Header Ads



எவரும் சண்டித்தனம் காட்டி, பாராளுமன்றத்தை கூட்ட முடியாது - அரசாங்கம்.

(ஆர்.யசி)

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டும், எந்தவொரு தீர்மானத்திற்கும் தாம் இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அமைச்சரவையில் அறிவித்துள்ளார்.

அதற்கமைய எவரும் சண்டித்தனம் காட்டியோ ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தோ பழைய பாராளுமன்றத்தை கூட்டவும் முடியாது என்கிறது அரசாங்கம்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வேளையில், அரசியல் அமைப்பு நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றம் மூலமாக ஒதுக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை நிதி ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்ற நிலையில் அரசாங்கம் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டி தீர்மானம் எதனையும் முன்னெடுக்கவுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு பதில் தெரிவித்த அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகையில்,

இப்போது எழுந்துள்ள இந்த கேள்வியானது எவரேனும் ஒரு சிலரது தேவைக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் முட்டாள் தனமான பிரசாரமாகவே நாம் கருதுகின்றோம். நாட்டின் நிதி குறித்த முழுமையான அதிகாரமும் அரசியல் அமைப்பின் 148 ஆம் சரத்துக்கு அமைய பாராளுமன்றம் வசமே உள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர்  எக்காரணம் கொண்டும் ஜனாதிபதி தவிர்ந்து எவராலும் பாராளுமன்றத்தை கூட்ட முடியாது. ஜனாதிபதியினால் கூட்டப்படும் பாராளுமன்றமும் அவரசகால சட்டமொன்றை ஆராயவோ அல்லது நிறைவேற்றவோ மட்டுமே முடியும். வேறு எந்த காரணம் கொண்டும், விவாதம் நடத்தவோ அல்லது வேறு எதற்காகவும் பாராளுமன்றத்தை கூட்டவோ சட்டத்தில் இடம் இல்லை.

அதேபோல் ஜனாதிபதிக்கு அனாவசியமாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியமும் இல்லை என்பதை அமைச்சரவையில் அறிவித்துள்ளார். நாட்டு மக்கள் மத்தியிலும் அவர் அதனை எடுத்துரைத்துள்ளார். பெரும்பான்மை மக்களின் வாக்குகளில் ஜனநாயக முறைப்படி தெரிவாகியுள்ள ஜனாதிபதிக்கு பொதுமக்கள் முழுமையான அதிகாரத்தை கொடுத்துள்ளனர். ஆகவே அரசியல் அமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தின் நான்கரை ஆண்டுகள் கடந்தவுடன் மிக நேர்த்தியாக சட்ட முறைமைகளை கையாண்டு பாராளுமன்றத்தை கலைத்துள்ளார். அவ்வாறு இருக்கையில் எவரும் சண்டித்தனம் காட்டியோ ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தோ பாராளுமன்றத்தை கூட்டவும் முடியாது. அதேபோல் அரசியல் அமைப்பின் பிரகாரமே பாராளுமன்றம் கூடிய பின்னர் மூன்று மாதகாலத்திற்கு நிதி அதிகாரங்களை கையாள முழுமையான அதிகாரம் உள்ளது. ஜனாதிபதியும் சட்டவல்லுனர்கள் அனைவரிடமும் ஆலோசனை பெற்று அவர்கள் வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்றி செயற்பட்டுள்ளார்.

அதேபோல் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானம் எடுக்கும் முழுமையான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளது. அரசியல் அமைப்பின் பிரகாரம் அவர்களே தீர்மானம் எடுக்க வேண்டும். அதில் அரசாங்கம் தலையிடாது. நாட்டின் நிலைமைகளை கருத்தில் கொண்டு அவர்கள் தீர்மானம் எடுப்பார்கள் என்றார். 

1 comment:

  1. இவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அதில் சட்டம் பேசவோ, விவாதிக்கவோ பொதுமக்களுக்கு அதிகாரம் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.