்றை வேகமாக அமலாக்கி கொண்டிருந்தது. கொரோனா பரிசோதனைக் கருவிகளை ஆர்டர் செய்தும் கைக்கு வராத நிலையில் தமிழகம் இருக்க, அதனைத் தட்டிப்பறிக்க மத்திய அரசு துடிக்கும் வேளையில் கேரளா முதன் முதலில் ‘ரேபிட் டெஸ்ட்’ எனப்படும் அதிவிரைவு சோதனைகளை வாங்கி பணிகளைத் தொடங்கியது.

கிருமி நாசினி சுரங்கத்தை ஐ.நாவே அறிவுறுத்தாதபோது தமிழகத்தில் அமைத்ததாக மார்த்தட்டினார் முதல்வர் எடப்பாடி. ஆனால் முன்பே பொதுமக்களுக்கு பயன்தரும் என்று முதன் முதலில் “பரிசோதனை கியோஸ்க்” எனப்படும் யார் வேண்டுமானாலும் தானாக முன் வந்து பரிசோதனை செய்து கொள்ளும் பூத்களை மாவட்டம்தோறும் உருவாக்கினார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அதே போல கேரளாதான் முதன்முதலில் பிளாஸ்மா சிகிச்சையையும் அமலாக்க அனுமதி பெற்றுள்ளது.

இது அனைத்துக்கும் மேலாக, முதன் முதலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் மக்களுக்கு பொருளாதார திட்டங்களையும் அறிவித்த முதல் மாநிலம் கேரளம்தான். சுமார் 20,000 கோடி ரூபாய் பெறுமான பொருளாதார உதவிகளை இந்திய அரசாங்கம் ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பே கேரளம் அறிவித்தது.

ஊரடங்கிற்கு பிறகு மற்ற மாநிலங்கள் நிதி ஆதாரங்கள் பற்றி திட்டமிடத் திணறியபொழுது கேரளா அரசாங்கத்தின் வேகமான அறிவிப்பும் அமலாக்கமும் மக்களுக்கு ஊரடங்கை பின்பற்ற நம்பிக்கையையும் விருப்பத்தையும் தோற்றுவித்தது.

திட்டமிட்டபடி, மக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்க வீடுகளுக்கே அரிசி, பருப்பு உட்பட அனைத்து பொருட்களும் அனுப்பப்பட்டன. வீடுகளில் பொருட்களைத் தருவதற்கு தனியாக இரண்டு லட்சம் பேர் கொண்ட தன்னார்வலர் படை உருவாக்கப்பட்டது. ஓய்வூதியம் உட்பட அனைத்து பலன்களும் இரண்டு மாதங்களுக்கு சேர்த்து தரப்பட்டது. அங்கன்வாடி குழுந்தைகளுக்கு கூட உணவு வீடுகளுக்கு அனுப்பப்பட்டது.

வீடுகளில் உள்ளவர்களுக்கு இணையத்தின் தேவையை உணர்ந்து அனைத்து நிறுவனங்களிடம் பேசி அதிகப்படியான டேட்டா பெறுவதை உத்தரவாதம் செய்தது. இந்தியாவிலேயே மிக அதிகமாக சுமார் 68% நிவாரண முகாம்களை அமைத்தது. மக்களுக்காக சமூக சமையல் கூடங்களை உருவாக்கியது.

இவ்வளவு பணிகளை மேற்கொள்ளும் அரசை எதிர்க்கட்சிகள் கூட குறைசொல்லாமல் சேர்ந்து பணியாற்றுகின்றனர். மக்களும் அரசின் பின்னால் நிற்பதால், கேரள அரசின் செயல்பாடு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

3 கருத்துரைகள்:

LAAL SALAAM OUR DEAREST CM PINAROY VIJAYAN.

I hope the CM to be the next successful PM of India...

Post a comment