Header Ads



"நான் முகக்கவசம் அணியமாட்டேன்" - டிரம்ப்

முகக்கவசம் அணிய வேண்டும் என்று புதிய மருத்துவ வழிகாட்டுதல் பரிந்துரைத்தாலும், நான் முகக்கவசம் அணிய மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது அலுவலகத்தில் "அதிபர்கள், பிரதமர்கள், சர்வாதிகாரிகள், இளவரசர்கள், இளவரசிகள்" என யாரேனும் வருகைத்தரும்போது தன்னால் முகக்கவசத்தை அணிந்துகொண்டு அவர்களை வரவேற்க முடியாது என்று அவர் கூறினார்.

துணியால் ஆன முகக்கவசத்தை பொதுவெளியில் செல்லும்போது மக்கள் அணியலாம் என்று அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தி இருந்தது.

"நீங்களும் அணிய வேண்டும் என்று அவசியமில்லை. நான் அணிய மாட்டேன் என்று நினைக்கிறேன்" என டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவில் 2,70,473 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 7000 பேர் இந்த தொற்றால் உயிரிழந்ததைத் தொடர்ந்தே, முகக்கவசம் அணிய மக்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

அதுவரை, உடல்நலம் சரியில்லாதவர்கள் மற்றும் கொரோனா தொற்று இருப்பவர்களைப் பார்த்துக் கொள்பவர்கள் மட்டுமே அணிய வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், கவனக்குறைவான வைரஸ் பரிமாற்றத்தைத் தடுக்க ஒருவர் முகக்கவசம் அணிவது முக்கியம் என்று புதிய ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.

"கொரோனா தொற்று இருந்தும் அதன் அறிகுறிகள் தென்படாமல் இருக்கும் நபர்கள், இந்த வைரஸை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன" என டிரம்ப் கூறினார்.

எனினும் தான் முகக்கவசம் அணியப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்கர்கள். சுத்தமான துணி அல்லது துணியால் ஆன முகக்கவசம் அணிய பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள். என்95 ரக முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால். அவை சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தக் கிடைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதிபர் கூறியது என்ன?

கொரோனா வைரஸ் தொற்று குறித்து தினமும் செய்தியாளர்களை சந்திக்கும் அதிபர் டிரம்ப், முகக்கவசம் அணிவது மக்களின் விருப்பத்திற்குரியது என அழுத்தமாகத் தெரிவித்தார்.

"உங்களுக்கு வேண்டாம் என்றால் நீங்கள் முகக்கவசம் அணிய வேண்டாம். நான் அணியப் போவதில்லை. ஆனால், சிலர் அணிய வேண்டும் என்று நினைப்பார்கள். அது பரவாயில்லை" என்று அவர் கூறினார்.

ஏன் முகக்கவசம் அணியப் போவதில்லை என்று கேட்டதற்குப் பதிலளித்த டிரம்ப், என் அலுவலகத்தில் உள்ள அழகான சிறந்த மேஜையில் அதனை அணிந்து உட்கார எனக்கு விருப்பமில்லை என்று கூறினார்.

"எதிர்காலத்தில் என் மனதை மாற்றிக் கொள்ளலாம். தெரியாது" என்றார் அவர்.

முகக்கவசம் அணிய விருப்பமில்லாத அதிபர்

தாரா மெக்கெல்வி

பிபிசி வெள்ளை மாளிகை செய்தியாளர்

அதிபர் ஏன் முகக்கவசம் அணிய மாட்டேன் என்கிறார்?

அது எனக்கு தெரிய வேண்டும். குறிப்பாக மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை கழுவ வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் புதிய வழிமுறைகளை வகுத்துள்ளது.

இருப்பினும் அதிபர் தான் முகக்கவசம் அணிய மாட்டேன் என்று கூறியிருக்கிறார். தனது அலுவலகத்தில் அதனை போட்டுக் கொண்டு அமர்வது சரியாக இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்

எனினும் எனக்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை என்று தோன்றியது. அதனால் நான் மீண்டும் அழுத்தமாக கேள்வி கேட்டேன். என்ன காரணம் என்று விளக்குமாறு கூறினேன்.

அதற்கு புன்னகைத்த அவர், "எனக்கு இப்போதுதான் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. எனக்கு வைரஸ் இல்லை. அதனால் யாருக்கும் இத்தொற்றை பரப்புவது குறித்து நான் கவலைப்பட தேவையில்லை" என்று டிரம்ப் கூறினார்.

அவருக்கு பிரச்சனை தீர்ந்துவிட்டது. ஆனால், பலரும் அபாயகர நிலையில் இருக்கிறார்கள்.

No comments

Powered by Blogger.